2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அரசியல்

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது இன்னும் இழுபறியாகவே நீண்டு கொண்டிருக்கின்றது. வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமென்ற இலட்சக்கணக்கான மக்களின் மூன்று தசாப்தகாலக் கனவு இன்னும் வெறுங் கனவானவே இருக்கின்றது. அங்கு சென்று குடியேறிய சிறிதளவான முஸ்லிம்களும் தம்முடைய தாய் மண்ணில் அகதிகள் போலவே, அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள், இவர்களை மீள்குடியேற்றுவதற்குக் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதைவிடுத்து பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கண்ணீரில் அரசியல் செய்து கொண்டிருப்பதை நன்றாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

யாழ். குடாநாட்டில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 'ஒரு முஸ்லிம் நபர் அரச படைகளுக்கு புலிகளைக் காட்டிக் கொடுத்தார்' என்று கூறியே புலிகள், எல்லா முஸ்லிம்களையும் அங்கிருந்து வெளியேற்றினர். இந்த வரலாற்றுத் துயர் இடம்பெற்று 25 வருடங்கள் நிறைவடைந்து விட்ட பின்னரே, இவர்களது மீள் குடியேற்றம் தொடர்பான கருத்தாடல்கள் கடுமையாகச் சூடுபிடித்துள்ளன.

இது ஓர் 'இனச் சுத்திகரிப்பு' என்று ஒரு தரப்பும், இல்லையில்லை 'இது இனச் சுத்திகரிப்பு அல்ல' என்று இன்னும் சிலரும் வாதப் பிரதிவாதங்களை அண்மைக்காலத்தில் நடத்திக் கொண்டிருந்தனர். புலிகள், முஸ்லிம்கள் எல்லோரையும் இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்கில் வெளியேற்றினார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும் முஸ்லிம்கள் அதை 'இனச் சுத்திகரிப்பு' என்றே கருதுகின்றனர். அதாவது, எந்தவொரு சம்பவத்தாலும் பாதிக்கப்படும் மக்கள் அதை எப்படி உணர்கின்றார்களோ அவ்வாறே அதற்குப் பெயர் வைப்பதை வரலாற்றில் காண்கின்றோம். தமிழர்களின் 'விடுதலைப் போராட்டம்' சிங்கள ஆட்சியாளர்களுக்கு 'பயங்கரவாதமாக' தெரிந்தது. அதேபோல் அரசாங்கத்தின் 'மனிதாபிமான யுத்தத்தை' தமிழர்கள் 'இனப் படுகொலையாக' உணர்கின்றனர். முஸ்லிம்களின் வெளியேற்றமும் அப்படித்தான் - இருபக்கத்திலும் வேறுவேறு கோணங்களில் நோக்கப்படுகின்றது.

இந்தக் கருத்து மோதல்களை சர்வதேசம் வெகுவாக அவதானித்திருக்கின்றது என்பதை, அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரின் உரையில் இருந்து அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து விளையாடி குதூகலித்த சமந்தா பவர் அங்கு உரையாற்றுகையில், 'இலங்கையின் அரசியல் தளத்தில் இனச் சுத்திகரிப்பு என்ற வார்த்தை புழக்கத்துக்கு வருவதற்கு முன்னமே முஸ்லிம்கள் அதை அனுபவித்து விட்டார்கள்' என்று சொன்னார். இராஜதந்திரிக்கான நுட்பத்தோடு மிக சூசகமான முறையில் மறைமுகமாக பவர் எதைக் கூறியிருக்கின்றார் என்பது நன்றாக விளங்குகின்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகப் பிரேரணை நிறைவேற்றுவதில் முன்னின்ற அமெரிக்காதான், வடபுல முஸ்லிம்கள் தொடர்பான இக்கருத்தையும் சொல்லியிருக்கின்றது. எனவே, பிரேரணையை ஏற்றுக் கொள்பவர்கள், சமந்தா பவரின் கருத்தைப் புறந்தள்ள முடியாது. ஆனால், இங்கு முக்கியமானது, கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு தற்போதிருக்கின்ற இடைவெளியை மேலும் அகலமாக்குவதல்ல. இது இனச் சுத்திகரிப்பா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்துவதல்ல. மாறாக, வடக்கில் இருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்து, இப்போது பல இலட்சமாக பெருகிவிட்ட குடாநாட்டு முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதே அவசியமானது. இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக உள்ளன. அதைவிட அதிகமாக அரசியல் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் சாமான்ய தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது புலிகள் செய்த தவறு. அவர்களுடைய போராட்டத்தில் பதிந்த பெரிய கறை. ஆனால், இன்று முஸ்லிம்களுக்காக பரிந்து பேசுகின்ற, அவர்களில் அனுதாபம் கொள்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வேளையிலும் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்ட வேறுபல சந்தர்ப்பங்களிலும் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை போன்ற சந்தர்ப்பங்களில், பல தமிழ் முற்போக்காளர்கள் அதனை எதிர்த்து அம்மக்களுக்காகக் குரல் கொடுத்தனர். அதனால் புலிகளின் கோபத்துக்கு உள்ளாகினர். ஆனால், கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளும் உயிர்ப் பயத்தில் எதுவும் பேசாமல் இருந்து விட்டனர் என்பதுதான் யதார்த்தம். இவ்வகையான இடைவெளிதான் இன்று வரைக்கும் தமிழ் - முஸ்லிம் மக்களின் அரசியல் ஒன்றிணைவுக்கு பெரிதும் தடையாக இருக்கின்றது என்றால் மிகையில்லை.

ஆனால், யுத்தம் முடிவடைந்த பிற்பாடு பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறையை வெளிக்காட்டி வருகின்றனர். இருப்பினும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஓரிரு தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களைக் காயப்படுத்தும் கருத்துக்களையே கூறி வருகின்றனர். சிலர், மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு மறைமுக முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிகின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதும் யாழ்ப்பாணம் என்பது தனியீழத்தின் சிறியதொரு அடையாளமாக இருக்கின்றது என்ற எண்ணம் ஒரு தொகுதி தமிழ் ஆளுமைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கலாம். இந்த நிலப்பரப்புக்குள் வேறு இனங்களை மீளக் குடியேற்றுவது என்பது, 'யாழ்ப்பாணமாவது தமிழர்களுக்கு இருக்கின்றதே' என்ற தனியுரிமை ஆறுதலை சிதைத்துவிடும் என்றும் அவர்கள் கருதலாம். ஆனால், நிதர்சனம் அதுவல்ல. யாழ்ப்பாணம் என்பது, இடம்பெயர் முஸ்லிம்களுக்கும் தாய்மண்ணே என்பதை நேரிய மனதுடன் தமிழ்த் தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும், வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் மிகப் பெரிய தவறைச் செய்தவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே. விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள் என்பது உண்மையே. பிராந்திய தமிழ் அரசியல்வாதிகள் தடைபோடுகின்றார்கள் என்பதும் உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் 'அவர்கள் தடுக்கின்றார்கள், இவர்கள் தடுக்கின்றார்கள்' என்று காரணம் சொல்கின்ற முஸ்லிம்களின் தேசியத் தலைமைகளும் பிராந்திய தளபதிகளும் அரசியல்வாதிகளும் இம் மக்களின் மீள் குடியேற்றத்துக்காக தொடர்ச்சியாக என்ன காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்கள்? என்று கேட்டால் தலையைக் கவிழ்த்துக் கொள்ள வேண்டிய நிலைமையே இன்னும் இருக்கின்றது.

இவ்வளவு காலமும் இப்பணியைச் செய்து முடிக்காமையாலேயே இன்று இத்தனை விமர்சனங்களையும் பிரச்சினைகளையும் முஸ்லிம் தரப்பு எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. தமது பதவிகளில், தமக்கு கிடைக்கின்ற அமைச்சுக்களில், தமது வங்கிக் கணக்குகளின் கனதியில், மாற்றுக் கட்சி முஸ்லிம் அரசியல்வாதியை பழிவாங்குவதில், சொத்துக்களை சேகரிப்பதில் காட்டிய அக்கறையை, வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெளிப்படுத்தி இருப்பார்களேயானால், நிலைமைகள் வேறுமாதிரி இருந்திருக்கும்.

ஏனென்றால், கடந்த 25 வருடங்களில் முன்வந்த 20 வருடங்களும் அப்பேற்பட்ட காலமாக இருந்தது. தமிழ் தலைமைகளுக்கு இருந்த அதே உயிர்ப்பயம் முஸ்லிம் தலைமைகளுக்கும் இருந்தது. இதனால் புலிகளை பகிரங்கமாக எதிர்க்க முடியாத நிலை காணப்பட்டது. மறுபுறத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லாக் காலத்திலும் அரசாங்கங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக அங்கம் வகித்தனர். ஆயினும் அவர்களால் மீள் குடியேற்றத்தை சாத்தியப்படுத்த முடியவில்லை. பதவி ஆசை கொண்டவர்களாகப் பெரும்பாலான முஸ்லிம் தலைமைகள் இருந்தமையால் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து, 'வாயை அடைத்துவிடும்' உத்தியை சிங்கள அரசாங்கங்கள் தொடர்ச்சியாக கையாண்டு வந்தன. இவை எல்லாவற்றையும் மீறி சில அமைச்சர்கள் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறை செலுத்தி வந்ததையும் மறுக்கவியலாது.

குறிப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதில் முக்கியமானவர். வடக்கில் இருந்து வெளியேறி அகதியாக வாழ்ந்த அனுபவத்தைக் கொண்ட இவர், தொடர்ந்தும் இம்மக்களின் மீள் குடியேற்றத்துக்காக குரல் கொடுத்து வருகின்றார். இதில் அவரது அரசியல் எதிர்காலம் மட்டுமன்றி சமூக அக்கறையும் கலந்திருப்பதை நன்றாக அவதானிக்க முடிகின்றது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர், வடக்கைச் சேர்ந்த அபூபக்கருக்கு அரசியல் அதிகாரம் வழங்கி, இவ்விடயத்தை கையாண்டது போல அதற்குப் பின்வந்த தலைவர் அவ்விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை. காலத்துக்கு காலமே இதுபற்றி பேசி வருகின்றார். எவ்வாறிருப்பினும்

ரிஷாட்டுக்கு அடுத்தபடியாக - வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் கவனம் செலுத்தும் அரசியல்வாதியாக மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமைக் குறிப்பிடலாம்.

ஆனால், அமைச்சர்களான ரிஷாட், ஹக்கீம் ஆகிய இரண்டு பேரையும் தவிர வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் அழுத்தம் கொடுப்பதாக தெரியவில்லை. முஸ்லிம்களை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கின்ற அதாவுல்லா, அமீர்அலி, பைசல் காசிம், ஹரீஸ், ஹூனைஸ் பாறுக், பௌஸி, பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி என நீண்டு செல்லும் பட்டியலில் உள்ளடங்கும் ஏனைய எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்விடயத்தை புதினம் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். வடக்கு மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்றால், அல்லது அதில் ஓர் அரசியல் இலாபம் தமக்குக் கிடைக்கும் என்றால், இப்போது புத்தளத்தில் ஒரு சிலரும், யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் வேறு சிலரும் கூடாரமடித்துத் தங்கியிருப்பார்கள்.

 ஆனால், அவ்வாறான ஒரு தேவைப்பாடு இல்லை என்பதாலோ என்னவோ - இதை ரிஷாட் பார்த்துக் கொள்ளட்டும் என்ற தோரணையில் இருக்கின்றனர். இது மிகமோசமான ஓர் அரசியல் என்பதை குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. இவர்கள் எல்லோரும் ஒருமித்து குரல் கொடுத்தால் நல்லாட்சி முடிவதற்கிடையில் எல்லா முஸ்லிம்களையும் மீள் குடியேற்றச் செய்யலாம். தற்போது கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற தகவல்களின் படி, சுமார் 600 முஸ்லிம் குடும்பங்கள் வடக்கில் மீளக் குடியமர்ந்துள்ளன. ஆனால் அவர்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்பது, யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இதேவேளை, இன்னும் பெருமளவான முஸ்லிம்கள் தமது பூர்வீகத்துக்குத் திரும்புவதற்கான ஏக்கத்துடன் புத்தளத்திலும் வேறுபல இடங்களிலும் வசிக்கின்றனர். அவர்களுள் சுமார் 2,250 குடும்பங்கள் மீள் குடியேற்றத்துக்காகப் பதிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இடம்பெயர்ந்த மொத்த முஸ்லிம் குடும்பங்களின் தொகை இதை விட அதிகமாக இருக்குமென்றாலும், அவர்கள் எல்லோரும் அரசப் பொறிமுறையூடாக பதிவு செய்து கொள்வது அவசியமாக இருக்கின்றது.

அதைவிடுத்து, எல்லோரையும் லொறிகளில் ஏற்றிச் சென்று மீள் குடியேற்றுவார்கள் என்று எண்ணிக் கொண்டு வாழாவிருக்க முடியாது.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் இவ்வளவு காலமும் இல்லாத அழுத்தம் இப்போது கொடுக்கப்படுகின்றது. இதைப் பார்த்து விட்டு சில தமிழ் பிற்போக்கு சக்திகள் முஸ்லிம் அரசியல்வாதிகளை விமர்சிக்கத் தலைப்படுகின்றன. இது அபத்தமானதாகும். முஸ்லிம்களை வெளியேற்றியது தமிழர்களுக்காகப் போராடிய இயக்கமாகும்.  இதுவரையும் அவர்களை மீளக் குடியேற்றச் செய்யாமை முஸ்லிம் அரசியல்வாதிகளின் கையாலாகத்தனம். அது முஸ்லிம் சமூகத்தின் உள்வீட்டுப் பிரச்சினை. அதை விமர்சிப்பதன் மூலம், மீள் குடியேற்றத்தை இன்னும் தாமதிக்கச் செய்யக் கூடாது. வடக்கு முஸ்லிம்களை மீள் குடியேற்றத்துக்கு தமிழ் பொதுமக்களோ அரசியல்வாதிகளோ எவ்விதத்திலும் தடைபோடவும் முடியாது. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு தமிழ் மக்களுக்கு எவ்விதத் தொடர்புமில்லை என்பது உண்மையென்றால், அதற்காக தமிழர்கள் மனம் வருந்துகின்றார்கள் என்றால், மீள் குடியேற வரும் முஸ்லிம்களை சகோதர வாஞ்சனையுடன் வரவேற்க வேண்டும். பிட்டும் தேங்காய்ப்பூவும் கதையை அடிக்கொரு தடவை சொல்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் இதை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது நல்லதல்ல. இடம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வையும் குறை மதிப்பீடு செய்வதாகவே அது அமையும் என்பதை மறந்து விடக் கூடாது.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்றால், முதலில் இருதரப்பும் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதுவும் அதற்கான பிரதான பாதையாகவே அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .