2016ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஆய்வு
28-11-2015 10:31 AM
Comments - 0       Views - 980

அச்சுதன் ஸ்ரீரங்கன்
நிதிய முகாமையாளர் (Fund Manager)
GIH Capital Ltd.

இலங்கையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது, இலங்கையின் 70ஆவது வரவு- செலவுத் திட்டம் என்பதோடு, நிதியமைச்சர் என்ற வகையில் தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் இதுவாகும்.

பிரதமரால் 2015 நவம்பர் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைக் கூற்று, 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு அடித்தளமாக காணப்படுகின்றது. இவ் வரவு- செலவுத் திட்டத்தின் பிரதானமான உபாயங்களாக

•     ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

•     வருமான மட்டங்களை விருத்தி செய்தல்.

•     கிராமியப் பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்தல்.

•     கிராமிய மற்றும் தோட்டத் துறைகளிலும், நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்களினதும் மற்றும் அரசாங்க ஊழியர்களினதும் ஆதன உரிமையை உறுதிப்படுத்தல்.

•     பரந்த மற்றும் உறுதி வாய்ந்த நடுத்தர வகுப்பினரை உருவாக்குதல்.

இந்த வரவு- செலவு திட்டம், பல ஆண்டுகளாக பல அரசாங்கங்கள் சொல்லிவந்த பொருளாதார அபிவிருத்தி, எதிர்கால சந்ததியினருக்கு நவீன பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தல் என மீண்டும் பலவற்றைச் சுமந்து வந்துள்ளது.

நிதியமைச்சர், வரவு- செலவுத் திட்ட வாசிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடியின் Ask not what the country can give, but give what you can to the country', மேற்கோள் காட்டி தனது வாசிப்பை ஆரம்பித்தார். இவ் வரவு- செலவு திட்டத்தின் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு, வீட்டு வசதி, மானியங்கள், உத்தரவாத விலைகள் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

2016ஆம் ஆண்டுக்கான அரசு வருவாய் மற்றும் மானியங்களாக எதிர்பார்க்கப்படுகின்ற வருமானங்கள் 2,047 பில்லியன் ரூபாயாகும், 2015ஆம் ஆண்டில் அரசு வருவாய் மற்றும் மானியங்களாக எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட 38.5சதவீதம் அதிகமானதாகும்.

மொத்தமாக வருமானத்தில் வரி வருமானமாக 1,584 பில்லியன் ரூபாயும், வரி அல்லாத வருமானமாக 378 ரூபாயும், மிகுதி மானியங்கள் வடிவில் நிதியளிக்கப்படும்.

எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த அரச செலவினம் 2,787 பில்லியன் ரூபாயாகும், 2015ஆம் ஆண்டினை விட மொத்த அரசு செலவினம் 29.4 சதவீதம் அதிகமானதாகும்.

இவற்றில் 1,928 பில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவினங்களான அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஊதியங்கள், வட்டி, மானியங்கள் மற்றும் பிற பொருட்கள், சேவைகளும் அடங்கும். மூலதன செலவுகளாக 868 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகின்ற வரவு- செலவுத் திட்டப் பற்றாக்குறை 740 பில்லியன் ரூபாயாகும். எனினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வரவு- செலவுத் திட்டப் பற்றாக்குறை 5.9 சதவீதாகும்.

அரச வருவாய்

2016இல் வரி மூலமான வருமான இலக்கு 1,584 பில்லியன் ரூபாயாகும். இவ் அதிகரிப்பானது 2015ஆம் ஆண்டு வரி மூலமான வருமான இலக்கை விட 23.36 சதவீதம் அதிகமானதாகும். மொத்த வரி மூலமான வருமானத்தில் பொருட்கள் சேவைகள் மீதானவரி மூலம் அடைய எதிர்பார்க்கப்பட்ட இலக்கு, 993 பில்லியன் ரூபாயாகும் (மொத்த அரசாங்க வருமானத்தில் 49 சதவீதமாக காணப்படுகின்றது). வெளிநாட்டு வர்த்தகம் மீதானவரி மூலம் 358 பில்லியன் ரூபாய், 2015ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட 44.4 சதவீதம் அதிகமாகும். வருமான வரி இலக்கில் பாரிய குறைப்புக் காரணமாக 2016இல் வருமான வரி வருமானம் 6.4 சதவீதத்தினால் குறைந்துள்ளது.

அரச செலவினம்

2016இல் மீண்டெழும் செலவீனமானது, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீதத்தினால் மட்டுமே அதிகரித்துள்ளது. மீண்டெழும் செலவீனத்தில் சம்பளங்களும் கூலிகளுக்கு 23.6 சதவீதமும்  உட்கட்டமைப்பு 24 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்க முதலீடு 2015 ஆம் ஆண்டினை விட 67.9 சதவீதம் 2016 ஆண்டுக்கு அதிகரித்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை

2016இல் எதிர்பார்க்கப்படுகின்ற வரவு- செலவுத் திட்டப் பற்றாக்குறையானது,  740 பில்லியன் ரூபாயாகும். 2015 பற்றாக்குறையை விட 9.6 சதவீத அதிகரிப்பாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு- செலவுத் திட்ட பற்றாக்குறையை 5.9 சதவீதமாகும் எனினும் 2015ஐ பற்றாக்குறை 6 சதவீதமாக காணப்பட்டது.

இவ் வரவு- செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள திட்டங்கள், வருமான இலக்குகள் மற்றும் தகவல்களிள் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாரப் பூர்வமாக அரச வர்த்தமானியில் இறுதி வெளியீடு வரும் வரை வரும் நாட்களில் பல மாற்றங்களைக் காணலாம். அடுத்த வாரம், பிரேரிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டங்கள் மூலம் அனுகூலம் மற்றும் பாதிப்படையப் போகும் துறைகளை பற்றிய அலசல்களை எதிர்பார்க்கலாம்.

 

 

"2016ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஆய்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty