2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'இன்னும் விடுதலை பெறாத இனமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்'

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,எஸ். பாக்கியநாதன்,வடிவேல் சக்திவேல்  

மாணவன் சிவகுமாரன் தொடக்கம் செந்தூரன் வரை இலட்சக்கணக்கில் மக்களையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களையும் இழந்துள்ள போதிலும் இன்னும் விடுதலை பெறாத இனமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

 
மட்டக்களப்பு தமிழ்த் தேசிய மன்றத்தின் ஏற்பாட்டில் கார்த்திகை 27 மாவீரர் நினைவு தினம் வெள்ளிக்கிழமை (27) மாலை மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழீழ விடுதலைப் பேராட்டத்தில் ஆகுதியாகி வீர மரணத்தை தழுவிக்கொண்ட மாவீரர்களை தொடர்ச்சியாக நினைவுகூருவது ஒவ்வொரு தமிழனுக்கும் கடமையாக இருக்கிறது. மாவீரனை நினைவுகூருவதற்கு நாங்கள் எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

அனுமதி பெற்ற அதனை அனுஷ்டிக்கின்றோமானால் நாங்கள் இன்னும் இன்னொருவருக்கு அடிமையாக இருக்கின்றோம் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.நாங்கள் ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் இல்லங்கள் தோறும் தீபமேற்றி வருகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் 2004ஆம் ஆண்டு எமது தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையில் நாடாளுமன்றத்திலே நாங்கள் 22 பேரும் மாவீரர்களுக்கான வீரவணக்கத்தை செலுத்தினோம். அதனைத் தொடர்ந்து மாவீரர் தினத்தை ஏதோவொரு விதத்தில் அனுஷ்டித்து வருகிறோம்.

ஒரு நாட்டில் போர் இடம்பெறும்போது, அந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை வீரர்களான இராணுவத்தை அரசாங்கம் எந்த வகையில் போற்றிப் புகழுகின்றது.அந்த போராட்டத்தில் இன்னுமொரு இனம் போராடியிருக்கின்றது என்பதை காட்டுகின்ற தினம் இந்த மாவீரர் தினமாக அமைகிறது.முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்துள்ளது என்றாலும் சுமார் 50 ஆயிரம் மாவீரர்களை நாங்கள் இழந்துள்ளோம்.இன்னும் எங்களுக்கான விடுதலை கிடைக்கவில்லை.
 
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரை நாங்கள் இனம் சார்ந்த விடுதலை பெறாவிட்டாலும் கூட நாங்கள் கேட்கின்ற விடயங்களைத் தட்டிக்கழிக்கின்ற விடயங்களே நடந்துகொண்டிருக்கிறது.சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ். மாவட்டத்தில் செந்தூரன் என்ற மாணவன் தன்னை ஆகுதியாக்கி தற்கொலை செய்துள்ளான்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாக சிவகுமாரன் என்ற மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டவனாக காணப்படுகின்றான்.

சிவகுமாரன் தொடக்கம் செந்தூரன் வரை இலட்சக்கணக்கான மக்களை இழந்துள்ளோம். ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்துள்ளோம்.

சொத்துக்களை இழந்துள்ளோம். ஆனால், இன்னுமே விடுதலை பெறாத இனமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். விடுதலைக்கு அப்பால் நாங்கள் கேட்கின்ற சின்னச் சின்ன விடயங்களை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.

இந்த மாவீரர் நாளில் எமது மண்ணிலே அவர்கள் விட்டுச்சென்ற தியாகம் இந்த மண்ணிலே நிலைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்துகிறோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .