2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வைகோ தலைமையில் 'நால்வர் அணி': தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்

Thipaan   / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைகோ தலைமையிலான 'மக்கள் நலக் கூட்டணி' முழு வடிவம் பெற்றிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இந்த அணியில் இருக்கிறார்கள். இப்போதைக்கு தமிழகத்தின் 'நால்வர் அணி' இதுதான்.

இதற்கு முன்பு கடந்த காலங்களில் இது போன்று அமைந்த 'நால்வர் அணி' தேர்தலில் சாதிக்க முடியவில்லை என்றாலும், இப்போது 'தி.மு.கவையும், அ.தி.மு.கவையும் வெறுப்பவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறார்கள்' என்ற வியூகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 'மக்கள் நலக்கூட்டணி'யின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 25 ஆம் திகதி திருச்சியில் நடைபெற்றது.

'இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்' குறித்து பினாங்கில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டார் வைகோ. அங்கு அனைவருமே 'ஜெயலலிதாவும், மோடியும்' இலங்கை தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்து விட்டார்கள் என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்துப் பேசிய வைகோ, 'சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா' என்று பாராட்டி பேசி, 'மோடி மட்டும் ஈழத் தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்து விட்டார்' என்று சாடியிருக்கிறார்.

இக்கூட்டம் முடிந்தது அவர் தமிழகம் திரும்பியவுடன், திருச்சியில் நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். நான்கு கட்சிகளையும் சேர்ந்த ஏறக்குறைய 300 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் கூட்டணி அமைத்த கட்சிகள் இப்படி 'மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை' பிரமாண்டமாகக் கூட்டி தேர்தல் வியூகம் பற்றி பேசியது இதுதான் முதல் தடவை.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தி.மு.க மீது கடும் அட்டாக் பண்ணினார்.

'தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால் தலைவருக்கு வேண்டிய தொகுதி அதை கேட்காதீர்கள் என்று கூறுவார்கள்' என்று தாக்கினார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தி.மு.கவை விட அ.தி.மு.கவையே கடுமையாக சாடினார். குறிப்பாக 'தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்துக்;கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க அரசுதான் பொறுப்பு. பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்' என்றார் காரசாரமாக.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், 'நாம் செய்த பாவம் போதும். இனியும் தி.மு.க, அ.தி.மு.க என்று நாம் அலைய வேண்டாம். தன்மானத்துடன் தேர்தலை சந்திப்போம்' என்று உணர்ச்சி வசப்பட்டார். இறுதியில் உரையாற்றிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, 'நான் பிரகாஷ் சிங் பாதல், மன்மோகன்சிங், சீத்தாராம் எச்சூரி போன்றவர்களை எல்லாம் சந்தித்தேன்.

தி.மு.க சார்பில் கூட்டணி பேச வருகிறேன் என்று சீத்தாராம் எச்சூரியுடன் பேசியிருக்கிறார் டி.ஆர்.பாலு. அதற்கு அவரோ 'நாங்கள் ஏற்கெனவே கூட்டணி அமைத்து விட்டோம்' என்று கூறி விட்டார். அதனால் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்தியச் செயலாளர் சுதாகர் ரெட்டியிடம் டி.ஆர். பாலு பேசியிருக்கிறார்.

அவரோ, 'வந்தால் தேனீர் தருகிறேன். அருந்தி விட்டுப் போங்கள்' என்று கூறி விட்டார். நம் கூட்டணியை உடைக்கப் பார்க்கிறது தி.மு.க' என்ற குற்றச்சாட்டை முன் வைத்தவர், 'நான் இந்த கூட்டணியை வழிநடத்துவதற்கு முழு தகுதி பெற்றவன். 22 வருடங்களாக ம.தி.மு.கவை நடத்தி பல தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளேன்' என்று பேசியிருக்கிறார்.

தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவியுங்கள் என்று வைகோவே நேரடியாக கோரிக்கை வைத்தது போலவே, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் வைகோவின் இந்த பேச்சு பற்றி கருத்துக் கூறுகிறார்கள்.
இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 'வருகின்ற ஜனவரி முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நான்கு தலைவர்களும் ஒரே வேனில் சென்று பிரசாரம் செய்வது' என்று முடிவு செய்துள்ளார்கள்.

2016 ஜனவரியில், 'தி.மு.கவுக்;கும் அ.தி.மு.கவுக்கும் மாற்று' என்ற கோஷத்தை முன் வைத்து, இந்த மக்கள் நலக் கூட்டணி, மக்களைச் சந்திக்கத் தயாராகி விட்டது என்பது இப்போதைக்கு வெளிச்சத்துக்;கு வந்திருக்கிறது.

இக்கூட்டணியில் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தைச் சேர்ந்த விஜயகாந்தும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜி.கே.வாசனும் சேர்வார்களா என்ற கேள்வி எழுந்திக்கிறது. விஜயகாந்தை பொறுத்தவரை இப்போதுதான் தனது சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை நிறைவேற்றி விட்டு வந்திருக்கிறார். 'சீரடியில் வைத்து, கட்சியை விட்டுப் போகமாட்டேன் என்று எம்.எல்.ஏ.க்களிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார் விஜயகாந்த்' என்று அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

ஆனால், வேறு தரப்பிலோ, 'கூட்டணி யாருடன் வைக்கலாம் என்பது பற்றி கருத்துக் கேட்கவே சீரடி சாய்பாபா கோயிலுக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்றார் விஜயகாந்த்' என்கிறார்கள். ஆனால், தே.மு.தி.க வினரோ, 'எங்கள் கேப்டன் சென்ற ஜூலை மாதம் சீரடி போனார். அப்போது என் கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து வருகிறேன் என்று நேர்த்திக்கடன் செய்து விட்டு வந்தார். இப்போது தனது பட விநியோகஸ்தர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள மும்பை சென்ற விஜயகாந்த் எங்களையும் அழைத்துச் சென்றார். இதில் அரசியல் இல்லை' என்கிறார்கள். ஆனால், மக்கள் நலக்கூட்டணியில் சேர்வதற்கான அழைப்புக்கு 'நன்றி' சொல்லி இப்போதைக்கு முடித்து வைத்துள்ளார் விஜயகாந்த்.

அந்த அணியின் போக்கைப் பார்த்து, மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது பற்றி அவர் முடிவு எடுக்கலாம். ஆனால், இப்போதைக்கு கூட்டணி அமைப்பது என்பதில் விஜயகாந்துக்;கு, தி.மு.கதான் முதல் தெரிவு என்பதே தே.மு.தி.கவில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் கருத்தாக இருக்கிறது. ஒருவேளை, தி.மு.கவுடன் தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு கூட்டணி அமையாமல் போனால்தான் வேறு கூட்டணி பற்றி முடிவு எடுப்பார் விஜயகாந்த் என்ற அரசியல் பார்வையாளர்கள் கூட கருதுகிறார்கள்.

ஜி.கே.வாசனோ அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கத்தான் ஆசையாக இருக்கிறார். அதனால் அக்கட்சி பற்றி வாசன் வாயே துக்க்காமல் இருக்கிறார். மழை வெள்ள சேதங்கள் பற்றி கூட 'மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும்' என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறாரே தவிர மாநில அரசின் நிவாரணப் பணிகள் குறித்து குறையும் சொல்லவில்லை.

மாநில அரசு, ஏன் உடனடியாக மத்திய அரசின் நிதியைக் கோரவில்லை என்றும் கேள்வி எழுப்பவில்லை. அவரும் மக்கள் நலக்கூட்டணி விடுத்த அழைப்புக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க கூட்டணி இல்லாமல், தி.மு.கவுடனும் கூட்டணி சேரமுடியாமல் போனால் வாசன் மக்கள் நலக் கூட்டணி பக்கம் போக விரும்பலாம். ஆனால், புதிதாகக் கட்சி துவங்கியுள்ள வாசன், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, 6 சதவீத வாக்குகள் பெறவில்லை என்றால் அவர் கட்சிக்கான அங்கிகாரம் கிடைப்பதில் சிக்கலாகும்.

'ம.தி.மு.க, பா.ம,.க. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இப்படி தேர்தல்கள் செயலகத்தின் அங்கிகாரப் பிரச்சினையில் சிக்கித் தவித்த போது, அவர்களுக்குக் கை கொடுத்து அந்த அங்கிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தொகுதிகளை கொடுத்தது அ.தி.மு.க, அதனால் நமக்கும் அப்படியொரு ராசி வரும்' என்று காத்திருக்கிறார் வாசன் என்பதுதான் இப்போதைய நிலைமை.

ஆனால், வைகோவைப் பொறுத்தவரை விஜயகாந்த், வாசனுக்காக டிசெம்பருக்கு மேல் காத்திருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனால்தான் 'நான்கு கட்சித் தலைவர்கள் பிரசாரத்தை' ஜனவரி முதல் வாரத்தில் வைத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை விஜயகாந்த் வந்தால் கூட அவரை 'கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது. வெற்றி பெற்று வரும் எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை தேர்வு செய்யட்டும்' என்றே கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் கூறி வருகிறார். ஆகவே, ஒரு வேளை விஜயகாந்தே இந்த அணிக்கு வந்தாலும், 'அவரை முதல்வராக அறிவிக்கக் கூடாது' என்ற வாதத்தை முன் வைத்து வைகோ அக்கூட்டணியிலிருந்து கூட வெளியேறும் நிலை வரலாம்.

அதனால் கம்யூனிஸ்ட் தலைவர்களும் 'முதல்வர் வேட்பாளரை இப்போது அறிவிக்க வேண்டாம்' என்ற வைகோவின் கருத்துக்கு சம்மதிக்கலாம். தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி 'தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் மாற்று' என்ற புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க, காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி ஆகியவை முயன்று பார்த்த கோஷம்தான் இது. சென்ற தேர்தல்களில் அது எடுபடவில்லை. 

இனி வரும் தேர்தலில் இந்த 'மக்கள் நலக் கூட்டணியின்' கோஷம் எடுபட்டு விடுமா என்பது கேள்விக்குறி- சாதாரண கேள்விக்குறி அல்ல. அது ஓர் இமாலய கேள்விக்குறி. 'இந்த அணி பிரிக்கும் வாக்குகளால் அ.தி.மு.கவுக்கு மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டலாம்'- அது மட்டும்தான் இந்த அணி தொடக்கத்தின் முகத்தில் தெரியும் முதல் சாயல்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .