2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'பிரிந்து நின்று இழந்தது போதும் : ஒற்றுமையாக நின்று வெற்றி காண்போம்'

Niroshini   / 2015 நவம்பர் 30 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான முக்கியமான இந்நாளில் இருந்து தமிழ்,முஸ்லிம் ஒற்றுமைக்கான சபதம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும் சமாதானக் கற்கை நெறிகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி றியாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலம் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் இன்று தங்கள் விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த உறவுகளுக்கு உலகெங்கும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் இந்த நிகழ்வில் தமிழ் பேசும் இன்னோர் சமூகமான முஸ்லிம்களும் கலந்து கொண்டிருந்தால் அரசுக்கு பாரிய அழுத்தங்களும் தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பான போராட்டத்துக்கு பலமும் கிட்டியிருக்கும்.

எனினும் நமக்கிடையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களின் காரணமாக ஏற்பட்டுள்ள இடைவெளி அதனைத் தடுத்து நிற்கின்றது.

காத்தான்குடிப் படுகொலைகள், வடக்கின் பலவந்த வெளியேற்றம், கிண்ணியாவின் குரங்குபாஞ்சான் பள்ளிவாசல் ஆக்கிரமிப்பு என கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை மறந்து எமது இனத்தின் எதிர்கால நலனுக்காய் ஒற்றுமைப்பட வேண்டிய தருணத்தில் அதற்கான முயற்சிகளில் நேர்மையான முன்னெடுப்புகள் காணப்படாமை துரதிஷ்டவசமானதாகும்.

எனவே, எமது மக்களின் ஒற்றுமை விடயத்தில் இனியும் தாமதிக்கக் கூடாது. தமிழ் பேசும் மக்களின் இன விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நாளொன்றை நினைவு கூரும் இந்த வேளையில் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமைக்கான முயற்சிகளும் இன்று தொடக்கம் இதயசுத்தியுடன் முன்னெடுக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்களில் தமிழ் மக்களோடு தோளோடு தோள் நின்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க முஸ்லிம்களும் முன்வரவேண்டும். எமது பிரச்சினைகளின்போது தமிழ் தரப்பின் நேசக்கரமும் நீட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .