2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சவூதி அரேபியா தேர்தல் பிரசாரங்களில் முதன்முறையாக பெண்கள்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 30 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவின் மாநகர சபைத் தேர்தல்கள், எதிர்வரும் டிசெம்பர் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, பிரசார நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் 6,140 பேரில், ஏறத்தாழ 900 பேர், பெண்களென அறிவிக்கப்படுகிறது. நாட்டிலுள்ள 284 சபைகளிலுள்ள ஆசனங்களில் மூன்றிலிரண்டு பகுதி ஆசனங்கள், இந்தத் தேர்தல்கள் மூலமாக வெற்றிகொள்ளப்படவுள்ளன. மிகுதிப் பகுதி ஆசனங்களுக்கான பிரதிநிதிகள், அரசாங்கத்தால் நியமிக்கப்படவுள்ளனர்.

இதுவரை காலமும் இரண்டு தேர்தல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவை இரண்டிலுமே ஆண்கள் மாத்திரமே போட்டியிட அனுமதி இருந்தது. இம்முறையே, பெண்கள் முதன்முறையாகப் போட்டியிடவுள்ளனர்.

பெண்களுக்கான உரிமைகளை மறுப்பதில், உலகளவில் முக்கியமான நாடாகக் கருதப்படும் சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை, இந்த மாற்றம், முதற்படியாகக் கருதப்படுகிறது. ஆனால், பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை, இன்னமும் நீடிப்பதாகவே, அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்தலில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பெண்களுக்கு அனுமதியிருக்கின்ற போதிலும், ஆண்கள் பங்குகொள்ளும் பிரசாரங்களில், அவர்களால் பங்குபெற முடியாது. எனவே, பெண்கள் கலந்துகொள்ளும் பிரசாரங்களில் மாத்திரமே அவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆண் வாக்காளர்களிடம் பிரசாரம் மேற்கொள்ள விரும்பினால், ஆண் பேச்சாளரொருவரைப் பணிக்கமர்த்தி, அவரூடாக மாத்திரமே பிரசாரங்களை மேற்கொள்ள முடியும்.

தவிர, பெண் செயற்பாட்டாளர்கள் மூவருக்கு, இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதில் இருவர், வாகனமோட்டுவதற்கு சவூதி அரேபியாவில் காணப்படும் தடையை மீறியமைக்காக, தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.

தேர்தல் பிரசாரங்களில் காணப்படும் இறுக்கமான விதிகள் காரணமாக, பெரும்பாலான பெண்கள், சமூக ஊடக இணையத்தளங்கள் உள்ளிட்ட இணைய வசதிகளூடாக, தங்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், 1.35 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்கள் வாக்களிக்கவுள்ள இத்தேர்தலில், 131,000 பெண்கள் மாத்திரமே வாக்களிக்க விண்ணப்பித்துள்ள நிலையில், பெண்களில் பிரதான பிரசார இலக்காக பெண்களே காணப்படுவதால், பெண்ணொருவர் ஆசனங்களை வெல்வது மிகக்கடினமாகவே அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X