2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முட்டுச் சந்து

Thipaan   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மப்றூக்

மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சி, பலரின் அரசியலை முட்டுச் சந்துகளில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இத்தனை சீக்கிரத்தில், ஆட்சி பீடத்திலிருந்து மஹிந்த தூக்கி வீசப்படுவார் என்று யார்தான் நினைத்தார்கள். அதனால், கண்ணை மூடிக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பயணித்த பல அரசியல்வாதிகள், இப்போது முட்டுச் சந்துகளில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் செல்லப் பிள்ளைகளாகத் திரிந்த அரசியல்வாதிகளுக்கு, இப்போது தங்களுடைய அரசியல் சூனியமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதிலிருந்து விடுபடாது விட்டால், அவர்களின் 'கடை'களைக் காலி செய்வதைத் தவிர, வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், மஹிந்தவுடன் ஒட்டிக்கொண்டிருந்த பலர், ஆளுந்தரப்புக்குத் தாவ முடிவு செய்துள்ளதாக ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அரசியல் என்பது சிலருக்கு மதம் போலானது, சிலருக்கு ஆடை போலானது. அநேகமான அரசியல்வாதிகளுக்கு இரண்டாம் வகை. 'இதுதான் எனது பாசறை' என்று அவர்கள் எந்தத் தரப்புடனும் இறுதி வரை ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. தமது அரசியல் வாழ்வுக்கு ஆபத்துக்கள் வரும்போது, ஆடைகளைப்போல் கட்சிகளை கழற்றி வீசிவிட்டு, வேறொன்றினை அவர்கள் அணிந்து கொள்ளத் தொடங்குகின்றனர்.

குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசிகளாக அறியப்பட்ட டலஸ் அலகப்பெரும மற்றும் பவித்திரா வன்னியாராச்சி போன்றவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொண்டு, அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளதாக பேச்சுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

பவித்திரா வன்னியாராச்சி - மஹிந்த ராஜபக்ஷவின் மிகுந்த அன்புக்குரியவர். ஆனாலும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவானவுடன் அமைக்கப்பட்ட நூறு நாட்கள் அரசாங்கத்தில், பவித்திரா - இராஜாங்க அமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொண்டார். பின்னர் பொதுத் தேர்தலின் போது, மீண்டும் மஹிந்த பக்கமாகச் சென்றவர், இப்போது மீளவும் - அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளார் என்கின்றன புதிய செய்திகள்.

முட்டுச் சந்துகளில் சிக்கிக் கொண்டு, பயணிப்பதற்கு 'வேறு வழியில்லை' என்கிற நிலைமை உருவாகும் போது, இவ்வாறான முடிவுகளை எடுப்பதைத் தவிர, இவர்களுக்கு வேறு வழிகள் இல்லைதான்.

இவர்களின் கதை இப்படியிருக்க, அரசியல் முட்டுச் சந்துகளில் சிக்கிக் கொண்ட வேறு சிலரின் நிலைமை, இன்;னும் மோசமானது. அவர்கள் பயணிப்பதற்கு வேறு வழிகள் கிடையாது என்பது ஒருபுறமிருக்க, வந்த வழியிலும் அவர்களால் திரும்பிச் செல்ல முடியாது. அப்படியான ஒருவர்தான் ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்தவுடன் இணைந்து கொண்ட திஸ்ஸவின் அரசியல் நிலை இப்போது மிகவும் பரிதாபகரமானதாக மாறியிருக்கிறது. அவர் - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனும் இல்லை, ஐ.தே.கட்சியுடனும் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் ஐ.தே.கட்சியுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டபோதும், அது கைகூடவில்லை. இதனால், ஐ.தே.கட்சியைத் தூற்றினார். இப்போது சுதந்திரக் கட்சியும் - ஐ.தே.கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்வாறான முட்டுச் சந்துகளில் சிக்கிக் கொண்டு நிற்பதையும் அரசியல் அரங்கில் காண முடிகிறது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மிக மோசமானதொரு அரசியல் முட்டுச் சந்தில் நின்று கொண்டிருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சுமார் 10 வருடங்கள் அமைச்சராக இருந்து கொண்டு அரசியல் செய்து வந்த அதாவுல்லா, இப்போது மிகவும் பரிதாபகரமாதொரு அரசியல் முட்டுச் சந்தில் அகப்பட்டுக் கொண்டுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த அதாவுல்லாவின் அரசியல் எதிர்காலம் இப்போதைக்கு இருளாகவே தெரிகிறது. 

இதனால், இது காலவரையும் அதாவுல்லாவின் விரல் பிடித்துக் கொண்டு, அரசியல் பாதையில் நடந்து வந்த பலர், முட்டுச் சந்துகளில் தாங்கள் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் பொருட்டு, அணி மாறத் தொடங்கியுள்ளனர். இவ்வாறானவர்களில் ஒருவர்தான் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அமீர். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில், வெற்றிலைச் சின்னத்தினூடாக கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர், இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஆளுந்தரப்புக்குத் தாவிக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, கிழக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பில் இருந்த இவர் போன்றோர், மஹிந்த வீழ்ந்ததும் - எதிர்க்கட்சியில் அமர நேர்;ந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பட்டியலில் வரும் இன்னுமொருவர் கிழக்கு மாகாணசபையின் முன்னாள்அமைச்சரும், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை. இவர் அதாவுல்லாவின் தீவிர விசுவாசி என்பதால், மஹிந்தவின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதாவுல்லாவோடு சேர்ந்து முட்டுச் சந்து ஒன்றில் வந்து நிற்கிறார்.

ஆயினும், இவ்வாறானதொரு அரசியல் சூழ்நிலைக்குள், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை சிக்குண்டு போவதை, அவரின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. எனவே, அதாவுல்லாவின் விரல்களை விட்டுவிட்டு, வேறொரு அரசியல் பாதையில் பயணப்படுமாறு, உதுமாலெப்பையை அவரின் ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். உதுமாலெப்பைக்கும் தனது அரசியல் வாழ்வைத் தற்காத்துக் கொள்வதற்காக, ஒரு மாற்றுப் பாதை தேவையாக இருக்கிறது.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, தனது அரசியலை மு.காங்கிரஸில் இருந்துதான் ஆரம்பித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸ் மூலம் ஒரு காலத்தில் பதவி வகித்தவர். ஆனால், மு.காங்கிரஸை விட்டும் அதாவுல்லா பிரிந்து சென்றபோது, உதுமாலெப்பையும் அதாவுல்லாவுடன் சென்று விட்டார்.

இந்த நிலையில், இப்போது உதுமாலெப்பை மீளவும் மு.காங்கிரஸில் இணைய வேண்டும் என்று, அவரின் மிக முக்கிய ஆதரவாளர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அரசியல் முட்டுச் சந்தில் அதாவுல்லாவுடன் நின்று கொண்டிருந்தால், உதுமாலெப்பையின் அரசியலும் பூச்சியமாகி விடும் என்பது, உதுமாலெப்பபையினுடைய ஆதரவாளர்களின் வாதமாகும்.

ஆனால், மு.காங்கிரஸுக்குள் உதுமாலெப்பை இப்போதைக்கு மீளவும் வருவதை அவரின் பிராந்திய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் விரும்பப் போவதில்லை. மு.காங்கிரஸ் பலவீனமாக உள்ளதொரு நிலையிலோ, அல்லது அரசியலில் உதுமாலெப்பை பலமானதொரு நிலையில் இருக்கும் போதோ, மு.கா.வுக்குள் அவர் வருவதாக இருந்தால், அதற்கு நிச்சயமாக வரவேற்பு இருந்திருக்கும் - இருக்கும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரத்தில் உள்ள சூழ்நிலையில், உதுமாலெப்பை தனது அரசியல் வாழ்வினைத் தற்காத்துக் கொள்வதற்காக, மு.கா.வுக்குள் வருவதற்கு எடுக்கும் எத்தனங்களை, அந்தக் கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் நிச்சயமாக எதிர்த்தே தீருவர்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவைப் பொறுத்தவரை, அவருக்குள்ள கடைசி நம்பிக்கை உதுமாலெப்பைதான். அவரையும் இழந்து விட்டால், இனி அதாவுல்லாவால் அவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்றுக்கு வெளியில் வந்து அரசியல் செய்ய முடியாது என்பதுதான் களநிலைவரமாகும். எனவே, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை கட்சி மாறுவதை, அமைச்சர் அதாவுல்லா முடிந்தவரை தடுக்கவே முயற்சிப்பார்.

இன்னொருபுறம், மு.காங்கிரஸிஸ் இணைவது உதுமாலெப்பைக்கு சாத்தியமற்றுப் போகுமாயின் அவர், வேறு கட்சியில் இணைந்து கொள்ளுவாரா என்கிறதொரு கேள்வியும் இங்கு உள்ளது. மு.காங்கிரஸுக்கு அடுத்ததாக, அமைச்சர்

ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் இப்போது ஆளுந்தரப்பில் உள்ளது. எனவே, தவிர்க்க முடியாததொரு சந்தப்பத்தில், அ.இ.மக்கள் காங்கிரஸில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இணைந்து கொள்வதற்கான சாத்தியங்களும் இருப்பதைத் தட்டிக்கழிக்க முடியாது.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமைப் பொறுத்தவரை, தமது கட்சியுடன் இணைய விரும்பும் எவரையும் அவர் அநேகமாகத் தட்டிக்கழித்தமை கிடையாது. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் மு.காங்கிரஸின் அம்பாறை மாவட்ட உள்ளூர் பிரமுகர்களின் எதிர்ப்பினையும் மீறி, பல எதிர்க்கட்சிப் பிரமுகர்களை ரவூப் ஹக்கீம் மு.கா.வில் இணைத்துக் கொண்டமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

இது தொடர்பில் மு.கா. தலைவர் ஒரு தடவை கூறுகையில், 'வேலிகளை அமைத்துக் கொண்டு, கட்சியினை வளர்க்க முடியாது' என்று தெரிவித்திருந்தார். 'எதிர்த்தரப்பினரை மு.காங்கிரஸுடன் இணைய அனுமதிக்காமல், எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருந்தால், கட்சியினை ஒருபோதும் வளர்த்தெடுக்க முடியாது' என்பதே, மு.கா. தலைவரின் அந்தக் கூற்றுக்கு அர்த்தமாகும். எனவே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் உதுமாலெப்பை மீளவும் வருவாராயின், அதனை ரவூப் ஹக்கீம் வரவேற்பதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் உள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சியானது, பலரின் அரசியலை முட்டுச் சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பதாக ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டிருந்தபோதும், அந்த முட்டுச் சந்தியினை ஆபத்துக்கள் நிறைந்ததாக ஆக்கியிருக்கிறது, தேசிய அரசாங்கம்.

ஐ.தே.கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கமொன்று உருவானமை, கணிசமான அரசியல்வாதிகளின் சோற்றுக்குள் மண்ணை வாரி இறைத்துள்ளது. இதனால், மஹிந்தவின் ஆட்சி புரண்டதன் மூலம், ஏலவே முட்டுச் சந்தில் சிக்கி, விழி பிதுங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, தேசிய அரசாங்கம் உருவானமையானது அடிமேல் அடியைக் கொடுத்திருக்கிறது.

அரசியலில் இப்படியான முட்டுச் சந்துகளை இதற்கு முன்னர் பலர் பார்த்திருக்க மாட்டார்கள். அனுபவமற்றவர்கள் முட்டுச் சந்துகளில் சிக்கிக் கொள்ளும் போது பதட்டமும், பயமும் கொள்கின்றனர்.

இன்னொருபுறம், சில முட்டுச் சந்துகளில் சிக்கிக் கொள்ளுகின்றவர்களுக்காகவே, வழிப்பறிக் கொள்ளையர்கள் காத்துக் கொண்டிருப்பது வழமையாகும்.

அரசியல் முட்டுச் சந்துகளில் - வழிப்பறிக் கொள்ளையர்கள் யார் என்பதை, நீங்கள்தான் அனுமானித்துக் கொள்தல் வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .