2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'தீபாவளி முற்பணத்தை பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுவோம்'

Sudharshini   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

தீபாவளிக் கொடுப்பனவை பிள்ளைகளின் கல்விக்காகச் செலவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நானுஓயாவுக்குட்பட்ட, எடின்பரோ தோட்டப் பெண்கள் தெரிவித்தனர்.

'தவணைப் பணத்துக்குப் பொருட்களை வாங்கும் பழக்கமும் கடன் கலாசாரத்தில் மூழ்குவதற்குக் காரணம் என்பதை நாம் உணர்ந்துள்ளதால் தோட்டங்களுக்கு பொருட்களை எடுத்து வரும் வியாபாரிகளிடம் பொருட்களைத் தவணைக்கு வாங்குவதையும் நாம் தவிர்த்து வருகிறோம்' என்றும் அவர்கள் கூறினர்.

பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தலைமையில், பெண்கள் மற்றும் கோயில் நிர்வாக சபையினருக்கிடையிலான சந்திப்பு, ஞாயிற்றுக்கிழமை(29)  நானுஓயா காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு கூறினர்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்கள்,

'தீபாவளி என்பது ஒரு பண்டிகை. அந்தப் பண்டிகையைக் கடன் வாங்கிக் கொண்டாடுவது கௌவரக் குறைவான விடயம். நாங்கள் பண்டிகைகளைக் கடன்வாங்கிக் கொண்டாடும் பழக்கத்தை இதுவரை கடைப்பிடித்து வந்திருக்கிறோம். இந்தப் பழக்கத்தையும் கலாசாரத்தையும் நாம் மாற்றியாக வேண்டும்.

கடந்த வருட தீபாவளிக்குப் பின்னர்; தீபாவளிக்காக மாதம் ஆயிரம் ரூபாய் எங்கள் சம்பளத்திலிருந்து கழித்து சேமித்து வைக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டோம். இம்முறை நாங்கள் கடன் வாங்காமல் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.

நாங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. எங்களுக்குக் கிடைக்கவிருக்கும் தீபாவளிக் கொடுப்பனவை நாங்கள் தற்போது வாங்காமல் அந்தப் பணத்தை எங்கள் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடத் தீர்மானித்திருக்கிறோம்' என்றனர்.

'முடியுமானவரை பண்டிகைகளைக் கொண்டாட முற்பணம் வாங்கும் பழக்கத்தை முற்றாகவே கைவிடத் தீர்மானித்திருக்கிறோம். இதேவேளை, தோட்ட நிர்வாகத்துக்கூடாக சேமிக்கும் பணத்தை  தோட்ட நிர்வாகத்தின்; மூலம் மாதாமாதம் வங்கிக் கணக்குக்கு அனுப்பினால் அதற்கு ஒரு வட்டியும் கிடைக்கும் என்பதால் அதனை நடைமுறைபடுத்தவும் எண்ணியிருக்கிறோம்' என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .