2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாவீரர் நினைவேந்தல்: சொல்லாத செய்திகள்

Thipaan   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெய்வீகன்

மாவீரர் வாரம்; உலகெங்கும் இம்முறையும் எழுச்சியுடன் அனுஷ்ட்டிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தில் அதற்கான தடைகள் அறிவிக்கப்பட்டபோதும் அவற்றையும் மீறி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

 கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் 'மாலை 06.05 மணிக்கு விளக்கேற்றுங்கள்' என்று தலைப்பு செய்தியுடன் ஐந்து முழுப்பக்கங்களில் மாவீரர்நாள் சிறப்பு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியிடுமளவுக்கு - 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் - மிகவும் எழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன.

 நல்லாட்சி, நல்லிணக்கம் போன்ற ஆபரண சொற்களால் என்னதான் தங்கள் பௌத்த தேசியவாத சிந்தனைகளை மறைத்துக்கொண்டாலும் சிங்கள ஆட்சி இயந்திரம் எனப்படுவது அடிப்படையில் மனமாற்றம் அடையாத பழைய அச்சாணியில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு மாவீரர் வாரம் குறித்த அதன் மனக்கிலேசமே மிகச்சிறந்த சான்றாகியுள்ளது.

 சுமந்திரன் பொப்பி மலர் அணிந்தாலென்ன கூட்டமைப்பின் ஏனையோர் நாடாளுமன்றில் நேசக்கரம் - பாசக்கரம் என்று எந்த கையை நீட்டினாலென்ன சிங்கள ஆட்சியாளர்களின் அடிப்படைசிந்தனை மாற்றம் என்பது தோற்றம் பெறுவதற்கு இன்னும் கனகாலம் உள்ளது என்பதைத்தான் இம்முறை மாவீரர்தினமும் கோடிட்டு காட்டியிருக்கிறது.

 மூன்று தசாப்த காலமாக போர் கனன்ற தமிழர் தேசம் ஆழமான காயங்களாலும் சமூக வடுக்களாலும் ஆறாத புண்களாலும் இன்னமும் சீழ் சிந்திக்கொண்டிருப்பதை எல்லோரும் அறிவர். முக்கியமாக அந்த மக்களுடன் நல்லிணக்கம் பேசப்போவதாக கூறி அவர்களின் ஆதரவை பெற்று ஆட்சி பீட மேறிய நல்லாட்சி அரசு நன்றாகவே அறியும்.

 ஆனால், காயத்துடனிருப்பவர்கள் நேசக்கரம் நீட்டும்போதுகூட காயப்படுத்தியவர்கள் இன்னமும் மாறாத நிலையுடன் காணப்படுவது இந்த ஒட்டுமொத்த நல்லாட்சி படலத்தில் உள்ள பெரிய ஓட்டையைத்தான் வெளிக்காட்டிநிற்கிறது.

 சிங்கள தேசத்தின் மாறாத மனநிலை இப்படியிருக்க, தமிழ் மக்கள் தமது நெஞ்சங்களில் பூஜிக்கும் மாவீரர்கள் குறித்து எவ்வாறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பான வித்தியாசமான பரப்பினை ஆராய்வதே இந்த பத்தியின் நோக்கம்.

 மாவீரர்களை தமிழ் மக்கள் இனிவரும் காலங்களில் தீப வெளிச்சத்தில் பார்த்து நீர் சொரிந்து போகும் தேசபக்தர்களாக மட்டும் பார்த்துவிட்டு போகப்போகிறார்களா? இல்லை. ஈழத்தமிழினத்தின் ஆதார பண்புகளில் ஒன்றாக கூர்மையடைந்த மாவீரர்களது அர்ப்பணிப்பு-தியாகம் போன்றவற்றை சரியான பாதையில் அடுத்த தலைமுறையிடமும் கையளிக்கும் பொறுப்புடன் பயணிக்கிறார்களா?

 அதற்கான அவசியம் வந்துவிட்டதை அவர்கள் உணர்ந்துள்ளார்களா?

 ஈழத்தமிழினம் ஏவ்வாறு தனக்கென்ற தனியான தேசம், மொழி, பண்பாடு போன்ற சிறப்பான தேசிய பண்புகளை வெளிப்படுத்தி நிற்கிறதோ அதேபோல பெருமை கொள்ளக்கூடிய மாவீரர்களையும் அவர்களது அர்ப்பணிப்புக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது அந்த இனத்துக்கு கிடைத்த பெரும் கௌரவம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 இந்த யுகத்துடன் தமிழ் இனத்தின் இன்னொரு தனிக்கூறாக இணைத்துக்கொள்ளப்படவேண்டிய மாவீரரின் தியாக வரலாறெனப்படுவது வருங்காலத்தில் போற்றப்படும் ஒப்பற்ற பெருமையாக பார்க்கப்படவுள்ளது.

 ஒரு புனித லட்சியத்துக்காக தம்முயிரை ஈந்த இந்த மாவீரர்களின் மரணங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தரப்பினரால் பலவாறு விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டாலும் -

 ஈழத்தமிழர்களை பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான அந்த இளைஞர்களின் மரணங்கள் எனப்படுவது என்றைக்குமே போராட்டத்தினுள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இனத்தின் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயரிய அர்ப்பணிப்பு.

 கடைசி ஈழத் தமிழனின் மூச்சடங்கும்வரை இந்த இளைஞர்களின் மரணங்கள் சமரசம் செய்யப்படமுடியாத சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே மிளிர்ந்துகொண்டிருக்கப்போகின்றன.

 ஆனால், மாறிவரும் உலக ஒழுங்குகளின் முன்னால் - வல்லரசுகளின் பிரபஞ்ச பொதுவிதிகளுக்கு முன்னால் - இந்த தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் தனித்தனி அளவீடுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. தமக்கேற்ற சட்டம் ஒன்றை சிருஷ்டிப்பதற்காக தயவு தாட்சண்யம் இன்றி எல்லோரையும் களுமரமேற்றி தண்டிப்பதுதான் உலக பொலிஸ்காரர்களின் பொதுவான பாணி.

 இந்த விதிகளின் முன்னால் ஈழத் தமிழினத்தின் விடிவுக்காக உயிர்துறந்த மாவீரர்களும் அவர்களின் அர்ப்பணிப்புக்களும் ஏன் அவர்களுக்கு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகளும்கூட எதிர்காலத்தில் கேள்விக்கு உட்படுத்தப்படும் நிலை வரலாம்.

 ஒரே மாதிரியான போராட்ட பாணிகளை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களை அழித்தொழிப்பதே கொள்கையாக கொண்டியங்கி, வல்லரசுகளுக்கு வலிகளை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டியங்கும் பயங்கரவாத இயக்கங்கள் இன்று உலகெங்கும் புற்றெடுத்துப்போயுள்ளன.

 இந்த அமைப்புக்களை அழித்தொழிப்பதற்கு இன்று உலகமே கங்கணம் கட்டிநிற்கிறது. இந்த அமைப்பில் அங்கம் வகிப்பவர்களும் தங்களை போராளிகள் என்றும் தாங்கள் மேற்கொள்வது புனிதப்போர் என்றும் இதில் இறந்த தங்கள் உறுப்பினர்களை மாவீரர்கள் என்றே அறிவித்து வருகிறார்கள்.

 இந்த புள்ளியில்தான் பல கேள்விகள் எழுகின்றன.

 1)     ஈழத்தமிழினத்துக்காக உயிர்துறந்த மாவீரர்களின் அர்ப்பணிப்பை புனிதமாக பதிவுசெய்துள்ள நிகழ்காலம் அடுத்த தலைமுறைக்கு அதே கனதியுடன் கைமாறுவதற்கு பொறுப்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

 2)     இன்றைய தலைமுறையினர் போரின் கோர முகத்தினை நேரடியாக தரிசித்தவர்கள். அதனை எதிர்த்து களமாடிய மாவீரர்களையும் அவர்களது அர்ப்பணிப்புக்களையும் உணர்பூர்வமாக உள்வாங்கிக்கொள்வதில் அவர்களுக்கு எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இது ஒரு வீரகாவியமாகவே கைமாறப்படப்போகிறது. அவர்கள் இதனை தொடர்ந்தும் அதே வீச்சுடன் ஏற்றுக்கொள்வார்களா?

 3)     எல்லா போராளிகளையும் பயங்கரவாதிகளாக கருதும் எதிர்கால உலக ஒழுங்கின் மீது பயணிக்கப்போகும் எமது அடுத்த தலைமுறையினர் - பெரும்பாலும் தாயகத்துக்கு வெளியே - ஏனைய இனத்தவர்களுடன் மாவீரர்களின் பெருமைகளை பேசும்போது எவ்வாறு துணிவாக தங்கள் நாயகர்களை புனிதர்களாக வேறுபடுத்தி காண்பிக்கப்போகிறார்கள்? அதனை தீர்க்கதரிசனத்துடன் அணுகிய நடவடிக்கைகள் ஏதாவது தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

 தலைமுறை விளிம்புகளில் விவாதிக்கப்படவேண்டிய மிகத்தேவையான பேசுபொருட்கள்தான் இவை.

 இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் தாயகத்தில் காண்பித்த கனதியும் புலம்பெயர்ந்த மண்ணில் காண்பித்த காத்திரமும் எவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்தன என்பதை முன்பு விரிவாக பேசியிருந்தோம்.

 விடுதலைப்புலிகள் அமைப்பை பல நாடுகளின் உதவியுடன் அழித்தொழித்தது சிறிலங்கா அரசு. ஆனால், இன்று அந்த சிறிலங்காவில் மட்டுமல்லாமல் அழிவுக்கு கரம்கொடுத்த அதே வெளிநாடுகளிலும் அலையென திரண்ட மக்கள் அந்த அமைப்பின் மாவீரர்களுக்கு தமது மனப்பூர்வமான ஆதரவையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர். சர்வதேச சதியிற்கும் மக்கள் சக்திக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக கோடு கிழித்துக் காண்பித்திருக்கும் இடம் இதுதான்.

 ஆனால், இந்த ஒருமித்த பலம் தொடரும் என்றோ தொடர்ந்தாலும் அந்த தளத்தில் மாவீரர்களின் அர்ப்பணிப்புக்கு தொடர்ந்து அங்கிகாரம் கிடைத்துவிடும் என்றோ அவ்வாறான சொந்த மக்களின் அங்கிகாரத்துக்குக்கூட தொடர்ச்சியான சர்வதேச அனுமதிகள் கிடைத்துவிடும் என்று எண்ணுதல் தவறு.

 அப்படியானால், ஒட்டுமொத்தமாக தமிழினமும் இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது?

 இத்துணை ஆகுதியாகிய பெரும் சேனையொன்றின் தியாகவரலாற்றை சர்வதேச மயப்படுத்தும் ஆவணங்கள் வேற்று மொழிகளிலும் பல்லினத்தவர்களையும் சென்றடையும் நுண்ணிய கலைப்படைப்புக்களாகவும் தோற்றம் பெறவேண்டும்.

வரலாற்று நூல்கள் மாத்திரம் உண்மைகளை ஊடுருவி சொல்லிவிடுவதில் வெற்றி காண்பதில்லை. கவர்ச்சியான படைப்புக்களும் வித்தியாசங்களை உணரவைக்கும் பார்வைகளும்தான் எளிதில் சர்வதேசமயமாகிவிடும் தன்மை கொண்;டவை.

 மாவீரர் மாண்மியங்கள் இவ்வகையான மார்க்கங்களின் ஊடாக பேசப்படவேண்டும். இதுவரை தொட்டிராத வித்தியாசமான கோணங்களின் ஊடாக உலகுடன் உரையாடவேண்டும். அதற்கான தகுதியை அடுத்த தலைமுறைக்கு வழங்கி வழிகாட்டுவதில் நிகழ்காலம் வெற்றிபெறவேண்டும்.

 கடந்த மாவீரர் தினத்தன்று - நவம்பர் 27ஆம் திகதி - ஈழத் தமிழ் பாடகி மாயா அருள்பிரகாசம் எனும் உலகப்புகழ் பாடகி தனது புதிய பாடலை வெளியிட்டுவைத்தார். ஐரோப்பாவை தற்போது பி;டரியில் பிடித்து உலுப்புகின்ற அகதிகளை பிரச்சினையை முன்னால் வைத்து, தான் அகதியாக நாட்டை விட்டு பிரிந்து வந்த வலிகளை வித்தியாசமான அலைவரிசையில் கேட்பவர்களுடன் உரையாடும் அற்புதமான பாணியை அவர் கையாண்டிருப்பது உண்மையில் அற்புதம். அந்த பாடல் வெளிவந்த தினமும் இன்னொரு செய்தியை தன்னகத்தே கொணடிருக்கிறது.

 பாடல் வெளியாகி மூன்று நாட்களிலேயே யூ ட்யூபில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பாடலை பார்வையிட்டிருக்கிறார்கள்.

 இவ்வாறான முயற்சிகளில் அடுத்த தலைமுறையினர் பரிபாலனமடையும்போது - மாவீரரது பெருமையையும் - அவர்களை ஏன் தமிழினம் பூஜிக்கிறது என்பதையும் - அவர்கள் ஏன் புனிதமானவர்கள் என்பதையும் - அவர்களுடன் ஏன் தலைமுறை தலைமுறையாக மக்கள் ஆத்மார்த்தமாக இணைந்திருக்கிறார்கள் என்பதையும் வௌ;வேறான ஆவணங்களில் உலகம் புரிந்துகொள்ள முயற்சிக்கும். அவற்றின் தொடர்ச்சியாக அவர்களின் வரலாறுகள் உலகின் உள்ளங்களிலும் கரைந்துகொள்ளும்.

 இது மட்டுமே பலமானதும் வளமானதும் முயற்சி - பாதை என்று இந்த பத்தி வாதிட முயற்சிக்கவில்லை. ஆனால், இது போன்ற முயற்சிக்கான களம் வெற்றிடமாகவுள்ளது என்பதையும் அதற்கான அவசியம் பற்றியுமே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

 இன்று ஈழத் தமிழினத்திற்காக போராட புறப்பட்ட ஒரு மாவீரன் போராட்ட வரலாறாவது அல்லது அவனது வாழ்க்கை குறிப்பாவது வேறு மொழியில் வெளிவந்ததாக எந்த அடையாளமும் இல்லை. போர் இலக்கியங்களின் வரட்சிநிலை சற்று தணிந்து இப்போது போர் முடிந்து ஆறு வருடங்களின் பின்னர் தமிழில் பல நூல்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது செழுமையான விடயம். ஆனால், வேற்று மொழிகளிலும் வேற்று படைப்பு ஊடகங்களிலும் இது விசாலம் பெறவேண்டும்.

உலகின் அனுதாப வேர்களையும் அக்கறை கண்களையும் சென்றடையும் வண்ணம் தமிழர்களது போராட்ட வரலாறுகள் பரந்து விரிந்து பேசப்படவேண்டும். அவற்றின் நாயகர்களாக மாவீரர்களது பெருமைகள் உரையாடப்படவேண்டும். அதன் ஊடாக தமிழர்களது போராட்ட நியாயங்களும் தர்க்கிக்கப்படவேண்டும். இவற்றுக்கான பொதுவெளியில் தமிழினம் தயாராக உள்ளதா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .