சம்பியனானது வல்வை றெயின்போ
25-12-2015 07:25 PM
Comments - 0       Views - 52

வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டுக் கழகத்தின் அனுமதியோடு வல்வெட்டித்துறைக்குட்பட்ட 6 கழகங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட ஒரு நாள்த் தொடரில் றெயின்போ விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது. இறுதிப் போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்தே றெயின்போ விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டியில் ஆரம்பக் கோலைப் பெற்ற றெயின்போவின் பிரகாஸ், தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். எனினும் போட்டியின் இரண்டாவது பாதியில் இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தின் பிரஷாந், ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். எனினும் போட்டி முடிவடைய ஐந்து நிமிடம் இருக்கையில் றெயின்போவின் சிரேஷ்ட வீரர் சங்கர், ஒரு கோலினைப் பெற்று தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார்.

மேற்படி இறுதிப்போட்டியின் நாயகனாக றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் பிரகாஸூம் தொடரின் சிறந்த வீரராக இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தின் பிரஷாந்தும் தொடரின் சிறந்த கோல்காப்பாளராக றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் மணிமாறனும் தெரிவாகினர்.

முன்னர் இடம்பெற்ற, முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், குழு ஏயில் முதலிடம் பெற்ற றெயின்போ விளையாட்டுக் கழகமும் குழு பியில் இரண்டாமிடம் பெற்ற ரேவடி விளையாட்டுக் கழகமும் மோதியிருந்தது. இந்தப் போட்டியில் றெயின்போ விளையாட்டுக் கழகம், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதில், றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் பிரகாஸ் 2 கோல்களையும் ரேவடி விளையாட்டுக் கழகம் சார்பாக பெறப்பட்ட கோலை தமிழரசுனும் பெற்றிருந்தனர்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், குழு பியில் முதலிடம் பெற்ற இளங்கதிர் விளையாட்டுக் கழகமும் குழு ஏயில் இரண்டாமிடம் பெற்ற சைனிங்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதியிருந்தன. இதில், வழமையான நேரத்தில இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தன. இளங்கதிர் சார்பாக பெறப்பட்ட கோலை பிரஷாந்தும் சைனிங்ஸ் சார்பாக பெறப்பட்ட கோலை ஜெயக்குமாரும் பெற்றிருந்தனர். பின்னர், இறுதிப்போட்டிக்கு அணியைத் தெரிவு செய்வதற்காக வழங்கப்பட்ட பனால்டியில் இளங்கதிர் விளையாட்டுக் கழகமானது 3-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் குழு ஏயில் றெயின்போ, சைனிங்ஸ், தீருவில் ஆகிய விளையாட்டுக் கழகங்களும் குழு பியில் இளங்கதிர், ரேவடி, நேதாஜி ஆகிய விளையாட்டுக் கழகங்களும் பங்கேற்றிருந்தன.

 

"சம்பியனானது வல்வை றெயின்போ" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty