2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட அஷ்ரபின் கொள்கை

Thipaan   / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் முடிவடைந்து ஐந்து மாதங்களாகியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு உறுப்பினர்கள் நியமிப்பது தொடர்பாக, அக்கட்சிக்குள் எழுந்த பிரச்சினையை கட்சித் தலைமை இன்னமும் தீர்த்துக் கொள்ளவில்லை. பல பகுதிகளைச் சேர்ந்த, குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த பலர், தமக்கோர் ஆசனம் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணமே இருக்கிறார்கள்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழேயே மு.கா.போட்டியிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட அம் முன்னணியே அத் தேர்தலின் போது ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றது. அதன் மூலம் அக்கூட்டணிக்கு 13 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்ததோடு, அதில் இரண்டு மு.கா.வுக்கு வழங்கப்பட்டன.

மு.கா.வுக்குக் கிடைத்த இரண்டு ஆசனங்களுக்கு பலர் உரிமை கோரவே, குறித்த காலக்கெடுவுக்குள் அந்த இரண்டு ஆசனங்களுக்கு நிரந்தரமாக யாரை நியமிப்பது என்பதை தீர்மானிக்க, மு.கா. தலைமையினால் முடியாமல் போய்விட்டது. சிலர் மாவட்ட அடிப்படையில் சிந்தித்து அந்த ஆசனங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், அது தேர்தல் தொகுதி அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும் சிலர் தத்தமது பிரதேச ஆட்களை மனதில் வைத்துக் கொண்டு வாதிட்;டனர்.

2013ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தலுக்கு சற்று முன்னர் உருவாக்கப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி, இந்தப் பொதுத் தேர்தலின் போது மு.காவுடன் கூட்டு சேர்ந்தே போட்டியிட்டது. தாம், தேர்தலின் போது அளித்த பங்களிப்புக்காக தமக்கு ஓர் ஆசனம் கிடைக்க வேண்டும் என அம் முன்னணி கோரியது.

வட மாகாண முஸ்லிம்கள், இந்த இரண்டு ஆசனங்களில் ஒன்றைக் கேட்டு நிற்பதை நியாயப்படுத்தும் வகையில், சற்று வித்தியாசமான ஒரு கோரிக்கையை சிலர் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பினர். அதாவது, வட பகுதியிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் நிலைமையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுத்துரைக்கக் கூடிய ஒருவர், ஓர் ஆசனத்துக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதே.

இந்த நெருக்குவாரங்களின் காரணமாக, குறித்த காலக்கெடுவுக்குள் தமக்கு கிடைத்த இரண்டு ஆசனங்களுக்கு இரண்டு உறுப்பினர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாத நிலைமை உருவாகியதால், மு.கா. தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தாம் நிரந்தர முடிவொன்றை எடுத்த போது பதவி விலகுவார்கள் என்று நம்பக்கூடிய இருவரை தற்காலிகமாக அந்த இரண்டு ஆசனங்களுக்கு நியமித்தார். அதில் ஒருவர் ஹக்கீமின் முத்த சகோதரரான டொக்டர் ஏ.ஆர்.ஏ ஹபீஸ் மற்றவர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான்.

டொக்டர் ஹபீஸ், நகரத் திட்டமிடல் அமைச்சிலும் மு.கா. தலைவரினதும் தகவல்த்துறை செயலாளராக கடமையாற்றுகிறார். அவர் சில தினங்களுக்க முன்னர் தனிப்பட்ட காரணஙகளுக்காகவென எம்.பி. பதவியை இராஜினாமாச் செய்தார். ஆனால், அவரது இடத்துக்கு எவராவது நியமிக்கப்படும் ஏற்பாட்டுடனேயே அவர் இராஜினாமாச் செய்ததாகத் தெரியவில்லை. பின்னர் தான் முன்னாள் பிரதி அமைச்சர் சின்ன தௌபீக் எனப்படும் எம்.எஸ். தௌபீக் அந்த இடத்துக்கு நியமிக்கப்ட்டார்.

முன்னேற்பாடே இல்லாமல் டொக்டர் ஹபீஸ் பதவி விலகியமை, நிச்சயமாக பல ஊகங்களுக்கு வழி வகுத்திருக்கும் அதேவேளை, எம்.எஸ்.தௌபீக் அவரது இடத்துக்கு நியமிக்கப்பட்டமையும் நிச்சயமாக எதிர்ப்பார்ப்புடன் இருந்த பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருப்பதை சமூக ஊடகங்கள் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. மு.கா.வின் மற்றைய தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு மற்றொருவர் நியமிக்கப்படுவாரா அல்லது சல்மானே தொடர்நதும் இருப்பாரா என்பதை மு.கா. இன்னமும் அறிவிக்கவில்லை.

தேசியப் பட்டியல் காரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலும் ஒரு பிரச்சினை உருவாகியிருக்கிறது. அக்கட்சிக்கும் ஐ.தே.க.விடமிருந்து ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது. கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அதற்கு புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவியை நியமித்தார். இதனை ஆட்சேபித்து கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீத் பல கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, கட்சித் தலைவர், அவரைப் பதவி நீக்கம் செய்தார். இப்போது பிரச்சினை நீதிமன்றம் சென்றுள்ளது.

தேர்தல் காலங்களில் வேட்பு மனுக்களுக்கான சண்டைகளையும் தேசியப் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான சண்டைகளையும் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெறுவதற்கான சண்டைகளையும் அந்த சண்டைகளின் போது சிலர் எடுக்கும் கடுமையான முடிவுகளையும் பார்க்கும் போது, முஸ்லிம் அரசியல் கொள்கை அரசியலை முற்றாக கைவிட்டு பட்டம் பதவிகளின் பின்னால் ஓடும் அரசியலாக மாறியிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

சாதாரண மக்கள் தத்தமது பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக வேண்டும் என்று நினைப்பது நியாயமாகலாம். ஆனால், பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பது சரியான கொள்கையா என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு சிந்திப்பதாக இருந்தால் தென் பகுதியையும் மலையகத்தையும் விட்டு விடலாமா, மு.கா.வை அல்லது மக்கள் காங்கிரஸை மனதில் வைத்துக் கொண்டு ஐ.தே.க.வுக்கு வாக்களித்த முஸ்லிம்கள் மலையகத்திலும் தென் மாகாணத்திலும் இல்லை எனக் கூற முடியாது. அந்த வாக்குகளுக்காகவும் கூடத் தான் அக் கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டன.

அவ்வாறு இல்லை என்று வைத்துக் கொண்டாலும், கொள்கை அடிப்படையில் பார்த்தால், எம்.பி.

ஒருவராகச் சிறந்த முறையில் செயற்படக் கூடிய எந்தவொரு முஸ்லிமும் அந்தப் பகுதிகளில் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. எனவே, பிரதேச அடிப்படையில் சிந்தித்து, தேசியப் பட்டியலுக்கு ஆட்களை நியமிப்பதானது சிறந்த கொள்கையாகக் கொள்ள முடியாது. குறிப்பாக, குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட யாப்பொன்றை முன்வைத்து ஆரம்பித்த மு.காவுக்கு அது பொருத்தமான கொள்கையாகாது. ஆனால், பிரதேச அடிப்படையில் சிந்திக்க மக்களைப் பழக்கியதும் இந்தக் கட்சிகளே. எனவே, அக் கட்சிகள் அதனை தொடர இப்போது நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

சமூக முன்னேற்றம் புறந்தள்ளப்பட்டு, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பட்டம், பதவிகள் எவ்வளவு முக்கியமாகியிருக்கின்றன என்பதை நாட்டில் இருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை எடுத்துக் காட்டுகிறது. தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் கட்சிகளை மட்டும் எண்ணிப் பார்த்தால், ஏழு கட்சிகள் இருக்கின்றன. பதிவு செய்யப்படாத கட்சிகளும் இருக்கின்றன. இவற்றில் எதுவும் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டவையா என்ற கேள்வியும் எழுகிறது. சில கட்சிகள் அமைச்சரவை அமைச்சுப் பதவிக்காக உருவாக்கப்பட்டவை என்பதும் சில கட்சிகள், தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்காததால் உருவாக்கப்பட்டவை என்பதும் பகிரங்க இரகசியங்கள்.

அனேகமாக இவை அனைத்தினதும் தலைவர்கள் மு.கா. ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ர‡பின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவே கூறுகின்றனர். ஆனால், 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி மு.கா.வை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்திய முதலாவது கூட்டத்தின் போது, இரண்டாவது முஸ்லிம் கட்சியொன்றை ஆரம்பிக்காதீர்கள் என்று முஸ்லிம் சமூகத்திடம் அஷ்ர‡ப் விடுத்த வேண்டுகோளையே அவர்கள் புறக்கணித்துள்ளார்கள். அதனை புறக்கணித்து மட்டுமல்லாமல், தேர்தல் காலங்களில் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கும் முகத்தில் அசிட் வீசும் அளவுக்கும் நிலைமை மோசமாகிறது.

மு.கா, பட்டம் பதவிகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல. அது வரலாற்று நிர்ப்பந்தமாகவே உருவாகியது. ஒரு புறம் தமிழ் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரின் அட்டகாசங்களும் மறுபுறம் அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியும் அதனை காண மறுத்ததன் காரணமாக, முஸ்லிம்கள் தனித்துக் குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்ததனால், அந்த வரலாற்று அவசியத்தின் வெளிப்பாடாகவே மு.கா. உதயமாகியது.

1980களில், முஸ்லிம் புத்திஜீவிகளையும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் அழிக்கும் திட்டமொன்றைப் புலிகள் செயற்படுத்தி வந்தனர். 1985ஆம் ஆண்டு கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இரண்டு நாட்களில் முஸ்லிம்களுக்கச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட வீடுகள், புலிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ இதனை பாரதூரமான விடயமாகக் கருதவில்லை. அப்போது, பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் இந்த அழிவை உலகறியச் செய்யும் விதமாக எந்தவொரு குரலும் எழவில்லை.

மறுபுறத்தில் அப்போதைய ஐ.தே.க. அரசாங்கம், அமெரிக்கத் தூதரகத்துக்குள் இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவொன்றை ஆரம்பிக்க அனுமதி வழங்கியிருந்தது. அதைப் பற்றி டொக்டர் எம்.சி.எம். கலீல், ஐ.தே.க. செயற்குழுவில் கேட்ட போது விரும்பினால் இருங்கள், இல்லாவிட்டால் வெளியேறுங்கள் என்று பதில் தான் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடமிருந்து கிடைத்தது. அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக கிழக்கில் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டமொன்றின் போது, ஒரு சிறுவன் சுடப்பட்டான். இவற்றை எதிர்த்துப் பேச ஓர் அரசியல் குரல் தேவைப்பட்டது. அந்தக் குரலாகவே மு.கா தோன்றியது.

இதனால் தான் மொஸாட் கமிஷன் முன் சாட்சியமளிக்கும் போது, மு.கா.வின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்ட மூத்த ஊடகவியலாளரும் ஐ.நா.வுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கவின் தந்தையுமான மேர்வின் டி சில்வா, 'நாம், தம்பாட்டில் இருந்த ஒரு சமூகத்தை, அரசியல் ரீதியாக உசுப்பிவிட்டோம்' என்று கூறினார். அரசாங்கம், இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவை ஆரம்பித்திருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அவர் அவ்வாறு கூறினார்.

இரண்டாவது, முஸ்லிம் கட்சியை ஆரம்பிக்காதீர்கள், இன்று ஆரம்பிக்கும் மு.காவின் தலைமை பிழையாக நடந்தால் அந்தத் தலைமையை தூக்கியெறிந்துவிட்டு, புதிய தலைமையை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று, மு.கா.வின் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது அஷ்ர‡ப் கூறிய போதிலும் அதுவரை கட்சியொன்றைப் பற்றிச் சிந்திக்காத சிலர், மு.கா ஆரம்பித்து சுமார் மூன்று மாதங்களில் மற்றொரு முஸ்லிம் கட்சியை ஆரம்பித்தனர். எம்.ஐ.எம். மொஹிதீனின் தலைமையிலான அந்த கட்சி தான் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி.

அக்காலத்தில் கொழும்பைத் தளமாகக் கொண்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகள், மு.கா.வை ஓர் இனவாதக் கட்சியாகவே பெரும்பான்மை சமூகத்தின் முன் குறிப்பிட்டனர். ஆனால், அவர்கள் மு.ஐ.வி.மு.வை இனவாதக் கட்சியாகக் குறிப்பிடவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்று அஷ்ரப் முஸ்லிம்களின் நிலைமையை எடுத்துரைத்த போது, அதனை நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவே அவர்கள் சித்திரித்தனர். இது அஷ்ர‡பை பாதித்தது போலும் அதனாலோ என்னவோ, அவர் பிற்காலத்தில் மு.கா. இயங்கும் போதே தேசிய ஐக்கிய முன்னணி என்ற மற்றொரு கட்சியையும் ஆரம்பித்தார்.

ஆரம்பத்திலிருந்தே அவர் பெரும் ஆளுமையுடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டார். முஸ்லிம் வாக்குகள் என்ற ஆயுதத்தைப் பாவித்து பல விடயங்களை அஷ்ர‡ப் சாதித்துள்ளார். 1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாஸவுடன் அவர் பேரம் பேசி, தேர்தல்களின் போது கட்சிகள் பெற வேண்டிய வெட்டுப் புள்ளியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தார். அவ்வாறு செய்யாவிட்டால், இன்று மு.கா. மட்டுமன்றி, ஏனைய எந்தவொரு சிறிய கட்சியும் நாடாளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ இருக்காது.

ஆனால், அக்காலத்திலும் முஸ்லிம் அரசியலில் சந்தர்ப்பவாதத்தைக் காணக்கூடியதாக இருந்தது. 1989ஆம் ஆண்டு பொதுத் தேரதலின் பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.காவுக்கு கிடைத்த ஆசனத்துக்காக இடம்பெற்ற சண்டை அதற்கு உதாரணமாகும்.

2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற அஷ்ர‡பின் மறைவை அடுத்து மு.கா. பல முறை பிளவுபட்டது.

அஷ்ரபின் மறைவை அடுத்து, ஹக்கீம் மு.கா. தலைவரானார். அப்போது அஷ்ரபின் குடும்பத்தினரும் குடும்ப நண்பர்களும் தேசிய ஐக்கிய முன்னணியை உயிர்ப்பித்து தனியாக நடத்திச் சென்றனர். 2001ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திலிருந்து, ஹக்கீம் விலகியதை அடுத்து கட்சியின் மேலும் சிலர், தேசிய ஐக்கிய முன்னணியில் சேர்ந்தனர். பின்னர், அமைச்சரவை அமைச்சுப் பதவி பெறுவதற்காகவும் தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்காததனாலும் மு.கா. தலைமையுடனான வேறு பிரச்சினைகள் காரணமாகவும் புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டன. தாம் கேட்கும் பதவிகள் கிடைக்காவிட்டால் கட்சி மாறுவது, இன்று முஸ்லிம் அரசியலில் பொதுத் தன்மையாகிவிட்டது. பொதுவாக அரசியலே பட்டம் பதவிகளுக்கானது என்ற நிலை உருவாகிவிட்டது.

சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதோடு, தேசிய ஐக்கியத்துக்கான பங்களிப்பை வழங்குவதே அஷ்ரபின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், இப்போது சொந்த நலனுக்காக சமூகத்தைப் பாவிப்பதே முஸ்லிம் அரசியலாக மாறிவிட்டது போலும்.

பொதுவாக ஏனைய கட்சிகளின் நிலைமையும் இதுவே என பலர் வாதிடலாம். உண்மை தான். சகல கட்சிகளினதும் நிலைமை இது தான். ஆனால், குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட கட்சி யாப்பைக் கொண்டு ஆரம்பித்த அரசியல் இந்த நிலைக்குத் தள்ளப்பட வேண்டுமா என்பதே கேள்வியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X