2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழகத்தில் தொடங்கியது தேர்தல் திருவிழா

Thipaan   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமன்றத் தேர்தல் களம் களை கட்டி விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், (அ.தி.மு.க) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் (தி.மு.க.), தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வேட்புமனுக்கள் வாங்கப்படுகின்றன. தேர்தலில் போட்டியிடுவோர் ராகு காலம், எம கண்டம் பார்த்து, நல்ல நாள், இராசியான திகதி பார்த்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்து வருகிறார்கள்.

அ.தி.மு.கவில் அதிக எண்ணிக்கையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதுவரை 20 ஆயிரம் பேர் வரை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டார்கள். வேட்புமனுக் கட்டணம் அதிக பட்சம் 11 ஆயிரம் ரூபாய்தான் என்பதும், நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றியும் அ.தி.மு.கவில் போட்டியிடுவோரின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறது. இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி அ.தி.மு.கவில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 3ஆம் திகதியுடன் முடிவதாக இருந்த வேட்புமனுத் தாக்கல், மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு பெப்ரவரி ஆறாம் திகதி வரை வேட்புமனுக்கள் அளிக்க அ.தி.மு.கவில் அனுமதி வழங்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் செய்யும் அமைச்சர்கள் அனைவருமே, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடவும் விருப்ப மனுவை அளித்துள்ளார்கள். '20 ஆயிரம் வேட்புமனு' என்பதே அ.தி.மு.கவின் சட்டமன்றத் தேர்தல் பிரசாரமாக துவங்கியிருக்கிறது. அக்கட்சி வெற்றி பெறும் கட்சி என்ற தோற்றத்தை இதன் மூலம் நன்கு திட்டமிட்டு அ.தி.மு.கவினர் மக்கள் மன்றத்தில் முன் வைத்து விட்டார்கள்.

இதற்கு போட்டியாக இருக்கும் கட்சி தி.மு.க., ஆனால் அக்கட்சியில் இன்னும் 2,500 வேட்புமனுக்கள் கூடத் தாக்கல் செய்யப்படவில்லை. வேட்புமனு 1,500 ரூபாய், அந்த மனுவுக்குக் கட்டணம் 25,000 ரூபாய் என்பது அக்கட்சியில் பெரும் முணுமுணுப்பை ஏற்படுத்தி விட்டது.

அதிக வேட்புமனுக் கட்டணம் ஒரு பக்கம் பிரச்சினை என்றால், இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த தோல்வியால் தி.மு.க.வினர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இது பற்றிக் கூறிய தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர், 'வேட்புமனு கட்டும் முக்கிய பிரமுகர்கள் தங்களுக்கு, கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு என்று மூன்று பேருக்கு வேட்புமனு கட்டுகிறார்கள்.

அதற்கே இவர்களுக்கு வேட்புமனுக் கட்டணம் 75 ஆயிரம் ரூபாய் ஆகி விடுகிறது. இது தவிர சிலர் கனிமொழி போட்டியிடவும் வேட்புமனுக் கட்டணம் செலுத்துகிறார்கள். அப்படி ஒருவர் இந்த நாலு பேருக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்தால் 1 லட்சம் ரூபாய் வேட்புமனுக் கட்டணம் ஆகி விடுகிறது. இதனாலும் தி.மு.க.வில், அ.தி.மு.க போல் ஆர்வத்துடன் வேட்பு  மனுக்களை தாக்கல் செய்யவில்லை' என்று கூறுகிறார்.

தி.மு.க.வில் உள்ளவர்களின் ஆர்வமின்மை, சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் கட்சித் தலைமை ஈடுபடும் வேகத்துக்கு இன்னும் கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ள இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் தயாராகவில்லை என்பதைக் காட்டுகிறது.

இந்த இரு கட்சிக்கும் போட்டியாக மூன்றாவது சக்தியாக வரத் துடிக்கும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, பெப்ரவரி 5 இலிருந்து வேட்புமனுக்கள் பெறத் தொடங்கி விட்டார்கள். அக்கட்சியினர் மத்தியிலும் இன்னும் ஆர்வம் வெளிப்படவில்லை. அதற்கு காரணம் 'யாருடன் கூட்டணி' என்பதும், அது மாதிரி அமையும் கூட்டணி 'வெற்றிக் கூட்டணியாக' இருக்குமா என்பதையும் வைத்துத்தான் தே.மு.தி.க.வின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை பெருகும்.

இன்றைய திகதியில் களத்தில் அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளும் வேட்புமனுக்களை பெற்றுக் கொண்டுள்ளன. 'அனைவருக்கும் மாற்று' என்ற களத்தில் நிற்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. அப்படி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளோரிடம் 'நேர்காணல்' நடத்தும் பணியில் பா.ம.க. நிறுவனர் டொக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டொக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மும்முரமாக இருக்கிறார்கள்.

ஆனால், இரு தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அமைதி காக்கின்றன. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திரமோடியை அழைத்து வந்து கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அக்கூட்டத்தில் அவர், 'அ.தி.மு.கவையும் விமர்சிக்கவில்லை.

தி.மு.க.வையும் விமர்சிக்கவில்லை' என்பது அக்கட்சியினருக்கே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை விட 'நல்லாட்சி தருவதே எங்கள் குறிக்கோள்' என்று பிரசாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க ஆட்சி பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது நடுநிலையாளர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர், கொச்சியில் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார். அதில் கூட, 'கூட்டணி அமையும் என்ற நோக்கில் பா.ஜ.க.வை பலப்படுத்தும் முயற்சியில் தொய்வு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அமித் ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்து விட்டார்.

'யாருடன் கூட்டணி' என்பது பற்றி அவரும் ஒரு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. இது போன்ற இக்கட்டில் பா.ஜ.க.வின் தமிழக தலைமை சிக்கியிருப்பதால் சொந்தக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்வது பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் 'கூட்டணி யாருடன்' என்ற கேள்வியை முடிவு செய்வதற்காக காத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்.

காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலைமை. விஜயகாந்தின் முடிவு தெரியாமல் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. தயங்கி நிற்கிறது. அதேபோல் பா.ஜ.க.வுக்கு உள்ளது போல்  அ.தி.மு.கவுடனும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விடுதலையை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், 'தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதே நோக்கம். கூட்டணி தேவைப்பட்டால் காங்கிரஸ் மேலிடம் அது பற்றி முடிவு செய்யும்' என்றதுடன் நிற்காமல், 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ராகுல் காந்திதான்' என்று தடாலடியாக வேறு அறிவித்து விட்டார். அகில இந்திய அளவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பேசப்படுகின்ற வேளையில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று இளங்கோவன் கூறியது காங்கிரஸ் காரர்களை மட்டுமல்ல, டெல்லி காங்கிரஸ் தலைமையையும் எரிச்சல் பட வைத்துள்ளது.

இதில் மிக முக்கியமானது, மக்கள் நலக்கூட்டணியின் மௌனம். ம.தி.மு.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் இதுவரை 'வேட்புமனுத் தாக்கல்' பற்றிய அறிவிப்புகளை எந்தக் கட்சியும் வெளியிடவில்லை.

மதுரையில் கூட்டணி சார்பாக மாநாடு நடத்தினார்கள். அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் எச்சூரி, சுதாகர் ரெட்டி ஆகியோரை அழைத்து வந்து பேச வைத்தார்கள். அதன் பிறகு திடீரென்று அவர்களின் கூட்டணிக்குள் 'முதல்வர் வேட்பாளர்' பிரச்சினை காட்டுத் தீ போல் பற்றி எறிகிறது. முதல் சுற்றில்; வைகோ முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சு கிளம்பி அது அடங்கியது.

இப்போது மதுரை மாநாட்டுக்குப் பிறகு 'தலித் முதலமைச்சர்' என்ற முழக்கத்தின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அக்கூட்டணியில் உள்ள இளம் தலைவர் திருமாவளவன் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் அக்கூட்டணியில் இருக்கின்ற மற்ற மூன்று கட்சிகளில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித்களின் நலனுக்காக தீவிரமாக போராடும் கட்சிகள்.

தி.மு.க.வுக்கும், அ.தி.மு.கவுக்கும் மாற்றாக உருவான 'மக்கள் நலக்கூட்டணியை' இப்போது முதலமைச்சர் வேட்பாளர் என்ற பிரச்சினை எழுந்து நடனமாடிக் கொண்டிருக்கிறது. அதனால் அக்கட்சிகளின் சார்பில் இன்னும் வேட்புமனுக்களை பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், எந்தத் திசையில் பார்த்தாலும் 'தேர்தல் காய்ச்சல்' தமிழகத்தில் பரவி விட்டது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு இயந்திரங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. மாவட்டங்களில் அந்த இயந்திரங்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

முக்கிய கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் தே.மு.தி.க, பா.ம.க. போன்ற கட்சிகளும் 'வேட்புமனுக்களை' பெற்று தேர்தல் திருவிழாவை துவக்கி வைத்து விட்டன. இனி வருகின்ற வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் 'தேர்தல் அட்டவணை' வெளியிட்டதும், தேர்தல் வான வேடிக்கைகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வீதிகளிலும் சாலைகளிலும் தேர்தல் பிரசாரங்கள் தமிழகத்தை முழுவதும் படு விமரிசையாக அரங்கேறத் தொடங்கி விடும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X