2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏவுகணைத் தடுப்பு நிலையத்தை ஆசியாவில் உருவாக்குகிறது அமெரிக்கா?

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 08 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செய்மதியொன்றை விண்ணில் ஏவியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள நிலையில், ஏவுகணைத் தடுப்பு நிலையமொன்றை ஆசியாவில் உருவாக்கும் நடவடிக்கையை, அமெரிக்கா விரைவில் ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

செய்மதியொன்றையே விண்ணில் ஏவியதாக வடகொரியா தெரிவிக்கின்ற போதிலும், அணுகுண்டைக் காவிச்செல்லும் ஏவுகணையைச் சோதிப்பதற்காகவே, இந்தச் செய்மதி ஏவப்பட்டதாக, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் சந்தேகிக்கின்றன.

இந்நிலையிலேயே, தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏவுகணைத் தடுப்புத் திட்டத்தை, கொரியத் தீபகற்பத்தில், விரைவிலேயே ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால், சீனாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக அது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கண்டத்தில், அமெரிக்காவின் இராணுவ விஸ்தரிப்புகளை சீனா எதிர்த்து வருவதோடு, தென்கொரியாவின் அதிகளவிலான வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடாக சீனா காணப்படுவதால், சீனாவின் எதிர்ப்பும், முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, வடகொரிய செய்மதி ஏவல் தொடர்பாக ஆராய்வதற்காக நியூயோர்க்கில் கூடிய ஐ.நா பாதுகாப்புச் சபை, வடகொரியாவின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுச் சோதனைக்கும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயற்பாடுகளை அச்சபை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .