2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குற்றவாளிகளை கைது செய்யவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், புஹாரி

குற்றவாளிகளை கைது செய்யவே மக்கள் எமக்கு இரு முறை ஆணை வழங்கினார்கள் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

யோஷித ராஜபக் ஷவின் கைது தொடர்பாக தோப்பூரில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துவெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் ஆட்கடத்தல்கள் சொத்துகுவிப்பு போன்ற ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை இல்லாமல் செய்து குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறியே நாம் மக்களிடம் ஆணையை கூறியிருந்தோம்.

இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவே மக்கள் எமக்கு இருமுறை ஆணை வழங்கினார்கள். கடந்த ஒருவருட காலமாக நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக் ஷ குற்றவாளியாக இனம்காணப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக் கைதை அரசியல் பழி வாங்கலாக சித்தரிப்பதுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சில சுதந்திர கட்சி அமைச்சர்களும் முயற்கின்றனர். இது அரசியல் பழி வாங்கல் என்றால் தேர்தல் முடிந்த ஒரே நாளில் பீல்ட் மாஸ்டர் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டதும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்டதையும் எவ்வாறு அழைப்பது.

இன்று அரசியல் பழிவாங்கல் என்று இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா, சிராந்தி ராஜபக் ஷவுக்கு நடந்த அநீதிகளின்போது சிவப்பு சால்வைகளால் கண்களை மறைத்து கொண்டிருந்தனர்.

எமது அரசாங்கம் அரசியல் ரீதியாக பழிவாங்க நினைத்திருப்பின் இன்று அரசியல் பழிவாங்கல் என கோஷம்போடும் பலர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனே வெளிக்கடைக்குள் தள்ளப்பட்டிருப்பர். கைது செய்யப்பட முன் ஊழல்வாதிகளை இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர் கைது செய்தால் அரசியல் பழி வாங்கல் என கூறுகின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்த்து நிதி மோசடி பிரிவை மூடுமாறு பெரும்தொகையான தேங்காய்களை உடைத்துள்ளனர். இதற்கான தேங்காய்கள் அரச காணி ஒன்றில் இருந்து திருடப்பட்டதாக அறியக்கிடைத்தது. திருடர்களை காப்பாற்ற திருட்டு தேங்காய் உடைக்கிறார்கள்.

இதை பணம் கொடுத்து வாங்கினால் குருநாகலிலுள்ள தேங்காய் வியாபாரிகளுக்காவது சிறிது இலாபம் கிடைக்கும் குருநாகலில் இருந்து அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்தில் வாய்மூடி இருப்பவர்கள் இந்த உதவியையாவது அம்மக்களுக்கு செய்திருக்கலாம்.

ஊழல்வாதிகளும் கொலைகார்களும் எவ்வாறான சதித் திட்டங்கள் தீட்டினாலும் நல்லாட்சியின் பயணத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வளமான அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்க ஜனாதிபதி, பிரதமரின் கீழ் மிகுந்த அர்ப்பணிப்புக்களுடன் செயற்படுகிறோம். இதன் பயனை விரைவில் மக்கள் அடைவார்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .