2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிதி மோசடி விசாரணைப் பிரிவை கலைக்கனுமென்று கூறுவதை கண்டிக்கிறேன்: முபாறக்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நிதி மோசடி விசாரணைப் பிரிவைக் கலைக்க வேண்டுமென்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கூறுவதை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடிப் பிரதேச இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'நாட்டில் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வந்த ஊழல் நிறைந்த ஆட்சியை நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் மக்கள் தோற்கடித்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். நல்லாட்சியை மக்கள் ஏற்படுத்தியதன் நோக்கமானது, கடந்த காலத்தில் மக்களின்; பணத்தை மோசடி செய்தவர்களை விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்று மக்களும் நல்லாட்சியை விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்துறை சார்ந்தவர்களும் பல்வேறுபட்ட தொழிற்சங்கங்களும் ஊழலுக்கு எதிரான பல அமைப்புகளும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. அதன் அடிப்படையில் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் சட்டத்துறையில் முதிர்ச்சி பெற்றவர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட நிதி மோசடி விசாரணைப் பிரிவை உடனடியாகக் கலைக்க வேண்டுமென்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோருவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இந்த நல்லாட்சி அரசாங்கமானது கட்சி வேறுபாடுகளின்றி குற்றம் இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது. இதற்குக் கடந்தகால சம்பவங்கள் உதாரணமாகும். இதனை நாட்டு மக்களும் நன்கறிவார்கள். ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் பலர் உண்மைக்குப் புறம்பாக குற்றம் சுமத்தப்பட்டு அநீதியாக தண்டிக்கப்பட்ட காலகட்டத்தில் அந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத இராஜாங்க அமைச்சர், இன்று குற்றவாளிகளை விசாரணை செய்து சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கக்கூடாதென நிதி மோசடி விசாரணைப் பிரிவை கலைக்க கோருவது யாரோ சில குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு காட்டுகின்ற விசுவாசமேயாகும்.

எனவே, தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சராக இருந்துகொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமென பல அர்ப்பணிப்புக்கு மத்தியில் செயலாற்றும் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் காரியாலயங்களை மாவட்ட மட்டதில் அமைத்து ஊழலுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி மக்கள் வழங்கிய ஆணையை பொறுப்போடு நிறைவேற்றி தண்டனை பெற்றுக்க கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X