2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான தாக்குதல்களை நிறுத்துகிறது கனடா

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 09 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்களை, பெப்ரவரி 22ஆம் திகதியுடன் நிறுத்துவதாகவும், தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் போர் விமானங்கள் ஆறையும், நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவரவுள்ளதாகவும், கனடா அறிவித்துள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, கடந்தாண்டு இடம்பெற்ற தேர்தலில், பெரும்பான்மையுடன் கூடிய வெற்றியைப் பெற்றதோடு, அவர்களின் தேர்தல்கால வாக்குறுதிகளில் ஒன்றாக, ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான விமானத் தாக்குதல்களிலிருந்து விலகுவது காணப்பட்டது.

எனினும், அண்மைக்கால கருத்துக்கணிப்புகளின் படி, விமானத் தாக்குதல்களைத் தொடர்வதற்கு, கனேடிய மக்கள் விருப்பம் கொண்டிருப்பதாகத் தெரியவந்தது. மூன்றிலிரண்டு பங்கு மக்கள், விமானத் தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அது விரிவாக்கப்படவும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

ஆனாலும், தனது தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றுமுகமாக, விமானத் தாக்குதல்களிலிருந்து கனடா விலகுவதாக, அவர் தெரிவித்தார். குறுகிய கால இராணுவ, பிராந்தியங்கள் தொடர்பில்  விமானத் தாக்குதல்கள் நன்மையானவை என்ற போதிலும், நீண்டகால நோக்கில், உள்ளூர் சமூகங்களின் நிலைத்த தன்மைக்குப் பொருத்தமற்றது என, அவர் தெரிவித்தார்.

'பழைமை விரும்பிகள் என்று எங்களை அழைத்தாலும் பரவாயில்லை, ஆனால், எங்கள் எதிரிகள் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறார்களோ, அதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்களை உயர்த்த வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள், அச்சத்தில் வாழ விரும்புகிறார்கள், ஏனையோரைச் சந்தேகத்துடன் பார்க்க வேண்டுமென எதிர்பார்க்க்கிறார்கள்" எனத் தெரிவித்தார். அத்தோடு, கொடுமையான பயங்கரவாதத்துக்கான பதில், வெறுப்பு அன்று எனவும், சிந்தனையே எனவும் அவர் குறிப்பிட்டார்.

கனடாவின் இந்த வெளியேற்றம், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணிக்கு, பாரிய இழப்பாகக் கருதப்படுகிறது. அவுஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், பிரித்தானியா, டென்மார்க், பிரான்ஸ், ஜோர்டான், நெதர்லாந்து, சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரவு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் இக்கூட்டணியில், அதிக பங்களிப்புகளை வழங்கிய நான்காவது நாடாக, கனடா காணப்பட்டது.

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .