2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதுக்குடியிருப்பு கிராமத்தில் காணி அபகரிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, சூரிய கட்டைக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எல்லைக்கற்களை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ள போதும், குறித்த காணிகள் உரிய முறையில் எல்லையிடப்பட்டுள்ளதா என்பது குறித்து, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் வருகை தந்து பார்வையிடவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அவ்விடயம் தொடர்பாக அக்கிராம மக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

நானாட்டான், புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்களை நில அளவை திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட அதிகாரிகள் கடந்த 3ஆம் திகதி வருகை தந்து பார்வையிட்டனர்.

குறித்த எல்லைக்கற்கள் சரியான முறையில் போடப்பட்டுள்ளதாக வருகை தந்தவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

ஆனால், குறித்த காணிகளை உரிய அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்பது எமக்கு மிகவும் வேதனையளிக்கின்றது.

குறித்த காணிகளுக்குள் தனி நபர்கள் 4 பேர் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
குறித்த தனி நபர்களுக்கு அக்காணிகளை கடந்த 1989ஆம் ஆண்டளவில் பேமிற் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால், எமது மக்களும் இங்கு குடியிருந்துள்ளனர். மேற்குறித்த தனி நபர்கள் 4 பேருக்கும் கடந்த 1989ஆம் ஆண்டு பேமிற் வழங்கப்பட்டதன் பின் அவர்கள், தாம் பராமரிப்பு செய்த காணிகள் என்று கூறி, இக்கிராம மக்கள் குடியிருந்த மேட்டு நிலக்காணிகளை உரிமை கோரி வருகின்றனர்.

இந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா சென்ற நிலையில், குறித்த 4 பேரும் இக்காணிகளில் மண் அகழ்வு மேற்கொண்டு தற்போது ஏக்கர் கணக்கில் வயற்காணிகளாக ஆக்கியுள்ளனர்.

இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு  மக்களின் காணிகளை தங்களுடையது என உரிமை கோரி வருகின்றனர்.

ஆனால், எமது கிராமத்தில் உள்ள முதியோர்கள் கருத்து தெரிவிக்கையில், அவர்களுக்கு கால்நடைகள் பராமறிப்பு செய்வதற்கு மேட்டு நிலக்காணியில் ஒரு ஏக்கர் வீதம் 4 பேருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், இக்கிராமத்தில்  திட்டமிட்ட ஒரு காணி அபகரிப்பே நடந்தேரியுள்ளது.

எனவே இக்கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இக்கிராம மக்களுக்கு உரிய காணிகளை மீட்டுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .