2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போர்க்குற்ற விசாரணை: பின்வாங்குகிறாரா ஜனாதிபதி?

Thipaan   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைன், கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்தார். ஹுசைனுக்கு முன்னர் இருந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது, அதற்கு எதிராகப் பலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இம்முறை ஹுசைனின் விஜயத்துக்கு அவ்வாறான பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. சிறியதோர் எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்கப்பட்டது.

எனினும், நாடாளுமன்றத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்

கோஷ்டி, அதாவது, அரசாங்கம் செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்க்கட்சி, போர்குற்ற விசாரணை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தொன்றைப் பாவித்து, ஹுசைனின் விஜயத்தின் போது அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாக்க முயற்சி செய்தது. ஆனால், அவர்களது முயற்சி மற்றொரு விடயத்தினால் திசை திருப்பப்பட்டது.

அதுதான் சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக மஹிந்தவின் இரண்டாவது மகன் யோஷித்த கைது செய்யப்பட்டமை. அது அவர்களுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானதாகியது.

உண்மையிலேயே, மனித உரிமை மீறல்கள் தொடர்பான உத்தேச விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பைப் பற்றி அண்மையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டு இருந்த கருத்தானது, நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அரச தலைவர்கள் மற்றும் பல சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களை ஆச்சரியத்துக்குள்ளாகிது. ஏனெனில், அவ்வாறான விசாரணைகள் நடைபெறும் போது, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை விடயம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, வெளிநாட்டு நீதிபதிகள் அவற்றில் கலந்து கொள்வார்கள் என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.

ஜனவரி மாதம் 21ஆம் திகதி, பி.பி.சி. சிங்களச் சேவையான சந்தேசயவுடன் நடத்திய நேர்காணல் ஒன்றின் போது ஜனாதிபதி இவ்வாறு கூறினார்: 'இந்த விடயத்தில், வெளிநாட்டு தலையீட்டுக்கு, நான் ஒருபோதும் இணங்குவதில்லை. எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள எம்மிடம் தேவைக்கு மேலதிகமாகவும் நிபுணர்கள் மற்றும் அறிவுள்ளவர்கள் இருக்கிறார்கள். இந்த விசாரணை, நாட்டின் சட்டத்தை மீறாத வகையிலான உள்நாட்டு விசாரணையாக இருக்க வேண்டும். நான் இந்த விடயத்தில் நீதித்துறையின் மீதும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். தேசிய நலன் சார்ந்த விடயங்களில், சர்வதேச சமூகம் கவலைப்படத் தேவையில்லை.'

கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது, இதற்கு முன்னர் அப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளைப் போல் இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஒன்றல்ல. அது இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும். அதேவேளை, மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து விலகியது முதல், மைத்திரிபால ஒரு போதும் இதுபோல் தாம் ஏற்றுக் கொண்ட ஒரு கருத்தை நிராகரித்ததில்லை. அந்த நிலையில், பிரேரணையிலுள்ள ஒரு விடயத்தை நிராகரிப்பதைப் போல், ஜனாதிபதி கருத்து வெளியிட்டு இருந்தமை பலரை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

இக்கருத்து, நாட்டின் அதி உயர் மட்டத்திலிருந்து வெளியானதை அடுத்து சிலர் இதனை அரசாங்கத்தில் கொள்கை மாற்றமாக கருதினர். வேறு சிலர் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சிங்கள மக்களைக் குறியாக வைத்துக் கூறப்பட்ட ஒரு கருத்தாக கருதினர். இதுபோன்ற உள்ளூர் வாக்காளர்களை மனதில் வைத்துக் கொண்டு வெளிநாடுகளை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் கருத்துக்களை மஹிந்த அடிக்கடி கூறுவது ஞாபகத்துக்கு வருகிறது.

எனினும், இந்த விடயத்தில் எந்த விதமான நெருக்குவாரங்கள் மத்தியில் ஜனாதிபதி வாழ்கிறார் என்பதை விளங்கிக் கொண்டால், அவர் ஏன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார் என்பதை ஓரளவுக்கு ஊகிக்லாம்.

ஜனாதிபதி தான், இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பிரதான கட்;டளை அதிகாரியாகக் கடமையாற்றுகிறார். எனவே, அப்படைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து அப்படைகளை பாதுகாப்பது அவரது கடiமாகும். கடந்த வருடம் ஜெனீவா பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், முப்படைகளின் முன்னாள் தளபதிகளும் புலிகளுக்கு எதிரான போர்க்காலத்தில் போர் முனையில் கடமையாற்றிய பிராந்தியத் தளபதிகளும் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் பாதுகாப்பு படைகளினதும் ஜனாதிபதியின் அரசியல் எதிரிகளினதும் நிலைப்பாடு என்ன என்பதை தற்போது ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பான வழக்கு விசாரணையைப் பார்ததால் விளங்கிக் கொள்ள முடியும்.

அந்த வழக்கில் சில இராணுவ அதிகாரிகளே சந்தேகநபர்களாக இருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய இராணுவ தளபதி போதிய ஒத்துழைப்பைத் தரவில்லை எனக்கூறி, அதற்காக இராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் கூற நீதவான் நீதிமன்ற நீதவான் தள்ளப்பட்டு இருந்தார்;. போரோடு சம்பந்தப்படாத ஒரு விடயத்துக்காக இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இராணுவம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவதை அவர்கள் எவ்வாறு எதிர்ப்பார்கள் என்பதை ஊகித்துப் பார்க்க வேண்டும். எனவே, ஜனாதிபதியை சந்தித்த தளபதிகளும் நெருக்குவாரத்தை கொடுத்திருக்கலாம்.

மறுபுறத்தில், ராஜபக்ஷ ஆதரவாளர்கள் இந்த வழக்கை தேசப்பற்றோடு சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது, இராணுவ வீரர்கள், போர் வீரர்களாவர், நாட்டைக் காப்பாற்ற அவர்கள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்யத் துணிந்தவர்கள். எனவே, அவர்களை சிறையில் அடைக்க இடமளிக்க முடியாது. அது தேசத்துரோகமாகும் என்பதே அவர்களது வாதமாகும். உண்மையிலேயே, இது புலிகளுக்கு எதிராக இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு அல்ல. இது, இராணுவ வீரர்கள், சில அரசியல்வாதிகளின் தேவைக்காக செய்த குற்றமாகவே கூறப்படுகிறது. எனவே, சிங்கள மக்களின் கண்ணோட்டத்திலும் இது தேசப்பபற்றோடு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அண்மையில் போர்காலத்தில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காகவும் சில இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள். இராணுவ வீரர்கள் என்பதற்காக அது போன்ற செயல்களும் தேசப்பற்று என்று கூற முடியாது. ஆனால், இது போன்ற நெருக்குதல்களும் ஜனாதிபதி மீது செலுத்தப்படுகின்றன.

குறிப்பாக போர்க் கால சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்தில், இலங்கையின் நீதித்துறையின் நம்பகத்தன்மையைப் பற்றி வெளிநாட்டுத் தலைவர்களும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் முன்வைக்கும் வாதங்களிலும் உண்மை இல்லாமல் இல்லை. முக்கியமான 17 சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, மஹிந்த ராஜபக்ஷ, உதலாகம ஆணைக்குழுவை 2006ஆம் ஆண்டு நியமித்தார். அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் கே.என்.பகவதியின் தலைமையில், சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்தார். ஆனால், அக்குழுவினர் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு, 2008ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினர்.

அதேபோல் போர் முடிவடைந்து ஒரு வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். போர் கால சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறலுக்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததனால், தாமாக நடவடிக்கை எடுப்பதற்காக, மர்சூக்கி தருஸ்மான் தலைமையில் ஒரு குழுவை பான் கி மூன் நியமித்தார்.

இவை, பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் இலங்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிய பல சம்பவங்களில் இரண்டாகும். எனவேதான் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை நிறைவேற்றப்படு முன் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 'கடந்த கால முறிந்த வாக்குறுதிகள், பழைய அனுபவங்கள் மற்றும் பின்னோக்கிச் செல்லல் ஆகியவற்றைக் கொண்டு எம்மை மதிப்பீடு செய்யாதீர்கள்' எனக் கூறினார்.

பின்னர், இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் பிரேரணை நிறைவேறிய பின் அரச தலைவர்களும் அரச ஊடகங்களும் அதனை பாதுகாப்புப் படைகளின் கௌரவத்தைக் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக வர்ணித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிவிட்டு வரும் போதும் இதே அர்த்தம் கொண்ட வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள் பல பகுதிகளில் காணப்பட்;டன. அதேவேளை, மனித உரிமை விடயத்தில் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் காரணமாக, இப்போது உலகில் சகல நாடுகளும் இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பதாக அரச தலைவர்கள் கூறிய வண்ணமே இருக்கிறார். எனவே தான், ஜனாதிபதியின் கூற்று வித்தியாசமாக தெரிகிறது.

இந்தக் கூற்று கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளோடு செயற்பட்ட முறையை நினைவுபடுத்துகிறது. அவரும் நாட்டுக்குள் ஒன்றைக் கூறுவார். வெளிநாடுகளுக்கு மற்றொன்றை கூறுவார். அல்லது நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல் உலக நாடுகளையும் ஏமாற்ற முயற்சிப்பார்.

உதாரணமாக, உதலாகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை கூற வெளிநாட்டு நிபுணர்களை அவர் நியமித்தார். அவரது சட்ட மா அதிபரான காலஞ்சென்ற சி ஆர் டி சில்வா, அந்நிபுணர்களுடன் மோதினார். மஹிந்த பொறுப்புக்கூறலைப் பற்றி, பான் கி மூனுடன் கூட்டறிக்கை வெளியிட்டார். பின்னர், அவர் அந்த வாக்குறுதியை மீறியதால் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பாக பிரேரணைக்கு மேல் பிரேரணை நிறைவேற்றியது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் செல்வதாக அவர் இந்தியாவுக்கு வாக்குறுதியளித்தார். பின்னர், தாம் அவ்வாறு வாக்குறுதி அளிக்கவில்லை எனக் கூறினார். பொறுப்புக் கூறல் விடயத்தில் வெளிநாட்டு தலையீட்டுக்கே இடமில்லை எனக் கூறினார். பின்னர், பரணகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன்ட் டி சில்வாவின் தலைமையில் வெளிநாட்டு குழுவொன்றை நியமித்தார்.

சுருக்கமாக கூறுவதாக இருந்தால், ஜனாதிபதி உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இரண்டு விதமான நெருக்குவாரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையிலேயே, வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பாக மேற்கண்டவாறு கூறியிருக்கிறார் என ஊகிக்கலாம்.

ஜனாதிபதி, ஜெனீவா பிரேரணைக்கு மாறான விதத்தில் கருத்து வெளியிட்டதை அடுத்து ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட வேண்டியதாயிற்று. இது ஒரு வகையில் ஜனாதிபதியின் கௌரவத்தையும் பாதுகாத்துக் கொண்டு வெளிநாட்டுத் தலைவர்கள் மத்தியில் பொய்யர்கள் என்ற பட்டத்தை பெறாமல் இருப்பதற்காக எடுத்த முயற்சியாகும்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக் காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ, பிரதமருடன் நடத்திய நேர்காணல் ஒன்றின் போது, ஜனாதிபதியின் கூற்றைப் பற்றி பிரதமரிடம் ஸ்னோ கேட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் 'நாங்கள் அதனை (வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய விடயம்) நிராகரிக்கவில்லை. நாங்கள் ஜெனீவா பிரேரணை விடயத்தில் எமது பொறுப்பை நிறைவேற்றுவோம்' என்றார்.

பின்னர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குக் கருத்து தெரிவித்த பிரதமர், நாங்கள் ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகவில்லை, வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்வார்கள்' மீண்டும் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பொதுநலவாள ஆசிய பிராந்திய கருத்தரங்கில் உரையாற்றிய போதும் பிரதமர் தமது நிலைப்பாடடை வலியுறுத்தினார். 'உங்கள் நாடுகளில் போலவே வெளிநாட்டு நீதிபதிகள் இங்கும் இருக்க முடியாது. ஆனால், அதன் அர்த்தம் அவர்கள் சமபந்தப்பட்ட விடயங்களில் 'கலந்து கொள்ள' முடியாது என்பதல்ல.' என்றார்.

ஜெனீவா பிரேரணையிலும் கலந்து கொள்ளல் என்ற பதமே உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமர் கூறுவது பிரேரணைக்கு முரணானது அல்ல என்று வாதிடலாம். ஆனால், அவர் கூறுவதை நடைமுறையில் விளங்கிக் கொள்ள முடியாது. போர்க் குற்ற விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நடைமுறையில் பார்த்தே தான் விளங்கிக் கொள்ள வேண்டும் போல் தான் இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X