2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தமிழில் தேசிய கீதம்: பேசப்பட்டவையும் உணர்த்தியவையும்

Thipaan   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த வியாழக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் ஆரம்பமாகி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் நிறைவுக்கு வந்தன.

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட தருணத்தில் நிகழ்வு அரங்கிலிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உணர்ச்சிவப்பட்ட நிலையில் 'கசிந்துருகி கண்ணீர் மல்கியதாக' ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.

இலங்கையின் முதலாவது சுதந்திர தினம், கொழும்பில் (தற்போதைய சுதந்திர சதுக்கம் பகுதியில்) 1949, பெப்ரவரி 04ஆம் திகதி அப்போதைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் நடைபெற்றது. மாலை 04.00 மணியளவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகள், சுமார் 75 நிமிடங்களின் பின்னர் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நிறைவுக்கு வந்தன.

தற்போது நடைமுறையிலுள்ள 'ஸ்ரீ லங்கா மாதா (ஸ்ரீ லங்கா தாயே)' என்று ஆரம்பிக்கும் தேசிய கீதம் ஆனந்த சமரக்கோனினால் 1940களில் எழுதப்பட்டாலும், 1950ஆம் ஆண்டே இலங்கை அரசினால் அங்கிகரிக்கப்பட்டது. அதனை, புலவர் மு.நல்லதம்பி 1950ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார். ஆக, 1949ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் எது, அதன் தமிழ் வடிவம் எப்படியிருந்தது என்கிற விடயம் ஆய்வுக்குரியது.

இந்த வரலாற்றுப் பதிவுகள் தாண்டி, 'தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுதல்' என்கிற விடயம் தொடர்ச்சியாக முக்கியமான உரையாடலாக தென்னிலங்கை அரசியலரங்கில் கடந்த சில காலமாக இருந்து வந்தது. கடும்போக்கு சிங்களவாதிகள், தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுதலை, விடுதலைப் புலிகளின் தனி ஈழக் கோரிக்கைக்கு ஒப்பான விடயமாக முன்னிறுத்தினர். அதற்கு அரசியலமைப்பு என்கிற விடயத்தையும் கையிலெடுத்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகூட, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது என்றார். சுமார் 10 வருடங்களாக நாட்டின் ஆட்சியாளராக இருந்த ஒருவருக்கு, தேசிய கீதம் தொடர்பில் அரசியலமைப்பு என்ன விடயத்தை முன்வைக்கின்றது என்பது தெரியாதா?, நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனாலும், தமிழில் தேசிய கீதம் என்கிற விடயத்தைப் பெரும் பிரச்சினையாக்கி அதில் குளிர்காய நினைக்கின்றார். குறுகிய நலன் சார்ந்து மாத்திரம் இலங்கை அரசியல் கையாளப்பட்டு வந்திருக்கின்றது என்பதற்கும், அதுவே நாட்டினை தொடர்ந்தும் இக்கட்டின் கீழ் வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கும் இவை உதாரணங்கள்.

குறுகிய நலன் சார் அரசியல் முனைப்புக்களே, இலங்கையின் இனமுரண்பாடுகள் தொடர்பிலான உணர்திறனை பெரும்பான்மையின சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலிருந்தும் தவறியிருக்கின்றன. சாதாரண மக்கள் அரசியல்வாதிகளினாலும், ஊடகங்களினாலும் அவர்கள் சார் அரசியலுக்காக மாற்றப்படுகின்றார்கள். அந்த அரசியல் பெரும்பாலும் ஆட்சி அதிகாரம் சார்ந்து இருப்பதால் உணர்ச்சியூட்டல்களின் மூலம் ஆளுமை செலுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

அதுதான், சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்ட போது, சிங்களப் பெரும்பான்மை இளைஞர்கள்- யுவதிகள் மத்தியில் அதிருப்தியை உண்டு பண்ணுமளவுக்கான விடயங்களை மேல் மட்டத்துக்குக் கொண்டு வந்தது

பாரதூரமானதாக இருந்தது. அது, தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரிக்கைகளை பிரிவினைக் கோரிக்கையாக கொள்வதற்கான எண்ணப்பாட்டின் பிரதிபலிப்புக்கள் சார்ந்தும் இருந்தன.

இலங்கையில் இரு பெரும் மக்கள் கூட்டங்களையும் ஒரு தரப்பின் பிரச்சினையை மற்றத்தரப்பு உணராதவாறு பார்த்துக் கொள்வதில் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் குறியாக இருந்திருக்கின்றன. இதுதான், இரு சமூகங்களிடையேயும் இவ்வளவு இடைவெளி உருவாகியிருப்பதற்கான காரணமாகவும் இருந்தன. அதற்கு, சிங்கள பெரும்பான்மைத் தளம் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிராக விடுத்த அதிர்வுகளைக் கொள்ள முடியும்.

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது தொடர்பில், இரா.சம்பந்தன் கீழ்கண்டவாறு கூறுகின்றார்.

'நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கச் செய்தமை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் நன்மை தரும் விடயம். தேசிய கீதம், ஏற்கெனவே இடம்பெற்ற சுதந்திர தினத்தின் போது தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்றே. மீண்டும் அதனைத் தொடக்கியிருந்தது மகிழ்ச்சிதான். அது, ஆச்சரியப்படும் ஒன்றல்ல. தமிழ் மக்கள் பிறர் தயவில் வாழ வேண்டியவர்களல்ல'.  

உணர்ச்சிவசப்படுதல்களைத் தாண்டி, அரசியல் அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதற்கு இரா.சம்பந்தனின் இந்தக் கூற்றினைக் கொள்ள முடியும்.  ஏனெனில், தேசிய கீதம் இசைக்கப்பட்ட தருணத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கசிந்துருகி கண்ணீர் மல்லிய அவர், அதனை அரசியல் உரையாடலாக முன்வைக்கும் போது, உணர்ச்சிவசப்படும் தருணத்தினைத் தாண்டி வந்து பேசியிருக்கின்றார்.

உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. அதில் பிரச்சினையில்லை. ஆனால், உணர்ச்சிவசப்படும் தருணங்கள் தொடர்பில் மிகுந்த அவதானமும், நிதானமும் அவசியம். ஏனெனில், அந்தத் தருணத்தில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும், அது தாக்கம் செலுத்தும் அரசியல் முடிவுகளும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விடயம், தமிழ் சமூக உரையாடல் பரப்பில் இன்னொரு வகையான பிரதிபலிப்பையும் காட்டியது. அதாவது, தமிழ் இளைஞர்கள்- யுவதிகள் பலரும் ஒற்றையாட்சி இலங்கைக்குள் வாழ்வதற்கான பெருமையினையும், இறுமாப்பினையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்ட தருணத்தில் உடல் சிலிர்த்தாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டார்கள். 

இந்த விடயம் என்ன செய்தியை சொல்கின்றது, இதன் போக்கு எதனை நோக்கியதாக இருக்கின்றது என்பது பற்றியும் ஆராய வேண்டும்.

தமிழ்த் தேசியப் போராட்டங்கள் என்ன காரணங்களுக்கான ஆரம்பித்தன, அதன் அடிப்படைக் கோரிக்கைகள் எது சார்ந்து தோற்றம் பெற்றன என்பது தொடர்பில் தமிழ் இளைய தலைமுறையில் குறிப்பிட்டளவானர்களுக்குத் தெரியாது. அது, தொடர்பிலான அறிவூட்டலை தமிழ்த் தேசிய அரசியல் தளமும் ஊடகத் தளமும் ஊட்டுவதில்லை.

தமிழ் இளைய தலைமுறையின் அரசியலும் அது சார்ந்த கருத்தியலும் தாம் வாழும்- ஊடாடும் களம் சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் கருத்தியல் அப்படி உருவாகுவது இயல்பானது. ஆனால், அதன் உண்மையான அடிப்படைகளைத் தவிர்த்து அல்லது அதனை உணர்ந்து கொள்வதைத் தவிர்த்து போலியான ஒன்றுக்;குள் செல்வதற்கு

தூண்டுவது எது? அவ்வாறான நிலை உருவாக்கப் போகும் அரசியல் ஏற்படுத்தும் பின்விளைவு எவ்வகையானது என்பது பற்றியெல்லாம் அந்தத் தரப்பு இளைஞர்கள் யோசிப்பதில்லை.

 'ஒரே நாடு, ஒரே தேசம்' என்கிற கோட்பாட்டை தமக்குள் ஏற்றி வைத்துக் கொள்ள முனையும் தலைமுறையொன்று தமிழ்ச் சூழலிலும் உருவாகிவிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை கொண்டாடிய தமிழ் இளைய தலைமுறை அதையே பெரும்பாலும் பிரதிபலித்தது.

ஒன்றுபட்ட நாட்டுக்குள் எமது தமிழ்த் தேசிய உரிமைகள், இறைமைகள் சார்ந்த தேசத்தினைக் கோருவதற்கு உரித்துடையர்கள் என்கிற விடயம் தொடர்ந்தும் அறிவூட்டப்பட வேண்டும். ஏனெனில், இலங்கையில், 'ஒரே நாடு ஒரே தேசம்' என்கிற விடயம் என்பது மறைமுகமாக பௌத்த சிங்கள தேசியத்தினை நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

பல்சமூகங்கள் வாழும் இலங்கையில், ஒரு தரப்பின் இறைமையையும், அது சார்ந்த அதிகாரத்தினையும் மற்றத் தரப்புக்களின் மீது இறக்கி வைத்தல் என்பது அரசியல் அத்துமீறலாகும். அதனை, உணராமல் அதுவே எமது வேதம் என்கிற ரீதியில் கொண்டாடிக் கொண்டிருப்பது அடிமை சாசனத்தினை வேறு வடிவில் எழுதிக் கொடுப்பதற்கு ஒப்பானது.

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 'சிங்கள மக்கள் ஓர் அடி எடுத்து வைத்தால், தமிழ் மக்கள் பத்து அடி எடுத்து வைத்து நல்லிணக்க முனைப்புக்களை நோக்கி வருவார்கள்' என்றார். யாழ். நாகவிகாரை சென்று வழிபாடுகள் நடத்தியும் தன்னுடைய நல்லிணக்க முனைப்புக்களை அவர் வெளிப்படுத்தினார்.

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை நல்லிணக்கத்துக்கான பெரும் முனைப்பு என்று கொள்ள முடியாது. மாறாக, இருந்த ஒன்றை கைவிட்ட தரப்பு மீள நடைமுறைப்படுத்தியிருப்பது சார்ந்தது. அது, தவறினைச் சரி செய்வதற்கு ஒப்பானது மட்டுமே. மாறாக, அது, பெரும் விட்டுக்கொடுப்பு அல்ல. இன நல்லிணக்கம் என்பது இரு தரப்பும் சம அளவிலான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து மேற்கொள்ளப்பட வேண்டியது. மாறாக, சி.வி.விக்னேஸ்வரன் சொல்வது போல ஓர் அடிக்கு பத்தடி எடுத்து வைத்து செய்யப்பட வேண்டியவை அல்ல.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X