2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இராணுவ புலனாய்வாளருக்கு 17 வருடகால கடூழியச் சிறை

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

மீசாலை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் சக புலனாய்வாளரை சுட்டுக்கொன்ற முதலி காமிகே எதிரிபால என்பவருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், புதன்கிழமை (10) தீர்ப்பளித்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி, மீசாலை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குஞ்சிஹே சந்திரிசிறி பேமரட்ண என்பவர் உயிரிழந்ததுடன், கவின்த ராஜகருண விக்கிரமசேகர என்பவர் படுகாயமடைந்தார்.

மேற்படி முகாமில், சம்பவம் நடைபெற்ற தினத்தன்று புலனாய்வாளர்கள் இணைந்து மதுபோதையில் சீட்டாடியுள்ளனர். இதன்போது, சுட்டவருக்கும், உயிரிழந்தவிருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றி கைலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, சக புலனாய்வாளர்கள் அவர்களை தடுத்து, சீட்டாட்டத்தை கைவிட்டு அனைவரும் நித்திரைக்குச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, இரவு 11.45 மணியளவில் கொலையாளி, தன்னுடன் கைகலப்பில் ஈடுபட்டவரை ரி - 56 ரக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு புலனாய்வாளர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தான் மதுபோதையில் இருந்தமையால், கொலை நடந்த தினத்தில் தனக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எதுவும் தெரியாது என கொலையாளி மன்றில் கூறியிருந்தார்;.

இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று, எதிராளி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

திட்டமிடப்படாத கொலையை செய்த குற்றத்துக்காக 12 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டப் பணம் செலுத்தத் தவறின் மேலும்  1 வருட மேலதிக கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், படுகாயமடைந்த புலனாய்வாளரை கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக 5 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டப் பணம் செலுத்தத் தவறின் மேலும்1 வருட மேலதிக கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .