2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாங்கள் இன்னமும் காலனித்துவத்தின் அடிமைகளாகத்தான் இருக்கிறோம்: துரைராஜசிங்கம்

Thipaan   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாங்கள் இன்னமும் காலனித்துவத்தின் அடிமைகளாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் சமூக ஆளுகையை வலுவூட்டுவதற்கான கொள்கைப் பரிந்துரைகள் (Launching of project “Strengthening Policy & Action through Citizens’ Engagement” (SPACE) in the Eastern Province) எனும் தொனிப் பொருளியில் இடம்பெற்ற செயற்பாட்டு நிகழ்விலேயே அவர்; உரையாற்றினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையோடு, ஜனதாக்ஸன் மற்றும் கெயார்  சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் ஆகியவை இணைந்து கிழக்கு மாகாணத்திலும் இலங்கையின் ஏனைய மகாணங்களிலும் அமுல்படுத்த உத்தேசித்துள்ள இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, திருகோணமலை புளு சினமன் உல்லாச விடுதியில் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் எஸ். சிவகுமார்  தலைமையில் செவ்வாய்க்கிழமை (09)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், உட்பட சுமார் 45 அதிகாரிகள்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய துரைராஜசிங்கம் மேலும் கூறியதாவது,

மொழிப் பிரயோகம் உட்பட பல்வேறு நிருவாக விடயங்களிலும் நாம் அடிமைத் தனத்தையே பின்பற்றி வந்து பழக்கப்பட்டு விட்டோம். அதிகாரப் பயன்பாட்டிலே பெருத்த இடைவெளிகளினூடாகவே நாம் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்கிச் சென்ற பிரித்தானியாவின் மாநகரப் பிரிவுக்குள் அந்த நாட்டின் மகா ராணியார் செல்வதாக இருந்தாலும் கூட அந்த மாநகர முதல்வரின் அனுமதியோடுதான் நகருக்குள் பிரவேசிக்கலாம் என்கின்ற நாகரிகமான நிருவாகக் கடைப்பிடித்தல்கள் அங்கிருக்கின்றன.

நிருவாக ஒழுங்கு முறைகளிலே மக்களை எவ்வாறு ஆட்சியிலே பங்குபற்றவைப்பதை யாருக்குச் சொல்லி அறிவூட்டப் போகின்றோம் என்கின்ற கேள்வி இருக்கின்றது.

நாட்டின் கொள்கைகளை வகுப்பதிலும் நிருவாகத்தை சரியாக இயங்கச் செய்வதிலும் மக்களுடைய பங்கும் பணியும் மகத்தானது என்று போதனை செய்து விட்டு பின்னர் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றபொழுது அவர்களுடைய எந்தவிதமான பங்களிப்பும் இல்லாமல் செய்து விடுகின்றோம் இதுதான் இன்றிருக்கின்ற சிக்கலான நிருவாக நடைமுறை. எனவே இதனை மாற்றியமைக்க வழிகாண வேண்டும்.' என்றார்.

இந்த நிகழ்வில், கிழக்கு மகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், மாகாண சபை பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேகுணவர்தன, விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், காணியமைச்சர் ஆரியவதி கலப்பதி, மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சரின் செயலாளர் அப்துல் அஸீஸ், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் உள்ளிடடோரும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின்  பயிற்சி இணைப்பாளர் எஸ் சிவகுமார், சிரேஷ்ட முகாமையாளர்களான அசோக அஜந்த, கமால் கெகுளந்தர ஆகியோருட்பட   அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .