நியூசிலாந்து-அவுஸ்திரேலியா டெஸ்ட் முன்னோட்டம்

-ச.விமல்

நியூசிலாந்து, அவுஸ்ரேலியா டெஸ்ட் தொடர் விறு விறுப்புத் தன்மை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணி பலமான நிலையில் உள்ளமை இதற்கு முக்கிய காரணம். இரண்டாவது காரணம் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றமை ஆகியன.

நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ள அணியாக தற்போது தென்படுகின்றது. சம பல அணியாக திகழும் நியூசிலாந்து அணி அவுஸ்ரேலியா அணியை இந்த தொடரில் வெல்ல விடாது என மிகவும் நம்பலாம். அப்படியான நிலை ஒன்று வந்தாலே நியூசிலாந்து அணிக்கு மிகப் பெரிய வெற்றியே. அவுஸ்ரேலியா அணியுடன் மோதும் அணிகள் எப்போதும் வெல்வதிலும் பார்க்க சமநிலையில் நிறைவு செய்தாலே வெற்றி என நினைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உள்ளன.  வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தப்போகும் தொடர் இது. அதிலும் ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கு சாதகத்தன்மை தரும் ஆடுகளங்கள். ட்ரென்ட் போல்ட், ரிம் சௌதி,  டவ் பிரேஸ்வெல் ஆகியோர் நிச்சயம் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.

அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சு பலமாக இல்லை என்ற நிலை உண்டு. பீற்றர் சிடில் 60 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள வீரர். ஆனால் அவரின் போர்ம் கேள்வியாக உள்ளது. ஜேம்ஸ் பட்டின்சன் போர்மில் உள்ளவர். ஜோஸ் ஹேஸல்வூட் மூன்றாவது பந்துவீச்சாளர். அவுஸ்ரேலியாவின் எதிர்கால பந்து வீச்சாளர் என்ற நம்பிக்கைக்கு உரியவர். எதிர்பார்த்ததை செய்து கொடுப்பார் என நம்பலாம். ஆனால் இரண்டு அணியினதும் வேகப்பந்துவீச்சின் ஒப்பீடு என்று வரும் போது நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பலமாக தென்படுகின்றனர். இந்த ஒப்பீட்டில் யார் பலம் பெறுகின்றார்களோ அவர்கள் பக்கம் போட்டி வெற்றி மாறும் நிலை உள்ளது. நான்காவது வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு பக்கமும் சகலதுறை வீரர்கள். மிற்சல் மார்ஷ் அனுபவம் பெற்ற வீரராக தென்படுகின்றார்.  கொரே அன்டர்சன் உபாதையில் இருந்து மீண்டு வந்துள்ளார். மிற்சல் மார்ஷின் பந்துவீச்சு பலம். கொரே அன்டர்சனின் துடுப்பாட்டம் பலம்.  

துடுப்பாட்டம், இதுதான் இரண்டு அணிகளுக்கும் முக்கியமான விடயம். பொதுவாக பார்க்கும் போது அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்டம் பலமாகவுள்ளது. நியூசிலாந்தின் துடுப்பாட்டம் பலமாக இருந்தாலும் ஒரு சிறிய இடைவெளி  தெரிகின்றது. அந்த இடைவெளியை நியூசிலாந்தின் பந்துவீச்சு ஈடுகட்டும் நிலை உள்ளது. அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்டத்தை பலமாக கூறினாலும் அந்தப் பலத்துக்கு காரணம் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் மட்டுமே. ஆனாலும் ஜோ பேர்ன்ஸ், உஸ்மான் கவாஜா ஆகியோர் அனுபவம் குறைந்தவர்களாக இருந்தாலும் போர்மில் உள்ளனர். இவர்களை தாண்டி அடம் வோக்ஸ் மிரட்டும் அளவில் உள்ளார். ஓட்டங்களை மிக அபாரமாக குவித்து வருகின்றார். 13 டெஸ்ட் போட்டிகளில் 18 இனிங்ஸில் 1000 ஓட்டங்களை 85.66 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இவர்களுடன் விக்கெட்காப்பாளர் பீற்றர் நெவில். இவரின் துடுப்பாட்டம் மட்டுமே போதியளவு நல்ல நிலையில் இல்லை. நியூசிலாந்தின் துடுப்பாட்டத்தில் மார்டின் கப்தில் மிக அபார போர்மில் உள்ளார்.  டொம் லதாம் அதிக ஓட்டங்களைப் பெறாவிட்டாலும் சராசரியாக ஓட்டங்களை குவித்து வருகின்றார். றொஸ் டெய்லரை நம்பிக்கைக்கு உரிய வீரராக கருத முடியாது. அவுஸ்திரேலியாவில் வைத்து அடித்த 290 ஓட்டங்கள் இவர் மீது பயத்தை உருவாக்கியுள்ளது. அவுஸ்ரேலியா அதனை மறந்து இருக்காது என நம்பலாம். இவரின் அதிரடி துடுப்பாட்டம் நிச்சயம் இந்த தொடரில் ஏதோ ஒரு இடத்தில வெற்றிக்கு கை கொடுக்கும் என நம்பலாம். மிற்செல் சான்ட்னர் உபாதையடைந்து அணியால் விலகியுள்ள நிலையில் மார்க் கிரெய்க் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். சுழற் பந்து வீச்சு நியூசிலாந்து அணிக்கு முழுமையாக பலமாக இல்லை. நேதன் லயோன் அவுஸ்ரேலியா அணியில் மிகப்பலமாக இருக்கின்றார் எனக் கூற முடியாது. ஆனால் இவரின் அனுபவம் ஏதோ ஒன்றை செய்யும் என நம்பலாம்.

சமபல அணிகள். அண்டைய நாட்டு அணிகள். சொந்த நாட்டு பலம் என்பதும். காலநிலை எனபதும் பெரியளவு பாதிப்பை இந்த தொடரில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. இரு அணிகளும் கடுமையாக போராடும். முடிவுகளை தரும் தொடராக இந்த தொடர் அமையும். தொடர் சமநிலை என்பது அவுஸ்ரேலியா அணியின் இரண்டாமிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மூன்றாமிடத்துக்கு பின் தள்ளப்படும். நியூசிலாந்து அணிக்கு தொடர் வெற்றி ஆறாமிடத்தில் இருந்து ஐந்தாமிடத்துக்கு முன்னேறச்செய்யும். தொடர் வெற்றி மீண்டும் அவுஸ்ரேலியா அணிக்கு முதலிடத்தை தரும். எனவே தரப்படுத்தல் கூட இந்த தொடரில் முக்கிய இடத்தை வழங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றது. அதற்கு பழி தீர்க்கும் தொடர் தற்போது நியூசிலாந்துக்கு கிடைத்துள்ளது.  அதை சரியாக பாவித்து கொள்வார்களா அலல்து அவுஸ்ரேலியாவின் தொடர் ஆதிக்கத்துக்கு நியூசிலாந்து பலியாகுமா என்பதே இந்த தொடர்.

இரண்டு அணிகளும் இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அவுஸ்ரேலியா 29 போட்டிகளிலும். நியூசிலாந்து 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள அதேவேளை 18 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. நியூசிலாந்தில் நடைபெற்ற 24 போட்டிகளில் அவுஸ்ரேலியா அணி 12 போட்டிகளிலும், நியூசிலாந்து 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 7 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

 

 


நியூசிலாந்து-அவுஸ்திரேலியா டெஸ்ட் முன்னோட்டம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.