2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹுசைனிடம் ஜனாதிபதி, பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் எனக்கு தெரியும்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின்  உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களின் தூதுக்குழுக்கள் எவ்வாறான உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர் என்று எனக்குத் தெரியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர், நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுப்பதற்கு, அரசாங்கம் தயாராகின்றது. அதனை எதிர்ப்பதற்கு, சகலரும் ஒன்றிணையவேண்டும். நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு, ஜனாதிபதியும் பிரதமரும் அல் ஹுஸைனிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட  பிரேரணையை நிறைவேற்றுவதாகவும், இவ்விருவரும் உறுதி பூண்டுள்ளனர்.

இதில் விசேடம் என்னவெனில், இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொண்டு, மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடாமல் நிறைவேற்றப்பட்டதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், இலங்கைக்கு எதிராக இந்த பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு, 2002ஆம் ஆண்டு இழிபுகழ் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட முறைமையையே கையாண்டது.  

மனித உரிமைகள் பேரவையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றிக் கொள்ளப்படுவதற்கு முன்னர், ஜெனீவாவிலிருந்த எங்களுடைய தூதுவர், அதனை மாற்றுவதற்கு முயன்றாலும், அதனைத் தடுத்து அரசாங்கம், அந்தப் பிரேரணையை, அமெரிக்கா தயாரித்ததைப் போலவே ஏற்றுக்கொள்வதற்கு செயற்பட்டது.

அமெரிக்காவின் பிரேரணையில் எவ்விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தாது ஏற்றுக்கொண்டமை, இலங்கைக்கு கிடைத்த பெரும் இராஜதந்திர வெற்றியாக மக்கள் முன்பாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும், உண்மையாக அது, 1815ஆம் ஆண்டு மலைநாட்டு ஒப்பந்தத்துக்கு சமமான நாட்டை காட்டிக்கொடுக்கும் இணக்கத்துக்கு சமமானதாகும்.

ஜெனீவா யோசனையின் ஊடாக அரசாங்கம் செயற்படுத்தப்போவதை, மக்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தவேண்டும்.
அதில் உள்ள பிரிவுகளின் பிரகாரம், தமிழ் சிவில் மக்களை படுகொலை செய்தமை, அவர்களை வதைப்படுத்தியமை மற்றும் வடக்குப் பிரதேசத்தில் வேண்டுமென்றே உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கியமை உள்ளிட்ட யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டமையை ஏற்றுக்கொண்டுள்ளது.

அந்த யுத்தக்குற்றத்தை விசாரணை செய்வதற்கான வெளிநாட்டு நீதிபதிகள், அதி குற்றம் சாட்டுபவர் மற்றும் விசாரணை அதிகாரிகளைக் கொண்ட யுத்த நீதிமன்றத்தை  நிறுவுவதற்கும், அந்த நீதிமன்றத்தை செயற்படுத்துவதற்கும், வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதியை பெற்றுக்கொள்வதற்கு இடமளித்தல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் இடமளித்துள்ளது.

அதுதொடர்ந்தால், யுத்தக்குற்றத்தை புரிந்தார்கள் என்று சந்தேகிக்கும் பாதுகாப்புப் படையினரை, யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கு போதியளவான சாட்சிகள் இல்லையாயின், அந்த நபர்களை நிர்வாகச் செயற்பாட்டின் ஊடாக, பாதுகாப்புப் படையிலிருந்து நீக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கப்பால், இலங்கையின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு, அதிகாரத்தை பகிர்வதற்கும் அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் காரியாலயத்தின் கண்காணிப்பின் கீழ் செயற்படுத்துவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்துக்கு தலைமை வகித்த என்னை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சியினால் முன்னெடுக்கப்பட்டதாகும்.

இந்நிலையில், இந்த அரசாங்கம், நாட்டையும் இராணுவ வீரர்களையும் காட்டிக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. அதற்கு எதிராக கைகோர்க்குமாறு, தாய்நாட்டு மக்களை அழைக்கின்றேன்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .