2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நபர் மீது தாக்குதல்: மூவர் கைது

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ்

லிந்துலை, வட்டகொடை  பிரதான வீதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் நபரொருவர், லிந்துலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு, ருவான்வெல்ல அல்லொவைச் சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதியான எஸ்.ஏ.ஸ்டேன்லி பெரேரா (வயது 55) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி நபர் தனக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் 10ஆம் திகதி இரவு, கொழும்பு கேஸ்பா சந்தியில் இரவு நேர போக்குவரத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது, குறித்த  சந்தேக நபர்களும் அம்முச்சக்கர வண்டியை வழிமறித்து, தாம் திருமண வீடொன்றுக்காக ஹட்டனுக்கு செல்ல வேண்டியுள்ளதாக கூறி 6100 ரூபாய்க்கு முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

பின்னர் இரவு 9 மணிக்கு முச்சக்கரவண்டியில் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 11 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் ஹட்டனை அடைந்த அவர்கள்,  இன்னும் சிறிது தூரத்தில் தமது வீடு இருப்பதாக கூறி, தலவாக்கலை பிரதேசத்தை நோக்கி முச்சக்கர வண்டியை செலுத்துமாறு கூறியுள்ளனர்.

பின்னர் தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை, வட்டகொடை நோக்கி செலுத்துமாறு கூறியுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டி வட்டகொடை பிரதான வீதியை தாண்டி பயணித்தபோது மேற்படி மூவரும் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.   சிறுநீர் கழிப்பதற்காக அவர்கள் வண்டியிலிருந்து இறங்கியுள்ளனர்.

பின்னர் வண்டிக்குள் ஏறிய மூவரும், சாரதியை கூறிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இவர்களது பிடியிலிருந்து தப்பி ஓடிய சாரதி அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் மறைந்து இருந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர்கள் முச்சக்கரவண்டியுடன் தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து சாரதி அருகில் உள்ள வட்டகொடை தேயிலை தொழிற்சாலையில் இரவு வேளையில் பணிபுரிந்த ஊழியர்களின் உதவியுடன் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். இதனையடுத்து சாரதியை சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார், சந்தேக நபர்களான மூன்று இளைஞர்களை  வட்டகொடை மத்திய பிரிவு தோட்டத்தில் வைத்து காலை 10 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .