2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அதிரடியால் இறுதிக்கு தகுதி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 01 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-A.R.V.லோஷன்

மேற்கிந்தியத் தீவுகளின் மும்பாய் வெற்றி பலருக்கும் மாபெரும் அதிர்ச்சியை வழங்கியிருக்கிறது. இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட அணி என்ற அவமானத்துடன் அரையிறுதிக்கு வந்த அணி இது. ஆனால் மும்பாய் ஆடுகளத்தின் தன்மை, ஏலவே முன்னைய கட்டுரையில் நான் சொல்லியிருந்ததைப் போல IPL விளையாடிப் பழகிய அனுபவத்தில் இந்திய ஆடுகளங்கள் ​பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களின் பரிச்சயம் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த வெற்றியும் T20 போட்டிகளில் கிடைக்கக்கூடிய இன்னொரு முடிவு மட்டுமே என மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களின் அதிரடியைப் பாராட்டிவிட்டுக் கடந்து போக முடியும்.

விராட் கோலியின் அபார ஆட்டம், அத்தோடு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்வதற்காக உசெய்ன் போல்ட் ஓடுவதை விட வேகமாக ஆடுகளத்தின் இரு முனைகளுக்கு இடையில் அவர் மாறி மாறி ஓடியே எடுத்த ஓட்டங்கள், இதற்கு முந்தைய இந்திய அணியின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியைப் போலவே தனியொரு நபராக அவர் நின்று ஆடிய விதங்கள் ஆகியனவற்றை மேற்கிந்தியத் தீவுகளின் சிக்சர் + பவுண்டரிகள் அடிக்கும் அசுர பலம் விஞ்சியது.

நாணய சுழற்சி, இரவு வேளையில் மைதானத்தின் சூழலை மாற்றும் எனக் கருதப்பட்ட பனிப்பொழிவு - Dew எல்லாவற்றையும் தாண்டி என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியின் முடிவில் தாக்கம் செலுத்தியது இரண்டு அணிகளும் பெற்ற 4,6 ஓட்டங்களுக்கு இடையிலான வித்தியாசம் தான். (இதை விட இந்திய அணித் தலைவர் விட்ட மாபெரும் தவறுகளை கட்டுரையில் பின்னர் பார்க்கலாம்) இந்தியா 95 ஓட்டங்களை ஓடியும், 17 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 92 ஓட்டங்களை பவுண்டரிகளிலும் பெற்றது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியோ வெறும் 44 ஓட்டங்களை ஓடி எடுத்தது. 146 ஓட்டங்களை (20 நான்கு ஓட்டங்கள் + 11 ஆறு ஓட்டங்கள்) அடித்தே பெற்றுக்கொண்டது. 

இந்த வித்தியாசம் தான் போட்டியில் பெருமளவு செல்வாக்கு செலுத்தியிருந்தது. ஒரு சில நல்ல பந்துகளில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறியிருந்தபோதும், அடிக்கக் கிடைத்த இலகுவான பந்துகளை எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியே அனுப்புவதில் சற்றும் சளைக்காமல் மேற்கிந்தியத் தீவுகளின் சிமன்ஸ், சார்ல்ஸ், ரசல் ஆகியோர் ஆடியிருந்தார்கள். இதன் மூலம் உலக T20 போட்டிகளில் துரத்தி அடிக்கப்பட்ட 3வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் பதியப்பட்டுள்ளது. சுப்பர் 10 சுற்றுக்களில் 4 போட்டிகளில் 14 சிக்சர்களையே கொடுத்திருந்த இந்தியா இந்த ஒரே போட்டியில் 11 சிக்சர்களை வாரி வழங்கியது. ஒரு போட்டியில் இந்தியா கொடுத்த இரண்டாவது கூடிய சிக்சர்கள் இவையாகும். 

காயமுற்றிருந்த அன்றே ப்ளட்ச்சருக்குப் பதிலாக அணிக்குள் அவசரமாக மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து அழைக்கப்பட்ட லெண்டில் சிமன்ஸ் இந்தப் போட்டியைத் தனக்கும், தனது அணிக்கும் மறக்கமுடியாத ஒரு போட்டியாக மாற்றியிருந்தார். இந்திய மண்ணில் IPL போட்டிகள் மூலமாக தனக்கென ஒரு தனித்தடம் பதித்துள்ளவர், கிடைத்த அற்புதமான வாய்ப்பு மூலமாக தனது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் பதிவு செய்து, போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் தனதாக்கிக் கொண்டார். இதே போலத் தான் இலங்கைக்கு எதிரான சுப்பர் 10 ஆட்டத்திலும் உபாதையுற்ற கெயிலுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக அனுப்பப்பட்ட பிளட்ச்சர் ஆடிய அதிரடி ஆட்டமும். அண்மைக்காலமாக ஒரு அற்புதமான சகலதுறை வீரராக மாறிவரும் அன்ட்ரே ரசலும் தன்னுடைய அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையை இந்தப் போட்டியில் பெற்றுக்கொண்டார்.

ஊதிய, ஒப்பந்தப் பிரச்சனைகள் இன்னமும் கனன்று கொண்டே இருக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலையிலும் கூட இப்படியான ஆற்றலோடும், அணியில் ஒற்றுமையோடும் ஆட முடியுமாக இருந்தால்,அதெல்லாம் தீர்க்கப்பட்ட, புத்தெழுச்சி ஊட்டப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி எப்படி ஆடும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பனிப்பொழிவினால் பின்னர் பாதிக்கப்படலாம் என்று கருதப்பட்ட மும்பாய், வான்கடே மைதானத்தில் நாணய சுழற்சியில் வென்றவுடன் முதலில் துடுப்பாட டரன் சமி இந்தியாவை அழைத்தபோதே அதில், அண்மைக்காலத்தில் துரத்தியடிப்பதில் துல்லியமாக ஆடிவரும் விராட் கோலி + இந்தியாவையும் நினைத்திருக்கக் கூடும். மேற்கிந்தியத் தீவுகளும் துரத்தி அடித்த போட்டிகளில் (ஆப்கானிஸ்தான் தவிர) கலக்கி இருந்தது.

காயமடைந்து வெளியேறிய யுவராஜ் சிங்குக்குப் பதிலாக மனிஷ் பாண்டேயை (பாவம் துடுப்பெடுத்தாட வாய்ப்பே கிட்டவில்லை) அணிக்குள் கொண்டு வந்த இந்தியா, தொடர்ந்து தடுமாறி வந்த தவானை இப்படியான ஒரு முக்கியமான போட்டியில் நீக்கி, அஜியாங்கே ரஹானேயை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்பி வைத்தது. பொதுவாக மாற்றங்களை விரும்பாத தோனியின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது. ரஹானே உறுதியாக நின்று கொள்ள முதலில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி, பின்னர் கோலி சரவெடி என்று முதல் இரு விக்கெட் இணைப்பாட்டங்கள் அரைச் சதங்கள். 

முதல் நான்கு போட்டிகளில் வெறும் 18 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த ரோஹித் ஷர்மா தன சொந்த ஊர் மும்பாயில் இந்தப்போட்டியில் form க்குத் திரும்பினார். 3 ஆறு ஓட்டங்களுடன் 31 பந்துகளில் 43. கோலியுடன் சேர்ந்து விறுவிறு என்று ஓடி ஓடி ஓட்டங்கள் சேர்த்த ரஹானே 40. வந்த நேரம் முதல் ஒரு விதமான பதற்றத்துடன், ஒரு ஓட்டத்துடன் இருக்கும் நேரம் கோலியை ரன் அவுட் ஆக்கக்கூடிய இலகுவான சந்தர்ப்பங்களை ஒரே பந்தில் கோட்டை விட்டது மே.இ. பக்கத்தில் இருந்த ஸ்டம்பை நோக்கி எறிவதில் ரம்டின், பிராவோ இருவருமே குறி தப்பியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதற்குப் பிறகு முழுக்க முழுக்க கோலி ராஜ்ஜியம் தான். ஒற்றைகளை இரட்டையாக மாற்றி ஓடி, ஓடி ஓட்டங்களை அதிகரித்த கோலி, அண்மைக்காலமாக அனைவரையும் பரவசப்படுத்திவரும் அற்புதமான துடுப்பாட்டப் பிரயோகங்கள் மூலமாக நான்கு ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். 89 ஓட்டங்கள் 47 பந்துகளில். தனது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை ஒரே ஒரு ஓட்டத்தால் தவறவிட்டிருந்தார். எனினும் தலா 15 50+ ஓட்டப் பெறுதிகளைப் பெற்றுள்ள கெயில், பிரெண்டன் மக்கலம் ஆகியோரை முந்தியுள்ளார். 

கோலி - தோனி இணைந்து 27 பந்துகளில் பெற்ற 64 ஓட்டங்களில் தோனி 9 பந்துகளில் 15 ஓட்டங்கள் மட்டுமே.. மீதி கோலியின் தாண்டவம் தான். சமி ஐந்தே ஐந்து பந்துவீச்சாளர்களுடன் 20 ஓவர்களைப் போட்டு முடித்தார். தான் ஒரு பந்துவீச்சாளரும் கூட என்பது அடிக்கடி சமிக்கு மறந்து போகிறது போலும். ஒரு ஓவராவது போட்டுப் பார்த்திருக்கலாம். 

193 என்ற இலக்கு மேற்கிந்தியத் தீவுகளை தடுமாற வைக்கும் என்றே பலரும் கருதினர். நினைத்தது போலவே கெயில் பும்ராவின் பந்தில் பறக்க, (பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கெயில் இப்படியான முக்கியமான போட்டிகளில் சொதப்புவது வழமையே.) கொஞ்சம் தடுமாறிய பின் சாமுவேல்ஸும் ஆட்டமிழக்க, இத்தொடரில் பெரிதாக சோபிக்காத சார்ல்ஸ், இந்தப் போட்டியில் முதன்முறையாக ஆடும் சிமன்சோடு சேர்ந்து கொண்டார். முதலில் நிதானமாக ஆரம்பித்த இணைப்பாட்டம் கொஞ்சம் நம்பிக்கை சேர்ந்த பிறகு அதிரடியாக மாறி பவுண்டரிகள் பறக்க ஆரம்பித்தன.

சிமன்ஸ் ஆரம்பம் முதலே நம்பிக்கையுடன் ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். அவருக்கு அதிர்ஷ்டமாக இரு ஆட்டமிழப்பு சந்தர்ப்பங்கள் இந்தியப் பந்துவீச்சாளரின் நோ போல் பந்துகளால் தவறிப்போனது. அவற்றில் ஒன்று கிடைத்த free hit இல் சிக்சராக மாறியது இந்திய அணிக்கு வெந்த புண்ணில் பாய்ச்சிய வேல். ஆட்டமிழப்பு என்பதால் கவனிக்கப்பட்ட இந்த இரு நோபோல்களை விட இன்னும் எத்தனை நோபோல்கள் நடுவர்களின் கவனத்தில் இருந்து தப்பினவோ? 61 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசித் தள்ளி, தடுமாறிக்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளை முந்தக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்தது இந்த இணைப்பாட்டம். 

விக்கெட் ஒன்றை எடுத்தே ஆகவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்ட தோனி, ரெய்னாவை பயன்படுத்தாதது ஆச்சரியம். யுவராஜ் இல்லாதது ஒரு இழப்பாகக் கருதினாலும் ரெய்னாவைப் பயன்படுத்தாத சந்தர்ப்பத்தில், யுவராஜ் இருந்தால் மட்டும் பயன்படுத்தி இருப்பாரா என்ற கேள்வியும் வருகிறது. இதேவேளை ஓவர்களை சரியான முறையில் பகிர்ந்து கடைசி ஓவர்களுக்கு தன்னுடைய முக்கிய பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளும் தோனி, என்ன காரணத்தாலோ கடைசி இரு ஓவர்களுக்கு தடுமாறிப் போனார். 

அவருடைய முன்னணி (?) சுழல் பந்து வீச்சாளராகக் கருதப்படும் அஷ்வினின் 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் அடிக்கப்பட்டதால் அவரை நிறுத்திக் கொண்டவர் பின்னர் இடை நடுவே ஒரு ஓவர் தானும் பயன்படுத்திப் பார்க்கவும் இல்லை. இந்தியாவின் துரும்புச் சீட்டு என்று அழைக்கப்படும் அஷ்வின் பாகிஸ்தானுடன் 3 ஓவர்கள், அவுஸ்திரேலியாவுடன் 2 ஓவர்கள் ஏன்று முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. 

துடுப்பாட்ட ராசியைப் பந்துவீச்சுக்கும் கொண்டுவந்த கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்தார். அந்த ஓவரில் நான்கு ஓட்டங்கள். ஆனால் அடுத்த ஓவரை அவருக்கு வழங்காமல் தனது வழமையான death bowlers நேஹ்ரா, பும்ரா இருவரையும் முடித்துக்கொண்ட தோனிக்கு கடைசி இரு ஓவர்களும் சிக்கலாக மாறிப்போனது. 24 பந்துகளில் 42 ஓட்டங்களாக இருந்த நிலை, ரசல் & சிமன்சின் அதிரடிகளால் 12 பந்துகளில் 20 ஓட்டங்களாக மாறிய நிலையில் ஜடேஜாவை அழைத்தார் தோனி.

முதல் நான்கு பந்துகள் எல்லாமே இந்தியாவுக்கு வாய்ப்பாகவே இருந்தது. ஐந்தாவது பந்தில் ரசல் அடித்த மிக நீளமான சிக்சர் பார்வையாளருக்கு இடையில் போய்த் தொலைந்து போனது. சர்ச்சைக்குரிய விதத்தில் பந்தை மாற்றினார்கள். அடுத்த பந்தில் மேலும் ஒரு நான்கு ஓட்டம். இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள். அஷ்வினா கோலியா என்ற கேள்விக்கு தோனியின் பதில் அனுபவத்தை விட அன்றைய நாளின் வாய்ப்பு என்றே அமைந்தது.

2007 உலகக்கிண்ண இறுதியில் ஜோகிந்தர் ஷர்மா போல, 1993 ஹீரோ கிண்ண அரை இறுதியில் சச்சின் டெண்டுல்கர் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக 4 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் ஒரே ஒரு ஓட்டத்தைக் கொடுத்து வென்றது போல, கோலியைப் பயன்படுத்த எண்ணியிருந்தார் தோனி. கோலியின் ராசி அணியைத் தனியே தாங்கிக் கொண்டு செல்வது இந்த இறுதி ஓவரிலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தோனிக்கும் இருந்திருக்கலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த அஷ்வின், என்ன தான் பனிப்பொழிவு (ஆனாலும் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை), சுழல்பந்து என்றிருந்தாலும் சிலவேளை மேற்கிந்தியத் தீவு வீரர்களைத் தடுமாற வைத்திருக்கலாம். 

முதல் பந்தில் சிமன்ஸ் ஒரு ஓட்டம், அடுத்த பந்தில் ரசலால் ஓட்டம் எதுவும் பெற முடியவில்லை. மைதானம் முழுவதும் திரண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு ஒரு சின்ன நம்பிக்கை. ஆனால் அசுர பலம் கொண்ட அன்ட்ரே ரசல் அடுத்த பந்தை இழுத்தடித்து நான்கு ஓட்டம் எடுத்தார். இன்னும் மூன்று பந்துகளில் நான்கு தேவை. ரசலின் கட்டுமஸ்தான உடம்பும் எஃகு போன்ற கரமும் வேறு எதற்கு இருக்கிறது? நான்காவது பந்து பல மீட்டர்கள் கடந்து ஆறாக மாறியது. கோலி கொண்டுவந்த இந்தியா, கோலியின் ஓவரிலேயே முடிந்து போனது. 

ரசல் - 20 பந்துகளில் 43 ஓட்டங்கள், அதிலே 36 ஓட்டங்கள் பவுண்டரிகளில் (4 ஆறுகள், 3 நான்குகள்) தோனியின் கணக்கு பிழைத்தது. தனியே கோலியை நம்பிய இந்திய அணியை, தனியே கெயிலை மட்டும் நம்பாத மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. சமி முன்பே சொன்னது போல, மேற்கிந்தியத் தீவுகளிடம் நம்பிக்கையும் 15 வெற்றியாளர்களும் இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களால் வெற்றியை சுவைக்க முடிகிறது. அந்த வெற்றிகளைக் கோலாகலமாகக் கொண்டாடவும் முடிகிறது.

இப்போது மேற்கிந்தியத் தீவுகளின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டுமே இறுதிப் போட்டியில். அண்மையில் தான் மேற்கிந்தியத் தீவுகளின் இளையவர் (19 வயதுக்குட்பட்ட ) அணி உலகக்கிண்ணம் வென்றது குறிப்பிடத்தக்கது. சுப்பர் 10 சுற்றில் சந்தித்த அதே இரு அணிகள் மீண்டும் இறுதிப் போட்டியில். யார் நினைத்திருப்பார்கள்? வெல்லும் அணிக்கு இரண்டாவது உலக T20 கிண்ணம். முன்னைய போட்டியில் கெயில் புயலால் அடிபட்டுப் போன இங்கிலாந்து இப்பொழுது புத்துணர்ச்சியோடு எழுந்து நிற்கிறது. அதே போல மேற்கிந்தியத் தீவுகளும் அசுர அடியோடு உயர்ந்து நிற்கிறது. விறுவிறுப்பான இறுதிப்போட்டி நாளை மறுதினம் காத்திருக்கிறது.

www.arvloshan.com


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .