2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கைக்குக் காத்திருக்கும் சோதனைக் காலம்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

உலக இருபதுக்கு-20 தொடர் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இத்தொடருக்குள் நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணிக்கு, அவ்வணியின் சுப்பர் 10 சுற்றில் ஒரு போட்டி மீதமிருக்கும் போதே, இத்தொடர் முடிவடைந்திருந்தது.

இதற்கு முன்னரும் கூட நடப்புச் சம்பியன்களாக இருந்த அணிகள், அடுத்த தொடரில் ஆகக்கூடுதலாக அரையிறுதிவரையே முன்னேறியிருந்தன என்ற வரலாறு இருந்ததோடு, இம்முறை இலங்கை அணி சாதிக்காது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. இலங்கை அணியிலும் கிரிக்கெட் சபையிலும் காணப்பட்ட குழப்பங்கள் அவ்வாறு இருந்தன.

 உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னர் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான இருதரப்புத் தொடரிலும் இம்முறை இருபதுக்கு-20 போட்டிகளைக் கொண்டமைந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை அணி, மோசமான பெறுபேறுகளையே வெளிப்படுத்தியிருந்தது. இவற்றுக்கு மேலதிகமாகவே, அணியில் நிரந்தரமற்ற நிலையொன்று காணப்பட்டது.

ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி வெளிப்படுத்திய மோசமான பெறுபேறுகளைத் தொடர்ந்து, அப்போதிருந்த தேர்வாளர்கள் குழாம் கலைக்கப்பட்டு, அரவிந்த டி சில்வா தலைமையில் குமார் சங்கக்கார, ரொமேஷ் களுவிதாரண உள்ளிட்டோர் அடங்கிய தேர்வாளர்கள் குழாமொன்று அவசரமாக உருவாக்கப்பட்டு, இலங்கை அணியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் விழா கூட, 'ஓரணி, ஒரு தேசம்" என்ற சர்ச்சைக்குரிய சுலோகத்தின் கீழ், பல மில்லியன் ரூபாய் செலவில் (அதிலும் ஊழல் இடம்பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன என்பது ஒரு விடயம்) இடம்பெற்றது.

ஆனால், குழுநிலைப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியை மாத்திரம் வெற்றிகொண்ட இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராகவும் தென்னாபிரிக்க அணிக்கெதிராகவும் மோசமான திறமை வெளிப்பாடுகளை மேற்கொண்டது. இங்கிலாந்துக்கெதிராகவும் மோசமாக விளையாடிய போதிலும், அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் மாத்திரம் சிறப்பாக விளையாடி, இலங்கைக்குப் போராட்டத்தை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தான், இலங்கையின் குழப்பங்களை ஆரம்பத்திலிருந்தே நோக்குவது சிறப்பானது. பழைய தேர்வாளர்கள் நீக்கப்பட்டுப் புதிய தேர்வாளர்கள் சேர்க்கப்பட்டபோது, இரண்டே இரண்டு மாற்றங்கள் தான் ஏற்படுத்தப்பட்டன. நிரோஷன் டிக்வெல்லவும் ஜெப்றி வன்டர்சேயும் நீக்கப்பட்டு, லஹிரு திரிமான்னவும் சுரங்க லக்மாலும் குழாமில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதில், லஹிரு திரிமான்ன 4 போட்டிகளில் விளையாடி அதிகபட்ச ஓட்டங்களாக 6 ஓட்டங்களைப் பெற்று, மொத்தமாக 14 ஓட்டங்களையே பெற்றிருந்தார். மறுபுறத்தில், புதிய தேர்வுக்குழுவால் நீக்கப்பட்ட வன்டர்சே, லசித் மலிங்கவின் வெளியேற்றம் காரணமாக அணிக்குள் உள்வாங்கப்பட்டதோடு, 3 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இத்தொடரில் இலங்கை சார்பாக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களில் ஒருவராக (ஏனைய இருவரும் 4 போட்டிகளில் கைப்பற்றியிருந்தார்கள்) மாறியதோடு, இலங்கை சார்பாக, ஓவரொன்றுக்குக் குறைந்த ஓட்டங்களை விட்டுக் கொடுத்த வீரராகவும் திகழ்ந்திருந்தார். ஆகவே தான், புதிய தேர்வுக்குழுவினரின் தெரிவுகள் சிறப்பாக அமைந்திருக்கவில்லை என்பதோடு, பழைய தேர்வுக்குழுவினரின் தெரிவுகள் சரியானவையாக அமைந்தன என்பதும் வெளிப்படையானது.

ஆகவே, இறுதிநேரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், அணிக்கு உதவவில்லை என்பது தெளிவாகத் தெரிய, அணியில் குழப்பத்தை ஏற்படுத்தின என்பதை ஓரளவு உறுதியாகத் தெரியலாம். உலக இருபதுக்கு-20 தொடர் போன்ற மிகப்பெரிய தொடரொன்றுக்குச் செல்லும் தினத்தின் காலையில் தான், அத்தொடருக்கான வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டார்கள் என்பது, அணியிலுள்ள வீரர்களுக்குச் சிறந்த மனநிலையை வழங்கியிருக்காது.

இவையெல்லாம் முடிந்த விடயங்கள், ஏற்கெனவே பலராலும் சொல்லப்பட்டவை தானென்றாலும், இவற்றை ஞாபகப்படுத்த, காரணமொன்று உள்ளது. இலங்கை அணி மோசமாகத் தோற்ற நிலையில், இலங்கை வீரர்கள் மீது கவனம் திரும்பியிருக்கிறது. ஆனால், வீரர்களை விட, நிர்வாகத்தினர் மீதே அதிகம் கவனம் காணப்பட வேண்டும்.

அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, திஸர பெரேரா, ரங்கன ஹேரத், ஜெப்றி வன்டர்சே, திலகரட்ண டில்ஷான், நுவான் குலசேகர போன்றோர், இருபதுக்கு-20 போட்டிகளுக்கான மிகச்சிறந்த வீரர்கள். தசுன் ஷானக, இலங்கையின் சாதனைகள் பலவற்றுக்குச் சொந்தக்காரர். ஆகவே, திறமைகள் குறைவான நிலைமை மாத்திரம், இலங்கையைப் பாதித்திருக்கவில்லை. மாறாக, அதையும் தாண்டி, குழப்பமான நிலையும் வீரர்களுக்குத் தன்னம்பிக்கையற்ற நிலையும் தான் இலங்கையைப் பாதித்திருந்தன.

இலங்கை அணி, மீண்டும் சிறப்பாகச் செயற்பட வேண்டுமானால், இலங்கையின் கிரிக்கெட் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். திறமையான வீரர்கள், எதற்காகச் சிறப்பாக விளையாட முடியாதுள்ளது என்பது கண்டறியப்பட வேண்டும். மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஆலோசனைகளைப் பெற்று, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை முயல வேண்டும். இல்லாதுவிடில், அடுத்துவரும் சில ஆண்டுகள், சோதனையான காலமாகவே இலங்கைக்கு இருக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X