2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தகவலறியும் உரிமைச் சட்டம்: தகவல் கேட்டுப் போராடுவதற்கான 'லைசென்ஸ்'

Thipaan   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்கள், தமக்குத் தேவையான தகவல்களை அறிந்து கொள்வதை உறுதி செய்யும் வகையில், தகவலறியும் உரிமை தொடர்பான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளித்தார்.

அதற்காக, தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்று 11 நாட்களில், அதாவது 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சட்ட மூலமொன்றைச் சமர்ப்பிப்பதாக, அவரது 100 நாட்கள் வேலைத்திட்டத்திலும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அவ்வாறு குறித்த தினத்தில் அது நாடாளுடன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. 14 மாதங்கள் கடந்து, கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதியே சமரப்பிக்கப்பட்டது.

ஆயினும், வாக்குறுதியளிக்கப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அது தொடர்பாக அரசாங்கம் மற்றுமோர் உத்தரவாதத்தை வழங்கியிருந்தது. அதாவது, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில், தகவலறியும் உரிமை அங்கிகரிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு முன்னர் இரண்டு முறை தகவலறியும் சட்டமூலங்களைச் சமர்ப்பிக்க முயற்சித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இம்முறை சபையில் தலைமை தாங்கும் போது, இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கரு ஜயசூரிய, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதாவது 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனிநபர் பிரேரணையாக, தமது முதலாவது சட்ட மூலத்தைச் சமர்ப்பித்தார். ஆறு மாதங்களுக்குள், தகவலறியும் சட்டமூலமொன்றை அரசாங்கம்  சமர்ப்பிக்கவிருப்பதாக அப்போது ஆளும் கட்சிக் கொறடாவாக இருந்த தினேஷ் குணவர்தன தெரிவித்ததையடுத்து, கரு ஜயசூரிய, தமது சட்டமூலத்தை வாபஸ் பெற்றார்.

ஆனால், வாக்குறுதியளித்த படி, அரசாங்கம் அவ்வாறான சட்டமூலமொன்றைச் சமர்ப்பிக்கப் போவதில்லை என்பதும் தினேஷ் குணவர்தன தம்மை ஏமாற்றிவிட்டார் என்பதும் உறுதியாகவே, கரு ஜயசூரிய, 2011ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தமது சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போது தாமாகவே தகவலறியும் சட்டமூலமொன்றைச் சமர்ப்பிப்பதாக முன்னர் வாக்குறுதியளித்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர், ஜயசூரியவின் சட்டமூலத்தைத் தோற்கடித்தனர்.

அரச நிறுவனமொன்றிடம் இருக்கும் அல்லது அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல்களை அடைய, பொது மக்களுக்குள்ள உரிமையை உறுதி செய்வதாக தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் கூறுகிறது. ஆயினும், அதே சட்டமூலத்தில், தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தடைகள் அடங்கிய நீண்டதொரு பட்டியலொன்றையும் வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கையில் எவரும் ஊடுருவதையும், தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுவதையும், இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்படைவதையும், சர்வதேச ஒப்பந்தங்கள் பாதிப்படைவதையும், வெளிநாட்டு செலாவணி, வங்கித்துறை, வரி முறை, வெளிநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட தேசிய பொருளாதாரம் பாதிப்படைவதையும், தனி நபர்களின் சுகாதார அறிக்கைகளை வெளியிடுவதையும், நம்பிக்கையின் பேரில் வைக்கப்பட்டுள்ள தகவல்களை வெளிடுவதையும், நீதிமன்ற அவதூறு

ஏற்படக்கூடிய தகவல்களை வெளியிடுவதையும், நாடாளுமன்றச் சிறப்புரிமைகளைப் பாதிக்கும் தகவல்களை வெளியிடுவதையும், பரீட்சைகளின் விவரங்களை வெளியிடுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக சட்டமூலம் கூறுகிறது.

இந்த நீண்ட தடைப் பட்டியலைக் காணும் போது, இவற்றையும் தாண்டி எவரும் அதிகாரிகளிடம் இருந்து தகவல்களைப் பெற முடியுமா என்ற சந்தேகம் எவர் மனதிலும் எழலாம். அதேவேளை, அந்தப் பட்டியலின் பரம்பலைப் பார்க்கும் போது, எந்தவொரு முக்கிய துறையைப் பற்றியும் தகவல்களைப் பெற முடியாது என்று பலர் அஞ்சினால் அது நியாயமானதே.

ஆனால், இலங்கையிலும் வெளிநாடுகளிலும், ஊடகத்துறையில் நிலவும் பாரிய பொறுப்பற்ற தன்மையைக் கருத்திற்கொள்ளளும் போது, இது போன்றதோர் வரையறை இருக்கத் தான் வேண்டும் எனவும் பலர் கருதலாம்.

இவ்வாறான விரிவான தடைப் பட்டியல் ஒன்றைக் கொண்டிருந்த போதிலும், தகவலறியும் சட்டமூலம் இந்தத் தடைகளைத் தாண்டிச் செல்லும் வழியையும் சுட்டிக் காட்டுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களினால், தகவலொன்றை வெளியிடுவது பாதகமானதாகத் தெரிந்த போதிலும், அதனை வெளியிடுவதனால் ஏற்படும் மக்கள் நலன் அந்த பாதகத் தன்மையை விட அதிகமானது எனத் தெரிந்தால், அந்தத் தகவல் வெளியிடப்பட வேண்டும் எனவும் சட்டமூலம் கூறுகிறது.

இங்கே தகவல் எனும் போது, அது ஊடகவியலாளர்களுக்கான தகவல்கள் மட்டும் என அர்த்தப்படாது. தமது ஓய்வூதிய விண்ணப்பப் பத்திரத்துக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், அதற்கு என்ன நடந்தது என்று அறிய, சம்பந்தப்பட்டவருக்கு உரிமை இருக்க வேண்டும். அது போன்றவையும் இந்தச் சட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் நன்மைகளாகும்.

நிறுவனமொன்றின் தகவல் அதிகாரியே, குறிப்பிட்டதோர் தகவல் வெளியிடப்படுவதனால் ஏற்படும் தீங்கை விட, அதனை வெளியிடுவதனால் ஏற்படும் நன்;மை பெரிது என முடிவு செய்து, அந்தத் தகவலை வெளியிடுவாரா? ஊழல் மலிந்த ஒரு நாட்டில், ஊழலும் செயற்றிறனற்ற தன்மையும் நிறைந்த ஓர் அரச நிறுவனத்தின் அதிகாரிகள், ஒருபோதும் தகவல்களை வெளியிடுவதற்கு விரும்ப மாட்டார்கள்.

அதனால் தான், தகவலறியும் இந்த சட்டமூலத்தின் அவசியம் ஏற்பட்டது. எனவே, தகவல் வெளியிடுவதனால் ஏற்படும் தீமை, பெரிதா அல்லது நன்மை பெரிதா என்று அந்த அதிகாரிகளே தீர்மானிக்கும் நிலை இருந்தால், அவர்கள் தீமை பெரிது என்று தான் தீர்மானிப்பார்கள்.

எனவே, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதன் பின்னரும் அதிகாரிகள் சுயமாக தகவல்களை வழங்க முற்பட மாட்டார்கள். அதற்காக தகவல் தேடுபவர்கள், இந்த சட்டத்தைப் பாவித்துப் போராட வேண்டியிருக்கும்.

இந்தச் சட்ட மூலத்தில் உள்ள தடைகள் மட்டுமன்றி, ஏற்கெனவே நாட்டில் இருக்கும் சில சட்டங்களும் தகவல் பெறுவதற்கு தடையாகவே இருக்கின்றன. உத்தியோகபூர்வ இரகசியங்கள் தொடர்பான சட்டம், இலங்கை பத்திரிகை சபைச் சட்டம் மற்றும் இலங்கை நிறுவனக் கோவை ஆகியன அவற்றுக்கு சில உதாரணங்களாகும்.

தகவலறியும் சட்டத்தை ஆதரிக்கும் சில அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும் போது தகவலறியும் சட்டம் அமுலில் இருந்தாலும் அதிகாரிகள், தகவல்களை மறைக்கவே முயற்சிப்பார்கள் என்பதை உணரலாம். ஜனாதிபதி மைத்திரிபாலவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றே தகவலறியும் சட்டம். ஆனால் அவர் பதவிக்கு வந்து சில நாட்களில் அவரது நெருங்கிய சகாவான அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர்கள் இனி மேல் அரச அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற முடியாது என்றும் அமைச்சு செயலாளர்களிடம் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடியும் என்றும் கூறியிருந்தார்.

தகவலறியும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி, சில அரசியல் கட்சிகள், 2014ஆம் ஆண்டு சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் (மே 3) கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார். ஆனால், அதே மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊடகவியலாளர்கள் தகவல்களுக்காக இனி தம்மை தொடர்பு கொள்ளக் கூடாது என அதே சுமந்திரனின் கட்சியைச் சேர்ந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தார்.

எனவே சிலரிடம் கொள்கைகள் இருந்த போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அவர்களே தடையாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அதிகாரிகள் தகவல்களை மறைக்கும் தற்போதைய நிலைக்கு, ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் பழகிவிட்டார்கள். எனவே, தகவல்களை அறிந்து கொள்வது தமது உரிமை என்றதோர் உணர்வு அவர்களில் பெரும்பாலானோரிடம் இல்லை. அவர்கள், தற்போதைய நிலையோடு திருப்தியடைகிறார்கள். இதனாலும் அதிகாரிகள், தகவல்களை மறைக்க முற்படுகிறார்கள்.

தகவலறியும் உரிமை தொடர்பான சட்டமொன்று தற்போது நாட்டில் இல்லாவிட்டாலும், அந்த உரிமையை வலியுறுத்தும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்;கள் இருக்கின்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தொடர்பிலான அவ்வாறானதொரு வழக்கொன்றில், தீர்ப்பை வழங்கிய நீதியரசர் மார்க் பெர்ணான்டோ, கருத்துச் சுதந்திரத்தை அனுபவிப்பதனால், கருத்துக்கள் இருக்க வேண்டும் என்றும் அதற்காக, தகவலறியும் உரிமை நாட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், ஊடகவியலாளர்களோ ஏனையவர்களோ அந்தத் தீர்ப்பைப் பாவித்து, தகவலறியும் உரிமைக்காகப் போராடவில்லை. அதிகாரிகள், தகவல் வழங்க முன்வரவுமில்லை. எனவே, தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவலறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் நிறைவேறினாலும், அதிகாரிகள் தகவல் வழங்க முன்வரப் போவதில்லை. அதற்காக, தகவல் அவசியமானவர்கள் அந்தச் சட்டத்தை பாவித்துப் போராட வேண்டியிருக்கும்.

இந்தியாவிலும் இவ்வறானதொரு சட்டம் அமுலில் உள்ளது. ஆனால், அங்கும் அதிகாரிகள் சுயமாகத் தகவல் வழங்க முன்வருவதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் போராடியே தகவல்களைப் பெறுகிறார்கள். அண்மையில், ராஜீவ் காந்தி கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், ஒரு தசாப்தத்துக்கு முன்னர், தாம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவுக்கு என்ன நடந்தது என தகவலறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதிகாரிகள் அதற்கு பதிலளிக்க இணக்கம் தெரிவித்தனர். 

இந்தியப் பிரதமர் மோடியின் மனைவி, நீண்ட காலமாக மோடியிடமிருந்து பிரிந்தே வாழ்கிறார். அவர் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த போது, திருமணச் சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தால், அந்த விண்ணப்பப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது. அப்போது மோடியின் மனைவி, அவ்வாறாயின் மோடி எவ்வாறு கடவுச் சீட்டைப் பெற்றார் என தகவலறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதிகாரிகள் அதற்கு பதிலளிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

எனவே, இலங்கையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் போராடியே தகவல் பெற வேண்டியிருக்கும். சட்டம், அந்தப் போராட்டத்துக்கான 'லைசென்ஸ்' ஆகவே அமையும். அதேவேளை, அந்தப் போராட்டம் சிலவேளை மாதக் கணக்கு நீடிக்கவும் கூடும். ஏனெனில், முதலாவது விண்ணப்பத்துக்குப் பதிலாக, குறிப்பிட்ட நிறுவனத்தின் தகவல் அதிகாரி தகவல் வழங்காவிட்டால் மற்றோர் அதிகாரியிடம் போக வேண்டும்.

அவரும் மறுத்துவிட்டால் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் செல்ல வேண்டும். அங்கும் கோரிக்கை நிராகரிக்கப்ட்டால், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். இவ்விடயங்களிலும் உடனடியாகத் தகவல் வழங்கவோ அல்லது கோரிக்கையை நிராகரிக்கவோ வேண்டும் என்றில்லை. அதற்காக அவர்களுக்கு சட்டத்தாலேயே குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தச் சட்டமும் தகவலறியும் உரிமையை பூரணமாக வழங்கவில்லை. ஆனால் உரிமையே இல்லாத நிலைமையை விட இதுவும் நல்லது தான்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .