மூலதனச் சந்தையும் முதலீடுகளும்
07-04-2016 09:46 AM
Comments - 0       Views - 621

இம்ரான் மன்சூர்
(இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தணை ஆணைக்குழு )

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முதலீடுகள் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் முதலீடுகளை உருவாக்குகின்ற பிரதான மூலமாக பங்குச்சந்தை (stock market) காணப்படுகின்றது. மேலும் பங்குச்சந்தையானது, ஒரு நாட்டின் முக்கியமான பொருளாதார குறிகாட்டியாகவும் காணப்படுகின்றது.

பொருட்களை வாங்கவும் விற்கவும் மக்கள் ஒன்றுகூடும் இடம் சந்தை எனப்படுவது போல் முதலீட்டாளர்கள் பங்குகள் தொகுதிக்கடன்கள் மற்றும் ஏனைய பிணையங்களை கொள்வனவு, விற்பனை செய்யும் இடம் பங்குச்சந்தை எனப்படும்.
ஆனால், பொருட்களை கொள்வனவு, விற்பனை செய்ய இடம் தேவைப்படுவது போல் பங்குச்சந்தைக்கு குறிப்பிட்ட இடம் தேவைப்படுவதில்லை. கணினி மூலமாகவும்  முகவர்கள் மூலமாகவும் பங்குகளை வாங்கி விற்பனை செய்ய முடியும்.

பங்குச்சந்தை தொடர்பான அறிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இப்பத்திரிகை தொடரானது இவ்வாரம் முதல் ஆரம்பிக்கப்படுகிறது.

முதலில் பங்குச்சந்தை தொடர்பாக தெரிந்து கொள்ள முன்னர் சேமிப்பு முதலீடு பற்றி அறிந்து கொள்வோம்.

சேமிப்பு- முதலீடு

சேமிப்பும் முதலீடும் இரு வேறு கோட்பாடுகளாகும். சேமிப்பு என்பது ஒருவர் தனது வருமானத்திலிருந்து ஒரு பகுதியை எதிர்கால தேவைகளுக்காக ஒதுக்கி வைப்பது சேமிப்பு எனப்படும்.

சேமிப்பை எப்போது முதலீடு என்று அழைக்கலாம்?

சேமித்த பணத்தை வருமானம் பெறும் வழிகளில் ஈடுபடுத்தும் போது அது முதலீடு எனப்படும். உதாரணமாக வியாபாரத்தில் ஈடுபடுத்தி இலாபம் பெறலாம். அல்லது வங்கியில் சேமித்து வட்டி பெறலாம். அல்லது பங்குச்சந்தையில் பங்குகளை கொள்வனவு செய்வதன் ஊடாக மூலதன இலாபம், பங்கு இலாபம் மற்றும் பல அனுகூலங்களை பெறலாம்.

முதலீடுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன அசையாத சொத்துக்களில் முதலிடல், அசையும் சொத்துக்களில் முதலிடல். நிலம், வீடு போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளை அசையாத சொத்துக்களில் முதலிடல் என வகைப்படுத்தலாம் மேலும் இவை மிகவும் இலாபகரமானதாகும். பொதுவாக இதன் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கும். ஆனால், இதிலும் சில பிரதிகூலங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக சிறு முதலீட்டுக்கு இவை ஏற்றதல்ல. அதாவது பெருந்தொகை பணத்தை முதலீடு செய்ய வேண்டி ஏற்படும். மேலும் அவசர தேவைகளின் போது இலகுவாக பணமாக்க கடினமாகும். சிறிய வருமானமுடைய குறுகிய காலத்தில் பணமாக மாற்ற நினைப்பவர்களுக்கு இது ஒரு கடினமான முதலீடாகும்.

நகை, வங்கிச்சேமிப்பு, கடன் பத்திரங்கள், பங்குகள் போன்றவற்றை அசையும் சொத்து முதலீடுகளுக்கு உதாரணமாக குறிப்பிடலாம். தங்கம் ஒரு எளிமையான முதலீடாக கருதப்படுகின்றது. இருந்தாலும தொடர்ச்சியான விலை ஏற்ற இறக்கம் இதில் காணப்படும் குறைபாடாகும். வங்கிச் சேமிப்புகள் நடுத்தர வர்க்கத்தினாலும், முதியோர்களாலும் மிகவும் விரும்பப்படுகின்றது. மேலும் கடன்பத்திரங்கள் வங்கிச்சேமிப்புகளை விட அதிக இலாபத்தை தரக்கூடியவை.

பங்குகளை துணிகரமான முதலீடுகளாக குறிப்பிடலாம். இவ்வகை முதலீடுகளில் இலாபம் மற்றும் நட்டம் காணப்படும். ஆனால் மற்ற எல்லா முதலீடுகளை விடவும் அதிக இலாபத்தை திறமையான முதலீட்டின் மூலம் பெறலாம்.

முன்பெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் பங்குகளில் முதலிடுவதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் நிலைமை தற்போது மாறிவருகின்றது. மக்கள் அதிக இலாபத்தை நீண்ட காலத்தில் குறைந்த முதலீட்டின் ஊடாக எதிர்பார்க்கின்றனர்.

குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பதற்கு பங்குச்சந்தை மிகவும் உகந்த ஒன்றாகும்.

இலங்கையில் கொழும்பு பங்குபரிமாற்றகமானது, (Colombo stock exchange) இலங்கையில் பங்குச்சந்தை நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் ஒரு நிறுவனமாக காணப்படுகின்றது. கொழும்பு பங்குபரிமாற்றமானது, உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் (securities and exchange commission of srilanka) இலங்கையில் ஒரு பங்குச்சந்தையாக செயற்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். கொழும்பு பங்குபரிமாற்றமானது, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள 35 பங்குத்தரகு நிறுவனங்களை (stock brokers) அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும்.

கொழும்பு பங்குச்சந்தை 294 பட்டியல்படுத்தப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது அத்தோடு அதன் மொத்த சந்தை மூலதமானது அண்ணளவாக 2.5 ட்ரில்லியன் ரூபாயாக காணப்படுகிண்றது.

இலங்கையில் பிணையங்கள் சந்தையை முறைமைப்படுத்தும் நிறுவனமாக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு காணப்படுகின்றது.

பங்குச்சந்தையில் எவ்வாறு பங்குகளை கொள்வனவு விற்பனை செய்தல் கிடைக்கும் நன்மை தீமைகள் போன்ற பல சுவாரசியமான விடயங்களை எதிர்வரும் வாரங்களில் பார்க்கலாம்.

 

"மூலதனச் சந்தையும் முதலீடுகளும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty