2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வட மாகாண சபையின் யோசனைகளும் எதிர்வினைகளும்

Thipaan   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில், வட மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ் மாநிலமொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் அந்த மாநிலத்தினை முன்னிறுத்தி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களுமே எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கின்றன.

அரசியல் அதிகாரத்தினை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னுடைய பிரதான இலக்கு பற்றிய எண்ணப்பாடுகளில் சில மாறுதல்களை அல்லது விட்டுக் கொடுத்தல்களைச் செய்து வந்திருந்தாலும், தமிழ் மக்களின் சுதந்திரம், தேசம் (தனிநாடு என்கிற எண்ணக்கருவினைக் குறிக்கவில்லை), அரசியல் அங்கிகாரம் என்கிற விடயங்களில் எந்தவித விட்டுக்கொடுப்பினையும் செய்து கொள்வதற்கு தயாராக இருக்கவில்லை. அது, போராட்ட வடிவங்கள் கோலொச்சிய போதும், வீழ்த்தப்பட்ட காலங்களிலும் கூட.

அப்படிப்பட்ட நிலையில், தம்முடைய அதிகாரம் மற்றும் அடிப்படைகள் தொடர்பிலான எண்ணக்கருக்களை தமிழ்த் தேசியத் தரப்பு முன்வைப்பது இயல்பானது. அதுபோலவே, அது தொடர்பில் மற்றைய தரப்புக்களினால் முன்வைக்கப்படும் விமர்சனங்களும், எதிர்வினைகளும் முழுமையாக உள்வாங்கி பிரதிபலிக்கப்பட வேண்டியவை. மாறாக, அவற்றை புறந்தள்ளிக் கொண்டு, எமது கோரிக்கைகளின் நியாயத்தன்மை பற்றி நாம் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதிலும் பலனில்லை. எதிராளிகளோடு நியாயமான விவாதங்களை எதிர்கொண்டு எம்முடைய நிலைப்பாட்டின் நியாயங்களை எடுத்துக் கூற வேண்டிய தேவையுண்டு.

தென்னிலங்கையின் பிரதான தரப்பான பௌத்த சிங்கள அதிகார பீடம் என்றைக்குமே இலங்கைக்குள் அதிகாரங்கள் பங்கிடப்படுவதை விரும்பவில்லை. அது, அதிகாரங்களை மத்தியில் குவித்து வைத்துக் கொண்டிருப்பதையே விரும்புகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட சபைகள் என்கிற விடயங்களினூடும் கூட, உப்புசப்பான  அதிகாரங்களை பகிர்வதைக் கூட விரும்பவில்லை.

அப்படிப்பட்ட நிலையில், அந்தத் தரப்போடு எமது தேசத்துக்கான உரிமைகளைக் கோரி போராடுதலும் அதற்கான முனைப்பும் பெரும் பலமான பக்கத்தில் இருக்க வேண்டும். தமிழ்த் தேசியப் போராட்டங்கள் பேரெழுச்சி பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பௌத்த சிங்கள அதிகார பீடம் பெரும் பீதியுற்றிருக்கின்றது. அதுதான், நியாயமான போராட்டங்களை மூர்க்கத்தனமாக முறைகளினூடு காலம் காலமாக அடக்கி வந்திருக்கின்றது. அத்தோடு, தமிழ் தேசியத்துக்கு எதிரான கொதிநிலையை தென்னிலங்கையில் வளர்த்தெடுத்து அதனை தக்க வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தி வந்திருக்கின்றது.

அப்படிப்பட்ட நிலையில், வட மாகாண சபை முன்வைத்துள்ள சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் பற்றிய யோசனைகளை தனிநாட்டுக்கான கோரிக்கையாக, தென்னிலங்கையின் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் காட்டிக் கொண்டு குதிக்கின்றன. இன்னொரு பக்கம்

இடதுசாரி-சமத்துவம் பற்றிய அரசியல் நிலைப்பாடு பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னுடைய இனவாத முகத்தை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது. பிரிவினைவாதத்துக்கும் அதிகாரப் பங்கீட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தினை உணராத தலைவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்குள் இல்லை.

மாறாக, சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச காலத்து இனவாத நிலைப்பாட்டினை விட்டு நகர்வதிலிருந்து அவர்கள் பின்நிற்கின்றனர். அதன் பிரதிபலிப்பை அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கீழ்கண்டவாறு வெளிப்படுத்துகின்றார். 'நாட்டில், சமஷ்டி ஆட்சியென்ற ஒன்று ஏற்படுத்தப்படலாம். ஆனால், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாது. மாறாக பிரிவினை அதிகரிக்கும். அவ்வாறானதொன்று ஏற்படுத்தப்படுமானால், வடக்கில் தமிழ் இனவாதமும் தெற்கில் சிங்கள இனவாதமுமே தலைதூக்கும்' என்றிருக்கின்றார்.

பௌத்த சிங்கள தேசியவாத சிந்தனைகளோடு இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒற்றையாட்சிக் கோட்பாட்டிலும், பௌத்த சிங்கள அதிகார மையவாத்துள்ளும் இருப்பது இயல்பானது. அந்தக் கட்சிகளின் தோற்றமும் போக்கும் அதனை ஒற்றியது மட்டுமே. மாறாக, பௌத்த சிங்கள (உயர்சாதி-உயர்வர்க்க) மையவதத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை முன்வைத்து போராடக் களம் கண்ட மக்கள் விடுதலை முன்னணி போன்ற தரப்புக்கள், சமத்துவம் என்கிற விடயத்தைப் புறந்தள்ளி, பௌத்த சிங்கள (உயர்சாதி-உயர்வர்க்க) மையவதத்துள் தன்னை புதிய வடிவில் கரைத்துக் கொண்டிருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். அநுரகுமார திசாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்தை ஏற்ற பின்னர் அரசியல், பொருளாதார அடிப்படைகள் தொடர்பில் கட்சி முன்னேற்றகரமான சில பக்கங்களில் நகர்ந்தாலும் இனவாத, ஒற்றையாட்சிக் கோட்பாட்டிலிருந்து வெளியேறவில்லை என்பது கசக்கும் உண்மை.

அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் இனமுரண்பாடுகளுக்கான தீர்வு தொடர்பிலான யோசனைகளை, தமிழ் மக்களினால் பெருவாரியான ஆதரவோடு தெரிவு செய்யப்பட்ட மன்றமொன்று முன்வைக்கவே முடியாத நிலையை ஏற்படுத்தி விட வேண்டும் என்கிற தோரணையிலான அணுகுமுறையை தென்னிலங்கை வளர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டிதிலிருந்து, தமிழ் மக்களை தாம் வெற்றி கொண்டு விட்டதாக தென்னிலங்கையை நம்ப வைப்பதற்கு பௌத்த சிங்கள அதிகார பீடம் பெரும் பிரயத்தனங்களை எடுத்தது.

அதனை, இன்னமும் செய்து கொண்டிருக்கின்றது. அதன்போக்கிலேயே, பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டு, இன்னமும் இயக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், வட மாகாண சபையின் தீர்வு யோசனைகளுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடுகளை அந்தத் தரப்புக்கள் முன்வைத்தமை என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

இந்த இடத்தில் இன்னொரு விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அதாவது, வடக்கு-கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் தரப்பிடமிருந்து எழுந்திருக்கின்ற எதிர்வினை மற்றும் விமர்சனங்கள் பற்றியது. இலங்கையில் மாகாண அலகுகள் உருவாக்கப்பட்டு வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டமை என்பது, இந்தியா தன்னுடைய பிராந்திய வல்லாதிக்கத்தை நிகழ்த்தி, இலங்கையைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளும் நோக்கிலானதாகும்.

ஆனால், இனமுரண்பாடுகள் மற்றும் தமிழ்த் தேசியக் கோரிக்கைகளுக்கு அதிகாரங்களற்ற மாகாண சபை முறைமையை இறுதித் தீர்வாக முன்மொழிந்துவிட்டு தப்பித்தல் என்பது மிகவும் அபத்தமான விடயமாகும். மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு மூன்று தாசப்த காலமாகின்றது. ஆனால், மாகாண சபைகளின் தோற்றம் ஆரம்பத்திலேயே தோற்றுப்போன ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கும் பிரிக்கப்பட்டுவிட்டது. அதனை, ஏவல் கருவியாக இருந்து நடத்திக் காட்டியவர்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் முக்கியமானவர்கள்.

வடக்கு-கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டால், வடக்கு-கிழக்கில் தன்னுடைய பெரும்பான்மையிழப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகம் அக்கறை கொள்வது இயல்பானது. குறிப்பாக, முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் இரண்டாம் மூன்றாம் நிலைக் கட்சிகள் அதனால் பெருமளவு பாதிப்புக்குள்ளாகும்.  அதனாலும், கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டிய நிலைக்கு சில கட்சிகள் தள்ளப்பட்டிருக்கின்றன. ஏனெனில், வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே பிரதான கட்சியாக முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும்.

வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு சற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. ஆனால், இரண்டாம் மூன்றாம் நிலை கட்சிகளான ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகியன தமது செல்வாக்கை இழக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். குறிப்பாக, ஒரு பிரதேசக் கட்சியாக மட்டும் இருக்கும் அதாவுல்லாவின் தேசியக் காங்கிரஸுக்கு அது பாரிய இழப்பாக இருக்கும். அப்படியான நிலையில், அதாவுல்லா, வடக்கு-கிழக்கு இணைப்பினை மூர்க்கமாக எதிர்ப்பார். ஒரு காலத்தில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் கனவோடு இருந்தவர் அவர். கிழக்கில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெற்றிக் கேடயமெல்லாம் வழங்கியவர் அதாவுல்லா.

இந்த இடத்தில், முஸ்லிம் மக்களின் தனி அலகுக் கோரிக்கையை உள்வாங்கி, நியாயமான முறையில் பிரதிபலிக்க வேண்டிய தேவையொன்று தமிழ்த் தரப்புக்கு உண்டு. அதுதான், அதிகாரப் பங்கீடுகளைக் கோருகின்ற தரப்பு என்கிற வகையில், தமிழ் மக்களின் நியாயமான போக்காகவும் இருக்க முடியும். வடக்கு-கிழக்கு இணைந்த தமிழ் மாநிலம் பற்றிய கோரிக்கைகள் என்பது, தனித்த முஸ்லிம் அலகினையும் அங்கிகரித்துக் கொண்டே ஆரம்பிக்க வேண்டும். அதனை, வடக்கு- கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களிடம் தெளிவாக கொண்டு சேர்ப்பதும் அவசியமானது.

'தமிழ் மக்கள் ஒருமித்து வலியுறுத்தும் சமஷ்டி தீர்வுக் கோரிக்கையானது, இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்தும் கோரிக்கையோ, அல்லது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களோடு இணங்கி வாழாமல் தனித்து வாழும் விருப்பமோ இல்லை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்' என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். இதையே, வேறு வேறு வடிவங்களில் இரா.சம்பந்தனும் சி.வி.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அது சார்ந்தே இருக்கின்றது. மாறாக, பிரிவினைவாதங்களின் போக்கிலானது அல்ல.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X