2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பனாமா ஆவணங்கள்: தெரிந்ததும் தெரியாததும்

Thipaan   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

செய்தி செய்திகட்காகவன்றி, அதன் அருட்டும் தன்மையாலேயே முக்கியம் பெறுகின்றது. பல சமயம், சில நூறு பேரைக் காவு கொண்ட இயற்கை அனர்த்தத்தை விடத் தடுக்கி விழுந்த அரசியல்வாதியோ சினிமாப் பிரபலமோ பற்றிய செய்தி கூடிய கவனம் பெறுகிறது. இவை ஒருவகையில் ஊடகங்கள் திட்டமிட்டுச் செய்வன. அதேவேளை, எவ்வாறோ, மக்கள் எதிர்பாராத, வியப்பூட்டும்; செய்திகளே 'செய்தித்; தன்மையுள்ளவை' எனக் கொள்ளப்படுகின்றன. அதனாற் செய்தியின் உண்மைத்தன்மை, அதன் பின்புலம், செய்தி உருவான நோக்கம் என்பன செய்தியின் அருட்டும் தன்மை காரணமாக எளிதாகப் புறந்தள்ளப்படுகின்றன. 'செய்திகளாகும் தன்மையுள்ளவை' எனக் கருதும் 'செய்திகளில்' புலனாகும் தகவல்களை விடப் புலனாகாத தகவல்களே அதிகம். குறித்த செய்தி மூலம் வெளிவராத தகவல்கள் எவையெனவும் ஏன் அவை வெளிவரவில்லை எனவும் ஆய்வது வெளிவந்த செய்திகளை விடச் 'செய்தித் தன்மையுடைய' செய்திகளை உருவாக்கும்.

'பனாமா ஆவணங்கள்' கடந்த சில வாரங்களாக உலகளாவிய அதிர்ச்சியலைகளை உருவாக்கி வருகின்றன. பனாமாவின் சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகாவின் உதவியுடன் தாம் சட்டவிரோதமாகப் பெற்ற பெருந்தொகைப் பணத்தை வரி ஏய்ப்புப் புகலிடங்களில் பலர் வைத்திருந்தமை அம்பலமானது. இது பல நாடுகளில் அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அதேவேளை இதன் மூலம் ஒருவகையான 'பெயரிட்டு இழிவுபடுத்தலும்' நடந்தேறுகிறது.

பனாமாவை மையமாகக் கொண்டியங்கும் மொசாக் பொன்சேகா என்ற சட்ட ஆலோசனையுட்பட்ட கூட்டாண்மை நிறுவனச்; சேவை நிறுவனத்தினின்று கசிந்த ஆவணங்களே பனாமா ஆவணங்களாம். 1986ஆம் ஆண்டு தொடங்கிய மொசாக் பொன்சேகா நிறுவனம் உலகளாவ நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளைக் கொண்டது. இந் நிறுவனம், வரி ஏய்ப்புப் பற்றியும் எவருக்கும் தெரியாதவாறு பணத்தைப் பிற நாடுகளில் - குறிப்பாக வரி ஏய்ப்புப் புகலிடங்களில் - ஒளித்து வைப்பது போன்ற செயற்பாடுகட்குத் தனது வாடிக்கையாளர்கட்கு ஆலோசனை வழங்குவதோடு வசதிகளையும் ஏற்படுத்துகிறது. சுருங்கக்கூறின், அது வெளிப்படுத்தப்படாத கறுப்புப் பணத்தைப் பதுக்க உதவுகிறது.

மொசாக் பொன்சேகா உலகளாவிய நிதி மூலதன நிறுவனங்களில் 10 சதவீதமானவற்றைத் தன் கட்டுப்பாட்டுட் கொண்டுள்ளது என 'The Economist' சஞ்சிகை தெரிவிக்கிறது. அதன்படி, உலகளாவிய நிதி நிறுவனங்களிலும் சர்வதேச வர்த்தகத்திலும் அந்நிறுவனம் முக்கிய பங்காளியாயுள்ளது. மொசாக் பொன்சேகா உலகின் முக்கிய சர்வதேச வங்கிகள் பலவற்றுடன் இணைந்து பணியாற்றுகிறது. அவற்றுட் குறிப்பிடத்தக்கவை: HSBC, Deutsche Bank,  Credit Suisse, UBS, Norde.  

மிகக் குறைந்த வரிவிதிப்பு, நாட்டின் வங்கிகளிற் பணமிடுவோர் பற்றிய விவரங்களை வெளியிடாமை, பணமிடுவோர் பற்றிய விவரங்களைக் கோரும் நாடுகட்கு எக்காரணம் கொண்டும் அவற்றைத் தெரிவியாமை ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்ட நாடுகள் வரி ஏய்ப்புப் புகலிடங்களாகின்றன. இவ்வாறான புகலிடங்களின் இருப்பை அனைவரும் அறிவர்.புகலிடங்களுட் புகழ் பெற்றவையான 'சுவிஸ் வங்கிகள்' மேற்குறித்த மூன்று அம்சங்களையும் உடைய சுவிட்;ஸர்லாந்து நாட்டில் இயங்கும் வங்கிகளாகும்.

இப் பின்னணியில், மொசாக் பொன்சேகாவின் 11.5 மில்லியன் ஆவணங்கள் - அனைத்தும் தனிப்பட்ட இரகசிய ஆவணங்கள் - கசிந்தமை வரி ஏய்ப்புப் பற்றியும் வரி ஏய்ப்புப் புகலிடங்கள் பற்றியும் அவற்றோடு தொடர்புடையவர்கள் பற்றியும் தகவல்களை அம்பலமாக்கின.

இவ்வாவணங்கள் 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து பகுதி பகுதியாக ஜேர்மனியப் பத்திரிகையான Sueddeutsche Zeitungகுக்கு ஜோன் டூயி என்ற புனைபெயரில் அனுப்பப்பட்டவையாகும். இவை மொத்தமாக 2.6 டெராபைட் அளவு தகவல்களைக் கொண்டவை. இவை பின்னர் புலனாய்வு ஊடகவியலாளர் சர்வதேசக் கூட்டமையத்திடம் கையளிக்கப்பட்டு உலகளாவ 76 நாடுகளில் உள்ள 107 ஊடக நிறுவனங்களிற் பணியாற்றும் 400 ஊடகவியலாளர்கள் ஆய்ந்து செவ்வைபார்த்த பின் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வெளியிடப்பட்டன.

அவை வெளியான போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் அதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற தோரணையில் அச் செய்திக்கு முக்கியம் தரப்பட்டது. பனாமா ஆவணங்களில் பெயர் கூறப்பட்ட ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகினார் எனச் சொல்லப்பட்டது. பனாமா ஆவணங்கள் கசியவிட்டுப் பொது வெளிக்கு வந்தமை, சர்வதேச நிதிக் கட்டமைப்பை உலுக்கிய ஒரு நிகழ்வாகவும் பெரும் பணக்காரர்கள் பெரியளவில் வரி ஏய்ப்பை மேற்கொள்கிறார்கள் என்பதையும் வரிவிதிப்புச் சட்டங்கள் பணம் படைத்தோருக்கு வாய்ப்பாக உள்ளன என்பதையும் பொதுப்புத்தி மனநிலைக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாகவும் அமைந்தது. இது கதையின் ஒரு பக்கம். எமக்குச் சொல்லாத பல பக்கங்கள் உள்ளன. அவை பனாமா ஆவணப் பக்கங்களின் இன்னொரு முகத்தைத் தோலுரிப்பன.

தகவல் கசிவு முதன்முதலில் விக்கிலீக்ஸ் மூலம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. விக்கிலீக்ஸ் பொதுமக்களின் நலன்கருதி மக்களுக்கு மறைபடுகின்ற அதிகார வர்க்கத்தின் முகத்தைக் காட்டத் தோன்றியது. பனாமா லீக்ஸ்ஸும் அவ்வாறே இடம்பெற்றது. இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், ஓராண்டுக் காலமாக உலகளாவிய ஊடகவியலாளர்கள் 400 பேரின் கைகளில் இருந்த ஒரு தகவல் எவ்வாறு அவ்வளவு காலமும் கசிவேயின்றி இருந்தமையாகும். ஊடகவியலாளர்கள் வேண்டுவன பரபரப்புச் செய்திகள்.

எனவே, அவர்கள் ஓராண்டு காலம் பொறுமையாக இச்செய்தியைக் கசிவின்றி வைத்திருந்தமை அசாத்தியம். எனவே 400 ஊடகவியலாளர்களின் கவனமான ஓராண்டுக் கால ஆராய்ச்சியும் தகவல் உறுதிப்படுத்தலும் என்பதை நம்புதல்; கடினம். அதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த விக்கிலீக்ஸ், பனாமா ஆவணங்களின் கசிவின் பின்னால் உள்ள நோக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியதுடன் அவை பொதுநல நோக்கிற் கசியவிடப்படவில்லை என்றும் இவ்வாறான கசிவுகள் மூலம் விக்கிலீக்ஸ் போன்றவற்றின் நற்பெயருக்குப் பங்கம் விளைப்பதோடு அவ்வாறான 'ஊதல் ஒலிப்போருக்கு' அவப்பெயரை உருவாக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளது.

கிடைத்த தகவல்களின் குறிக்கப்பட்ட ஒரு தொகுதி தகவல்களை மட்டுமே புலனாய்வு ஊடகவியலாளர் சர்வதேசக் கூட்டமையம் வெளியிட்டுள்ளது. இதிற் பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலமானோர், பெரு நிறுவனத் தலைவர்கள்; எனப் பலர் உள்ள பட்டியலில்  441 அமெரிக்கர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. அவர்களில் எவருமே நன்கறியப்படாதோராவர். நன்கறிந்த அமெரிக்கர்கள் எங்கே? அமெரிக்காவின் எந்தவோர் அரசியல் தலைவரோ, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் நீங்கலாக மேற்குலகின் எந்தவோர் அரசியல் தலைவரும்

இப்பட்டியலில் இல்லை. இது, பனாமா ஆவணங்களின் நம்பகத்தை மட்டுமன்றி அதனிலும் மேலாகக் கசிவின் உள் நோக்கங்களைக் கேள்விக்குட்படுத்துகிறது.

புலனாய்வு ஊடகவியலாளர் சர்வதேசக் கூட்டமையம் அனைத்துத் தகவல்களையும் முழுமையாக வெளியிடாது. பெரும்பாலான தகவல்கள் தொடர்ந்தும் இரகசியமாயும் அந்தரங்கமாயும் இருக்கும். அவை பொதுவெளிக்கு வரமாட்டா எனக் கூட்டமையம் தெரிவித்துள்ளது. இவை 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற கதை தான். அனைத்துத் தகவல்களையும் புலனாய்வு ஊடகவியலாளர் சர்வதேசக் கூட்டமையம் வெளியிட மறுப்பது கசிவின் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. அதைவிடத், தகவல் மறைப்பை அறிவித்ததன் ஊடாக அதில் பெயர்களைக் கொண்டிருப்பவர்களை அச்சுறுத்தித் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.

புலனாய்வு ஊடகவியலாளர் சர்வதேசக் கூட்டமையத்தின் தோற்றுவாய் பல வினாக்களுக்கு விடை தருகிறது. அதன் நிதி வளங்கள் அமெரிக்க உதவி (USAID) நிறுவனத்திடம் இருந்து மறைமுகமாகவும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன், ரொக்கஃபெலர் ஃபவுண்டேஷன், ஓபன் சோசைட்டி ஃபவுண்டேஷன் ஆகியவற்றிடம் இருந்து நேரடியாகவும் பெறப்படுகின்றன. மொத்தத்தில், அமெரிக்காவுக்காக உலகெங்கும் ஆட்சி மாற்றத்துக்கு உதவும் நிறுவனங்களே இந்தப் புலனாய்வு ஊடகவியலாளர் சர்வதேசக் கூட்டமையத்தின் நிதி வழங்குனர்களாவர்.

விளாடிமிர் புட்டினை மையப்படுத்தி பனாமா ஆவணங்கள் செய்திகளாகின. ஆனால், விளாடிமிர் புட்டினின் பெயர் பட்டியலில் இல்லை. எனினும் குறிப்பாக பி.பி.சி, சி.என்.என் போன்ற மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டுப் பொய்யைப் பரப்பின. சிரிய அரசு, பல்மைராவில் பெற்ற வெற்றியை மறைத்துப் பனாமா ஆவணங்களைச்; செய்தியாக்கினர்.

இக்கசிவில் முதலில் பெயர் குறிக்கப்பட்டுப் பலியானவர் ஐஸ்லாந்துப் பிரதமர் சிக்முண்டுர் குண்லொக்சன். 2006ஆம் ஆண்டு ஐஸ்லாந்தின் இறுதி அமெரிக்கப் படைத்தளத்தை மூடியதையடுத்து, ஐஸ்லாந்து ரஷ்யாவுடனும் சீனாவுடனும் நெருக்கமான உறவுகளை நாடியது. சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திட்ட ஒரே ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்து. சீனா ஐரோப்பியச் சந்தைக்குப் பண்டங்களை ஆர்க்டிக் கடல் வழியாக அனுப்ப முனைகிறது. ஐஸ்லாந்து சீனாவின் புதிய சந்தையின் மூலோபாயக் கேந்திரமாய் அமையவுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐஸ்லாந்துக்குமிடையான உறவில் பாரிய விரிசல் விழுந்துள்ளது. பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐஸ்லாந்தின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதை ஐஸ்லாந்து தடைசெய்தமையை ஐரோப்பிய ஒன்றியத்தாற்; பொறுக்க இயலவில்லை.

ஐஸ்லாந்துப் பிரதமருக்கும் உலகின் நிதி மூலதன முகவர்களுக்குமிடையிலான மோதல் தொடர்ச்சியானது. 2008இல் ஐஸ்லாந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போது, அதியுயர் பதவி வகித்த 29 வங்கி நிர்வாகிகளைச் சிறையிட்டதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து, வலுவான தேசியப் பொருளாதாரக் கொள்கை மூலம் தன்னை மீட்;டது. இவை உலக நிதியியல் சக்திகட்கு உவப்பானவையல்ல. பனாமா ஆவணங்கள் வெளிவர முன்னரே தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று ஐஸ்லாந்துப் பிரதமருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்ளை ஒழுங்குபடுத்தியதாக ஐஸ்லாந்துப் பத்திரிகையொன்று சான்றுகளை வெளியிட்டுள்ளது.

ஐஸ்லாந்துப் பிரதமர் பதவி விலகினார் என்றும் அது பனாமா ஆவணங்களின் வலிமை என்றும் இப்போது எமக்குச் சொல்கின்றனர். ஆனால், அவர் பதவி விலகவில்லை. அவர் பதவியைத் தற்காலிகமாகப் பிரதிப் பிரதமருக்கு வழங்கி ஓய்வில் இருப்பதாகவும் சில காலத்தின் பின் மீண்டும் பதவியை ஏற்பார் என்றும் ஐஸ்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு விடயமேதெனில் அவர் சட்டம் எதையும் மீறவில்லை. பனாமா ஆவணங்கள் கூறும் சொத்துக்களை அவர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். எனவே அவர் எதையும் மறைத்தார் எனக் குற்றஞ்சாட்டவோ அவரைக் குற்றவாளியாக்கவோ முடியாது. 

பனாமா ஆவணங்களில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனமான பீஃபாவின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பலரின் பெயர்கள் உள்ளன. 2018ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்த பீ‡பா ரஷ்யாவைத் தெரிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் பீஃபாவுக்கும் இடையே முறுகல் இருந்து வருகிறது. 2018 உலகக்கிண்ணப் போட்டியை நடத்த ரஷ்யாவுக்கு அனுமதி வழங்கியதை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வன்மையாகக் கண்டித்தன. மனித உரிமைகளை மறுக்கும் ரஷ்யாவை இப் போட்டிகளை நடாத்த அனுமதிக்கக்கூடாது என மேற்குலகிலிருந்து எழுந்த பல குரல்களில் எதையும் பீஃபா அலுவலர்கள் காதில் போடவில்லை. அவர்களிற் பலர், இக்கசிவின் மூலம் அவமானத்துக்குள்ளாகிறார்கள்.

கவனிக்க முக்கியமானது யாதெனில், பெயர் குறிப்பிட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகளோ வரி ஏய்ப்பாளர்களோ அல்ல. பலர் குற்றவாளிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்,  அவர்கள் மட்டுமே பனாமா ஆவணங்களினூடாகக் குறிவைக்கப்படுகின்றனர் என்பது கவனிப்புக்குரியது.

பனாமா ஆவணங்களில் பெயர் குறித்த பலருக்கும் மேற்குலக அதிகார வர்க்கத்துக்குமிடையே அரசியல், வர்த்தகப் போட்டிகளும் வன்மமும் உள்ளன. இவ் ஆவணங்களின் வெளியீடு ஒரு பழிதீர்க்கும் படலமாகிறது. மேற்குலக ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளிடையே இதை முக்கிய கசிவாகத் திரித்துப் பொதுப் புத்தியில் பதிய வைக்க முயல்கின்றன.

மொத்தத்தில், பனாமா ஆவணங்கள் சொல்லிய விடயங்களை விடச் சொல்லாது விட்ட விடயங்கள் கூடிய கவனத்தை வேண்டுகின்றன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .