2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வேட்பாளர் கனவை நெருங்கிவிட்ட ஹிலாரி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

ஜனநாயகக் கட்சி சார்பாக எஞ்சியுள்ள வேட்பாளர்களான ஹிலாரி கிளின்டன், பேர்ணி சான்டர்ஸ் இருவரும், ஜனாதிபதியாக வருவார்களானால், அமெரிக்க வரலாற்றின் மிக முக்கியமான மாற்றமாக அமையும். ஜனாதிபதியாக ஹிலாரி வந்தால், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக அவர் மாறுவார் என்பதோடு, சான்டர்ஸ் வந்தால், அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார். ஆனால், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் தெரிவாகின்றமை, ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி சார்பாக வேட்பாளராக வருவதற்கு, 2,383 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுவது அவசியமாகும். அதில், சுப்பர் பிரதிநிதிகள் என அழைக்கப்படும், தங்கள் வாக்கை எப்போதும் மாற்றக்கூடிய பிரதிநிதிகளும் உள்ளடங்குவர்.
தற்போதைய நிலையில், 2,159 பிரதிநிதிகளை ஹிலாரி கிளின்டன் வெற்றிகொண்டுள்ளார். சாதாரண பிரதிநிதிகள் 1,640 பேரும் சுப்பர் பிரதிநிதிகள் 519 பேரும் அவருக்கு ஆதரவளித்துள்ளனர். மாநிலங்கள், சுயாட்சிபெற்ற பகுதிகள் ஆகியவற்றில் இடம்பெற்ற தேர்தலில், 25ஐ அவர் வெற்றிகொண்டுள்ளார். மறுபுறத்தில் பேர்ணி சான்டர்ஸ், 1,370 பிரதிநிதிகளை வெற்றிகொண்டுள்ளார். சாதார பிரதிநிதிகள் 1,331 பேரும் சுப்பர் பிரதிநிதிகள் 39 பேரும் அவருக்கு ஆதரவளித்துள்ளனர். 18 தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

இன்னமும் 14 மாநிலங்களின்/ சுயாட்சிப் பிராந்தியங்களது தேர்தல் எஞ்சியுள்ள நிலையில் 1,206 பிரதிநிதிகளின் ஆதரவு இன்னமும் காணப்படுகிறது. இதில், வேட்பாளராகத் தெரிவாகுவதற்கு ஹிலாரிக்கு 223 பிரதிநிதிகளது ஆதரவே தேவைப்படுவதோடு, சான்டர்ஸ{க்கு 1,012 பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர். ஹிலாரிக்கு வாக்களித்துள்ள சுப்பர் பிரதிநிதிகளில் அரைவாசிப் பேர்  தங்களது வாக்குகளை இறுதி நேரத்தில் மாற்றினாலும் கூட, சான்டர்ஸின் வாய்ப்பு, மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

குடியரசுக் கட்சி சார்பாக வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு, 1,237 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். குடியரசுக் கட்சியில், சுப்பர் பிரதிநிதிகள் என்ற கட்டமைப்புக் கிடையாது. அக்கட்சியின் முன்னணி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், 950 பிரதிநிதிகளினது ஆதரவை வென்றுள்ளார். 560 பிரதிநிதிகளது ஆதரவை டெட் குரூஸ{ம் 153 பிரதிநிதிகளது ஆதரவை ஜோன் கேசிக்கும் வெற்றிகொண்டுள்ளனர். போட்டியிலிருந்து விலகியுள்ள மார்க்கோ ரூபியோ, 171 பிரதிநிதிகளது ஆதரவை வென்றிருந்தார். இன்னும் 10 மாநிலங்களது தேர்தல் எஞ்சியுள்ள நிலையில், 502 பிரதிநிதிகளின் ஆதரவை, வெற்றியாளர்கள் பெற முடியும். டொனால்ட் ட்ரம்ப்புக்கு, இன்னமும் 287 பிரதிநிதிகளது ஆதரவு தேவைப்படுகிறது. எனினும், இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு, அவர் கடுமையாகப் போராட வேண்டியிருக்குமெனக் கருதப்படுகிறது.

முழுமையான முதன்மைத் தேர்தலின் பின்னரும்கூட, எந்தவொரு வேட்பாளரும் தேவையான ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லையெனில், ஜூனில் இடம்பெறவுள்ள குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், தற்போது தேர்தலிலுள்ள மூவரோடு, கட்சியின் தலைமைத்துவம் விரும்பினால் வேறு வேட்பாளர்களையும் உள்வாங்கிக்கொண்டு, வேட்பாளர் தெரிவு இடம்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .