2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தரிந்துவின் பலகை வீட்டிலிருந்து ரூ.14 இலட்சம் மீட்பு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் பிரதான சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த என்பவரின் நிதியை முகாமைத்துவம் செய்பவர் என்று கூறப்படும் பாதாள உலகக்கோஷ்டி உறுப்பினரின் பலகை வீட்டிலிருந்து 14 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் விற்பனை பணம் கொடுக்கல் வாங்கல் குறிப்புப் புத்தகத்தில் உள்ள தொலைபேசி இலக்கங்களை அடிப்படையாக வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

இந்நிலையிலேயே தெமட்டகொட பகுதியிலுள்ள உலகக்கோஷ்டி உறுப்பினர் தரிந்து பிரபாத் என்பவரின் பலகை வீட்டிலிருந்தே இந்தப்பணம் மீட்கப்பட்டுள்ளது. 

அந்த குறிப்பு புத்தகத்திலிருந்து 6 கோடியே 30 இலட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் பிரதான சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த என்பவரின் நிதியை முகாமைத்துவம் செய்பவரே தரிந்து பிரபாத் என்பவராவார்.

இவர், நாரஹேன்பிட்டியவில் வைத்து கடந்த 25ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து, அன்றையதினம் 5கிராமுக்கு மேல் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அதுமட்டுமன்றி சந்தேகநபரிடமிருந்து, நவீன ரக அலைபேசிகள் எட்டும் குறிப்புப் புத்தகமொன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த குறிப்பு புத்தகத்தில், சிறைச்சாலை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பதியப்பட்டிருந்தது.

பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து,  நாரஹேன்பிட்டிய கிரிமண்டல வீதியில் வைத்து உலகக்கோஷ்டி உறுப்பினர் தரிந்து பிரபாத் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பு புத்தகத்தை சோதனை செய்தபோது, கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் இம்மாதம் 24ஆம் திகதி வரையான போதைபொருள் வியாபாரத்தில் கிடைத்த 351 இலட்சம் ரூபாய், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தெமட்டகொடை சமிந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், பாதாள உலக குழுக்களின் தலைவனின் பாதுகாப்புக்காக மாய மந்திரம் செய்வதற்கு கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள பூசாரிக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குறிப்பு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

168 பக்கங்களைக் கொண்ட இந்த குறிப்பு புத்தகத்தில் 84 பக்கங்களில் கடந்த 5 மாதங்களில் இடம்பெற்ற போதை பொருள் வியாபாரம் தொடர்பான கணக்கு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட் சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி ஆஜர் செய்யப்பட்டபோது, அவரிடம், எதிர்வரும் 30ஆம் திகதி வரை மேலதிக விசாரணை மேற்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .