2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரசியல் கட்சி தலைவர்களின் மேதினச் செய்தி

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள தொழிலாளர் தினத்தையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு:

“உழைக்கும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் குரல் கொடுப்போம்”

மலையக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தமிழ் முற்போக்கு கூட்டணி துணிந்து குரல் கொடுக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும், “மலையக மக்களின் இருநூறு ஆண்டு காலப் பிரச்சினைகளுக்கு ஒரு சில ஆண்டுகளில் தீர்வுகளைக் கண்டு விட முடியாது. சிறுபான்மை சமூகங்கள் தனித்துவம் என்ற பெயரில் சுயநலம் கருதி தனித்து நின்று எதையும் சாதித்து விட முடியாது. அதற்கு மலையக மக்களின் நலன்களைப் பற்றி சிந்திக்கின்ற அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
 

“மைத்திரி- ரணில் ஆட்சியும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை”

மைத்திரி- ரணில் ஆட்சி சிறிய ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தி இருக்கின்ற போதும் நாட்டின் சாதாரண மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய திராணி அதற்கு கிடையாது என  இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பாளர்களுக்கான டபில்யூ. சோரத்தின, இ.தம்பையா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,“ இலங்கையின் அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வென்றேடுக்கவும் புரட்சிகர, ஜனநாயக, இடதுசாரி ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்டு செயற்பட முன்வர வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளனர்.

 

“தொழிலாளர்களுக்கு புது வாழ்வு உதயமாகட்டும்”

மலையக தோட்டத் தொழிலாளர்களது சகல துயரங்களும் நீங்கி அவர்கள் மத்தியில் சந்தோஷமான புது வாழ்வு உதயமாக வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், “மலையகத்தில் ஏனைய அபிவிருத்தி பணிகளை தலைதூக்க வைப்பதற்கு நாம் அனைவரும் இந்த மேதினத்தில் இ.தொ.கா பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் கரங்களை மேலும் பலப்படுத்த ஒன்றிணைவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

 

“நம்பிக்கை உள்ளது”

தொழிலாளர்களது உரிமைகள் மேலுமவலுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலம் சார்ந்த காத்திரமான நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டின் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு உழைக்கும் மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

 

“அனைத்து உரிமைகளையும் பெற்று நிமிர்வோம்”

உழைக்கும் மக்களின் உன்னத தினமான இன்றைய மே தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து, அரசியலுரிமைக்காக எழுந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய  நாமும் அனைத்து உரிமைகளையும் பெற்று நிமிர்வோம் என உறுதியெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், “உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் சகல தொழில்துறைகளின் உயரிய வளர்ச்சிக்காகவும் தமிழ் பேசும் மக்களின் நீதியான உணர்வுகளை ஏற்று அவர்களது சுதந்திர உரிமைக்காகவும் நாம் அனைத்து உழைக்கும் மக்களோடு இணைந்து உழைப்போம் என உறுதிகொள்வோம்” எனவும் தெரிவித்தார்.

 

“தொழிலாளர் எழுச்சியை முன்னெடுக்க வேண்டும்”

-எம்.செல்வராஜா                        

முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி அதனை தொனிப்பொருளாகக் கொண்டு தொழிலாளர் எழுச்சியை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என ஊவா மாகாண அமைச்சரும் இ.தொ.கா. உபதலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், “தொழிலாளர் தினத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், அடுத்துவரும் மே தினத்துக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

“உரிமைகள் மறுக்கப்பட்ட தினம்”

-வடமலை ராஜ்குமார்

இந்த மே தினமானது தொழிலாளர்களின் உரிமை இன்னும் மறுக்கப்பட்ட நாளாகவே எமது மாவட்டத்தில் நாம் அனுஸ்டிக்க வேண்டியள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

மேலும், “திருகோணமலை மாவட்டத்தின் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் யுத்தம் முடிந்த பின்னும் அதன் தூரல் நிற்கவில்லை என்பது போல தமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தமது உரிமைகளை இழந்தே காணப்படுகின்றனர். இதற்காக பல்வேறு விதத்தில் போராடியும் இவர்களின் உரிமை இவர்களுக்கு கிடைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

 

“உரிமைகள் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்”

-ஏ.ஜி.ஏ.கபூர்

நல்லாட்சியில் உழைக்கும் தொழிலாளர்களது உரிமைகள் மேலும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்று அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்க உப தலைவரும் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவரும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஐ.எச்.ஏ.வஹாப் தெரிவித்தார்.          

மேலும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் வேலத்தளப் போராட்டத்தைப் போன்றே வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றி கொள்ள இந்த மே தினமானது புதிய உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதோடு, அவர்களுக்கு வெற்றி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன். என்றும் தெரிவித்தார்.

 

“வெற்றியென்பது அனைவருக்குமான விடுதலை என்போம்”

தொழிலாளர்களின் விடுதலைக்காக ஒன்றுதிரண்டு உலகெங்கும் தங்களின் அடையாளத்தை முரசறையும் மேநாளில் நாமும் நமது உணர்வுகளால் ஒன்றிணைவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

மேநாளில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் குரலில் வெளிப்படுத்த வேண்டியவையாக இன ஒடுக்குமுறையை எதிர்ப்பதையும் இனங்களுக்கிடையிலே பன்மைத்தன்மையை சமனிலைப்படுத்தப்பட்ட நீதியின் அடிப்படையில் உறுதி செய்வதையும் கோருவோம். அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவோம். அநீதியை எதிர்ப்போம். அரச அதிகாரம் என்பது படையதிகாரமாகப் பரந்திருக்கும் நிலையை எதிர்ப்போம். இதிலெல்லாம் நாம் ஒன்றிணைந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முனைவோம் எனறும் தெரிவித்தார்.

 

 

 


இன்று எழுச்சிகொள்ளும் அனைத்து உழைப்பாளர்களோடும் ஒடுக்கப்பட்டோரோடும் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் இணைந்து கொள்கிறோம். தொடர் செயற்பாட்டினால் வெல்லும்வரை போராடுவோம். வெற்றியென்பது அனைவருக்குமான விடுதலை என்போம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .