2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விரைவாக கையளிக்கவும்

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கிலுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடத்தில் விரைவாக கையளிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் வலியுறுத்தியுள்ளர்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

மூன்ற தசாப்த யுத்தத்தின் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்து ஏழாண்டுகளாகப்போகின்ற நிலையில் அவர்களை சமூக ரீதியாக முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் பூரணமாகவில்லை. தற்போதும் கூட அவர்கள் பல்வேறு தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

விசேடமாக, அடிப்படை வசிதிகள், வாழ்வாதார வசதிகளின்றி வறுமையின் காரணத்தால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். விசேடமாக வன்னிப்பிரதேசத்தில் இவ்வாறான நிலைமைகள் மிகவும் அதிகமாவுள்ளன.  தற்போதும் முகாம் வாழ்க்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

கடந்த ஆட்சியாளர்கள் யுத்தத்தை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த மக்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை. இதன் காரணத்தாலே அந்த மக்கள் தங்களது அரசாங்கத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்டு ஆணை வழங்கியிருந்தார்கள்.

அரசியல் உரிமைகள் தொடர்பான விடயங்களை கையாண்டு தீர்வுகளை வழங்குவது ஒருபுறத்தில் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த மக்களின் வாழ்க்கையை சிறப்பாக கொண்டு நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் உடன் எடுக்கப்படவேண்டும்.

குறிப்பாக பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களை விட்டுவெளியேறி பல இன்னல்களுக்க முகங்கொடுத்தவண்ணமுள்ளனர். அவர்களின் சொந்த நிலங்களில் இராணுவம் தங்கியிருப்பதாக கூறுகின்றனர். கண்ணிவெடிகள் அகற்றபடாதிருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறு பல காரணங்களால் தமது காணிகள் மீளவும் கிடைக்காதிருப்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்.

ஆகவே, அந்த மக்களின் ஆணைபெற்று ஆட்சியிலுள்ள தற்போதைய தேசிய அரசாங்கம் அந்த மக்களின் காணிகளை மீளவும் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை உடன் எடுக்கவேண்டும். அண்மைய காலப்பகுதியில் பலாலி, சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,400 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் மக்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

அது வரவேற்கப்படவேண்டிய விடயமாகும். இருப்பினும் எஞ்சிய காணிகளையும் மக்களிடத்தில் கையளிக்கவேண்டும். அத்தோடு நின்றுவிடாது வடக்கு கிழக்கில் தற்போதைக்கு 137ஆயிரம் வீடுகள் மக்களுக்கு தேவையாகவுள்ளன.

அந்த பிரதேசத்துக்கு பொருத்தமான வகையில் பரம்பரையாக பாதுகாப்பாக வாழக்கூடிய வகையில் வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்படவேண்டும்.

அதுமட்டுமன்றி கல்வி, சுகாதாரம், மருத்துவம், தொழில்வாய்ப்பு உள்ளிட்ட சமுகத்தை முன்னேற்றும் வகையிலான உட்கட்மைப்பு வசதிகளையும் மேற்கொள்ளவேண்டும். இதனை தற்போதைய அரசாங்கத்தினால் மட்டுமே நடைமுறைச்சாத்தியமாக்க முடியும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

அகவே அச்செயற்பாடுகளில் கூடிய அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .