2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெப்பமான காலநிலையையிட்டு பாடசாலைகளை நேரத்துடன் மூடுவதற்கு தீர்மானம் எடுக்காமலுள்ளதாக குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கடும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு இன்னும் தீர்மானம் எடுக்காமல் மாகாணக் கல்வி அமைச்சு அலட்சியம் செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்கிழக்கு சமூக கல்வி அபிவிருத்தி மன்றம் தெரிவித்தது.

இது தொடர்பில் அம்மன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக அனைவரும் சிரமப்படுகின்றனர்.

வெப்பமான காலநிலை காரணமாக வகுப்பறைகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் மிகவும் அவதியுறுகின்றனர். இதனால், பிந்திய பாட வேளைகளில் கற்பித்தல் நடைபெறாமல் ஓய்வாகக் கழிக்கப்படுகின்றது. மேலும், வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளதுடன், மாணவர்கள் பாடசாலை வேளைகளில் குடிநீருக்காகவும்  கஷ்டப்படுகின்றனர்.

இவற்றைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய கல்வி அமைச்சிடமும் மாகாணக் கல்வி அமைச்சுகளிடமும் பல்வேறு கல்விசார் அமைப்புகளும் பொது நிறுவனங்களும் வேண்டுகோள் விடுத்தன. இந்நிலையில், வடமத்திய மாகாணக் கல்வி அமைச்சு மாத்திரம் இம்மாதம் இரண்டாம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு இது தொடர்பில் பொருட்படுத்தாமல் உள்ளமை மாணவர்களின் சேம நலனில் மாகாண கல்வி நிர்வாகத்துக்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது. எனவே, மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இது தொடர்பில் மாகாண ஆளுநர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .