2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

'முன்னறிவித்தலின்றிய கைதுகளும் கடத்தி விசாரணைகளுக்கு உட்படுத்துவதும் ஜனநாயக நாட்டுக்கு உரித்தான பண்ப

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னறிவித்தல் இன்றிய கைதுகளும் கடத்திச் சென்று விசாரணைகளுக்கு உட்படுத்துவதும் ஒரு ஜனநாயக நாட்டிற்கு உரித்தான பண்புகள் அல்ல என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'முன்னர் இருந்த அரசாங்கம் செய்த அதே ஆட்சியையே இந்த அரசாங்கமும் நல்லாட்சி  என்னும் போர்வையில் மேற்கொள்கிறதா? என்ற சந்தேகம் எமக்குள் ஏற்பட்டுள்ளது

கடந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளை தற்போது தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த நல்லாட்சி அரசாங்கம் கைதுசெய்து வருகின்றது.
சிலரின் கைதுகள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீது பாரிய விமர்சனங்களை எமது மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

முன்னறிவித்தல் இன்றிய கைதுகளும் கடத்திச் சென்று விசாரணைகளுக்கு உட்படுத்துவதும் ஒரு ஜனநாயக நாட்டிற்கு உரித்தான பண்புகள் அல்ல அதுவும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் கைதுசெய்து விசாரணைகள் என்ற பெயரில் அழைத்துச்செல்வதால் இவர்களைப்போல் சமூகமயமாக்கப்பட்டுள்ள ஏனைய போராளிகள் மத்தியிலும் அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தினர் மத்தியிலும் ஒரு விதமான அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

சிறையிலே வாடுகின்ற 200க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவுமே எமது மக்கள் இவ் அரசாங்கத்துக்கு முழுமையான வாக்குகளை அளித்தார்கள். அவர்களின் பொதுசன அபிப்பிராயத்தை மீறி இவ்வரசாங்கமானது செயற்பட்டு வருகின்றது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரை நீடித்த யுத்தத்தில் இருந்து மீண்டு வந்து இன்று நிம்மதியாக வாழ முற்படும் எம் மக்களின் மத்தியில் இவ்வாறான உளவியல் அச்சுறுத்தல்களை விடுப்பதை இவ்வரசாங்கம் கைவிட வேண்டும். அத்துடன் பல காலமாக விடுதலை செய்வதாக தொடர்ந்தும் சிறையில் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். இவ் அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டிருப்பதை விடுத்து அதை செயற்பாட்டளவில் காட்ட வேண்டும்' என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .