2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழக தேர்தல் களம்: அ.தி.மு.கவும் தி.மு.கவும் எந்த திசையில் செல்கின்றன?

Thipaan   / 2016 மே 02 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து விட்டது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7,127 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில், ஆண்கள் 6,336பேர், பெண்கள் - 788 பேர். தேர்தலில் போட்டியிட முன்வரும் பெண்களின் சதவீதம், அனைத்துக் கட்சிகளும் நீண்ட காலமாகப் போராடி வரும் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் குறைவாக இருக்கிறது என்பது, தமிழக தேர்தல் களம் தந்திருக்கும் இப்போதைய செய்தி. அரசியல் கட்சிகள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு, பெண்களுக்கு பிரநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று போராடினாலும் போட்டியிட வரும் பெண்கள் மத்தியில் இன்னும் தயக்கம் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இத்தனைக்கும், தமிழகத்தில் 1996ஆம் ஆண்டிலிருந்தே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கிடு இருக்கிறது. பெண்கள் ஒதுக்கீட்டுடன் நடைபெற்ற முதல் உள்ளாட்சித் தேர்தலில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பொறுப்புகளில் பெண்கள் பதவியேற்றனர். இப்படியொரு சூழலில் கூட, சட்டமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் போட்டியிட பெண்கள் முன் வரவில்லை என்பதை பெண்ணுரிமை அமைப்புகள் கவலைக்குரியதாகவே பார்க்கின்றன.

இத்தனைக்கும், இந்த முறை நடக்கும் சட்டமன்றத் தேர்தலின் முக்கிய பிரசாரம் மதுவிலக்கு. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற விழிப்புணர்வு, 36 வருடங்களுக்குப் பின்னர், விண்ணுக்கு உயர்ந்து நிற்கின்ற நேரம். இப்போது கூட, பெண் வேட்பாளர்களை 33 சதவீத இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு ஏற்றார் போல் நிறுத்த, அ.தி.மு.க, தி.மு.க ஆகிய முக்கிய கட்சிகள் முன் வரவில்லை. தேசியக் கட்சிகளாக இருக்கும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் முன் வரவில்லை. இந்த பின்னணியில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இப்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் படி, வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு கடைசி நாளில் தொடங்கி, வாக்குப் பதிவு முடியும் நாள் வரை உள்ள காலகட்டம் 'பிரசார காலம்' என்று கருதப்படுகிறது. அதனால், தமிழகத் தேர்தல் களத்தில் இப்போதுதான் உண்மையான பிரசார காலம் தொடங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் பல முனைப் போட்டி இருந்தாலும், இப்போதைக்குக் களத்தில் நிற்பது, அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள்தான். மக்கள் நலக்கூட்டணியோ, பாட்டாளி மக்கள் கட்சியோ, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியோ களத்துக்கு வந்திருக்கிறனர்.

ஆனால், சம களத்தில் நிற்கிறார்கள் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை. இப்போதைக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினையை இரு கட்சிகள்தான் களத்தில் பேசி வருகின்றன. முதல் கட்சி நாம் தமிழர் கட்சி. அதுவும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்த பின்னர், சீமானின் காங்கிரஸ் அட்டாக் அதிகமாகவே ஆகிவிட்டது. அதற்குச் சற்றும் குறையாத வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன் வைத்து, தி.மு.கவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சிக்கிறார்.

'இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை ஜெயலலிதா விமர்சிக்கிறார். இந்த இரு கட்சிக் கூட்டணிகளும் வாக்கு வங்கிப் பலத்தை அடைந்து விடக் கூடாது என்ற வியூகத்தின் அடிப்படையிலான தாக்குதல் இது' என்று தேர்தல் விவகாரங்களை அலசும் வல்லுநர் ஒருவர் கூறுகிறார். அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியும் அ.தி.மு.கவும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பா.ஜ.க பற்றி கருத்துக் கூற மறுக்கிறார்கள். இந்த இரு கட்சிகள் தவிர தி.மு.க இப்பிரச்சினையை கையில் எடுப்பதாக இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் செயற்பாடுகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும். அ.தி.மு.கவுக்கு எதிரான சூழ்நிலையை வாக்காளர் மனதில் உருவாக்கி, அதன் மூலம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பிரசார வியூகத்தை அமைத்திருக்கிறது. 'இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி, அ.தி.மு.க ஆட்சி மீதான தாக்குதலைத் திசை திருப்ப நினைக்கிறார் ஜெயலலிதா. அதற்கு பலியாகி விட மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை, ஐந்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில், தமிழக மக்களுக்கு ஏற்பட்ட துயரங்கள்தான் வாக்கு சேர்க்கும் வலு கொண்டது என்பதில் தெளிவாக இருக்கிறோம்' என்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரொருவர்.

ஆனால், ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி ஆவேசமாகப் பேசும் தலைவர்களான திருமாவளவன் மற்றும் வைகோவைக் கொண்ட மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. அதில், தனி ஈழம் என்ற விடயத்துக்குள் போகாமல் அறிக்கையை வெளியிட்டு, 'தமிழக தேர்தல் களத்தின் அஜெண்டா இந்த முறை இலங்கைத் தமிழர் பிரச்சினை அல்ல' என்பதை வெளிப்படுத்தியிருக்கிறனர். எப்படித் திசை மாறினாலும் இன்றைய திகதியில் 'அ.தி.மு.க ஆட்சி நீடிக்க வேண்டுமா' அல்லது 'தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டுமா' என்ற இலக்கை நோக்கி பிரசாரக் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், லயோலா கல்லூரி மாணவர்களைக் கொண்ட 'மக்கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முன்பான கருத்துக் கணிப்பு முடிவுகளில், தி.மு.க கூட்டணி 124, அ.தி.மு.க கூட்டணி 90 என்று வெளியிட்டிருக்கிறது.

ஆனால், இது போன்ற கருத்துக் கணிப்புகள் நிஜமாவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்பதே தேர்தல் நிலவரம். ஏனென்றால், எந்தக் கட்சியும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தை முடித்து விடவில்லை. எந்த வேட்பாளரும் தன் தொகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வாக்குச் சேகரித்து விட வில்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி, இப்போதுதான் முதற்கட்டப் பிரசாரத்தை முடித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். அதேபோல், முதல்வர் ஜெயலலிதாவும் அ.தி.மு.கவுக்கான பிரசாரத்தில் இப்போதுதான் மண்டல வாரியாக செய்து கொண்டிருக்கிறார்.

ஏனைய தலைவர்களைப் பொறுத்தமட்டில் கூட, இன்னும் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று பிரசாரத்தை முடித்து விடவில்லை. ஆகவே, இன்னும் ஒரு வாரம் கழித்த பின்னரே தமிழக மக்களின் தேர்தல் கண்ணோட்டம் எப்படியிருக்கிறது என்ற நிலை தெரிய வரும். அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இனிமேல்தான் வெளியிடப்படவிருக்கிறது. அதில், இலவசங்கள் அதிகம் இருக்கிறது என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்தக் காரணிகள் எல்லாம் ஆராயப்பட்டு, தமிழகத் தேர்தல் முடிவின் முன்னோட்டத்தை அறிவிப்பதற்கு இன்னும் ஒரு வாரம் நிச்சயம் தேவை. அந்த அளவுக்கு தமிழக தேர்தல் மிகவும் 'கடுமையான போட்டியாக' நிகழ்கிறது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 'இந்த அணி வெற்றி பெறும்' என்று முன் கூட்டியே சொல்லி விட முடியும். கட்சிகளின் கூட்டணியை வைத்து, அந்தக் கூட்டணிக்கு உள்ள வாக்கு வங்கியை வைத்து, இந்தக் கணிப்பை செய்து விட முடியும். ஆனால், இந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு குறிப்பாக அ.தி.மு.க, தி.மு.கவுக்குள் யார் முதல் குதிரையாக வருவார்கள் என்பது இன்னும் பிடிபடாத புதிராகவே இருக்கிறது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 'தி.மு.க - காங்கிரஸ் அட்டாக்' 'அவர் வெளியிட்ட 110 அறிவிப்புகளை நிறைவேற்றியது தொடர்பாக தினமும் அறிக்கை' ஆகிய இரண்டுமே தி.மு.கவை இன்னும் கடுமையாகச் சமாளிக்க வேண்டும் என்ற பதற்றத்தை காட்டுகிறது.

இதற்கிடையில, திடீரென்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்து மாநில உளவுத்துறை அதிகாரியை மாற்றியது, புதிய தேர்தல் டி.ஜி.பி. நியமித்தது, சில மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட பொலிஸ் அதிகாரிகளை மாற்றியது எல்லாம் அ.தி.மு.கவுக்கு சற்றுச் சிக்கலை உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஏற்கெனவே 'கோடிக் கணக்கில்' அமைச்சர் ஒருவரின் பினாமி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினருக்கு வேண்டியவர்கள் என்று கருதப்படுவோர் இல்லங்கள், அலுவலகங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை 'அ.தி.மு.க இவ்வளவு கோடி பணத்தை பதுக்கி வைத்துள்ளதா' என்ற எதிர்கட்சிகளின் பிரசாரத்துக்கு தீனி போடும் விதத்தில் அமைந்து விட்டது. இதுபோன்ற நிலையில், மாநில உளவுத்துறை அதிகாரியை மாற்றியிருப்பது அ.தி.மு.க தேர்தல் வியூகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

தமிழக தேர்தல் நிலைவரம்  குறித்து இன்றைய களநிலவரத்தில் ஓர் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.கவுக்கு ஏற்பட்டிருந்த இறங்கு முகம் இப்போது இல்லை. அந்தக் கட்சி, தன் முந்தைய நிலையிலிருந்து 'மெதுவாகவும் நிதானமாகவும்' முன்னேறிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவும் 2014இல் வெற்றி பெற்ற போது இருந்த வாக்கு வங்கி பலத்தில் இப்போது இல்லை.

அந்த வாக்கு வங்கிப் பலத்திலிருந்து அ.தி.மு.கவும் 'மெதுவாக ஆனால் நிதானமாக' இறங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் திசை மாற்றம்  உச்சகட்ட பிரசாரம் நடக்கப் போகும் இன்னும் 13 நாட்களில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற தேர்தல் முடிவை தீர்மானிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .