2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு

Thipaan   / 2016 மே 02 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 38)

எங்கும் சிங்களம் எதிலும் சிங்களம்

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பானது, 'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கிகாரம் வழங்கியதன் மூலம், நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக, நிர்வாக மொழியாக சிங்கள மொழி மட்டும் என்பது அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது. முதலாவது குடியரசு யாப்பின் 9ஆவது சரத்தானது, சட்டவாக்க மொழியாக சிங்களம் இருக்கும் என்று கூறியது. அத்தோடு, அனைத்து சட்டங்களுக்கும் தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கும் எனவும் கூறியது. 10ஆவது சரத்தானது, ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும், சட்டத்தின் ஆங்கில வாசகங்களுக்கும் சிங்கள வாசகங்களுக்குமிடையே முரண்பாடு ஏற்படுமெனின், சிங்களவாசகங்களே ஆங்கிலவாசகங்களின் மேல் நிலவும் என்றும் கூறியது. இவ்வாறு அரசின் சட்டவாக்கத்துறையும் சட்ட நிர்வாகத்துறையும் சிங்களமயமாக்கப்பட்டது. தமிழின் நிலைமை மொழிபெயர்ப்பு என்ற அளவுக்குள் சுருங்கிவிட்டது.

அடுத்ததாக, முதலாவது அரசியல் யாப்பின் 11ஆவது சரத்தானது, இலங்கை முழுவதும் நீதிமன்றங்களினதும், நீதி வழங்கும் மன்றுகள், சபைகள் மற்றும் அமைப்புக்களின் மொழியாக சிங்களம் இருக்கும் என்று கூறியதுடன், பதிவுகள், வாதங்கள், நடைமுறைகள், தீர்ப்புகள், உத்தரவுகள் யாவும் சிங்களத்திலேயே அமைய வேண்டும் என்றது. ஆயினும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் தேசிய அரசு சபையினால் ஜமுதலாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் சட்டவாக்கத்துறை (நாடாளுமன்றம்) தேசிய அரசு சபை என்றழைக்கப்பட்டதுஸ சட்டவாக்கத்தினூடாக

வேறு ஏற்பாடுகள் செய்ய முடியும் என்று கூறியதுடன், ஆனால் அத்தகையவிடயத்தில் கட்டாயம் சிங்கள மொழிபெயர்ப்பு ஒன்று அவசியம் என்றும் கூறியது. அத்தோடு, தமிழில் அல்லது சிங்களத்தில் நபரொருவர் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க அரசு மொழிபெயர்ப்பு உதவிகளைச் செய்யும் என்றும் கூறியது. நீதித்துறையிலும் தமிழின் நிலைமை மொழிபெயர்ப்பு என்ற அளவுக்குக் கொண்டுவரப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள், மொழிப் பிரச்சினை பற்றி பேசியபோதெல்லாம், தமிழ் மொழிக்கு விசேட ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளனவே என்று தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் சாக்குப் போக்குச் சொல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்நாட்டின் குடிமகனான ஒரு சிங்களவரால், தன் தாய்மொழியிலேயே அரசின் மூன்று கரங்களான சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகியவற்றை அணுகும் போது, இந்நாட்டின் குடிமகனான ஒரு தமிழரால், தன்தாய்மொழியில் அதனைச் செய்வதற்கான வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுவதேன்?

ஒரு நாட்டின் சனத்தொகையில், ஏறத்தாழ 23 சதவீத மக்கள் பேசுகின்ற ஒரு மொழிக்கு, பெரும்பான்மை மொழிக்கு நிகரான சம அந்தஸ்து கொடுக்க முடியாது என வாதிடுபவர்கள், தம்மைச்சுற்றி பரந்து விரிந்துள்ள நாகரிகமடைந்த நாடுகளை உற்றுப் பார்ப்பது அவசியமாகும்.  கனடாவில் வெறும் 21.3 சதவீத மக்கள் பேசுகின்ற ‡ப்ரெஞ்ச் மொழியானது, பெரும்பான்மை ஆங்கிலமொழிக்கு நிகராக, உத்தியோகபூர்வமொழியாக, கனடாவின் 1969 உத்தியோகபூர்வ மொழிகள் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுவிட்ஸர்லாந்தில் வெறும் 0.5 சதவீத மக்கள் பேசுகிற றொமான்ஷ் மொழியும் வெறும் 8 சதவீத மக்கள் பேசுகிற இத்தாலிய மொழியும் வெறும் 22.5 சதவீத மக்கள் பேசுகிற ‡ப்ரெஞ்ச் மொழியும் அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (64 சதவீதம்) பேசுகின்ற ஜேர்மன் மொழிக்கு நிகராக, அந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கின்றன. சிங்கப்பூரில் வெறும் 3.3 சதவீத மக்கள் பேசுகின்ற தமிழ் மொழி, அந்நாட்டின் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளுள் ஒன்றாகும். ஆகவே, உண்மையில் தனது மக்கள் மீது அக்கறை கொண்ட நாடொன்று நிச்சயமாக தமது சிறுபான்மை இனக்குழுக்களினது உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிப்பதுடன், அவற்றுக்கும் சமவுரிமை வழங்கும். ஆனால், இனவாத அரசுகள் இதனைச் செய்வதில்லை.

சிங்கப்பூரின் சிற்பி என்று புகழப்படுகின்ற லீ க்வான் யூ, சிங்கப்பூர் என்ற தேசத்தைக் கட்டியெழுப்பியமை பற்றிக் குறிப்பிடுகையில்: 'மலேசிய அரசின் இனவாதப் போக்கு, எம்மை தனிவழி போகச் செய்தது. நாங்கள் தீர்மானித்தோம், நாங்கள் சிறுபான்மையை நசுக்கிப்பிழியும் பெரும்பான்மையாக இருக்கமாட்டோம், நீங்கள் எந்த இனத்தவராக இருப்பினும் எந்த மொழி பேசுபவராக இருப்பினும் எந்த மதத்தவராக இருப்பினும், நீங்களும் சமத்துவம் மிக்கதொரு குடிமகன், இதை நாம் சகல மக்களிடமும் பறையறைந்தோம்' 'நீங்கள் வாக்குகளை இலகுவாகப் பெற இனவாத அல்லது மதவாத அரசியல் செய்தால் இந்த சமூகம் அழிந்துவிடும். இனவாதம் வாக்குகளைப் பெறுவதற்கு இலகுவான வழியாகும், நான் சீனன், அவர்கள் மலாயர்கள், அவர்கள் இந்தியர்கள் என்று இனவெறி அரசியல் செய்தால் எங்கள் சமூகம் கிழித்தெறியப்பட்டுவிடும். நீங்கள் ஒன்றுபட்ட சமூகத்தை கொண்டிராவிட்டால், முன்னேற்றம் என்பது இருக்காது' என்று சொல்கிறார்.

நீங்கள் சீன மொழியை இயங்கும் மொழியாக வைக்காது, ஆங்கில மொழியைப் பயன்படுத்துவது ஏன் என்று கேட்டபோது, 'அப்படி நடந்திருந்தால், அது எமது மக்களைத் துண்டாடியிருக்கும்' என்று சொன்னார். 'ஆங்கிலம் அந்நிய மொழி, அது அனைவருக்கும் சமனானது, அது எமக்கு முன்னேற்றத்தையும் தந்திருக்கிறது, எம்மை உலகுடன் இணைத்திருக்கிறது. நீங்கள் உங்கள் மொழியை விரும்பினால், அதனை இரண்டாம் மொழியாக வைத்திருங்கள், அது உங்களைப் பொறுத்தது' என்றார். '1965இல், 20 வருடங்களாக தோல்வியடைந்த அரசுகளைக் கண்ட அனுபவத்தினை நாம் கொண்டிருந்தோம். ஆகவே, நாம் எதனைத் தவிர்க்க வேண்டும் என அறிந்திருந்தோம். இனப்பிரச்சினை, மொழி முரண்பாடு. மதப் பிரச்சினை என்பவை தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் இதுதான் நடந்தது' என்று, மற்றொரு நேர்காணலில் லீ க்வான் யூ குறிப்பிடுகிறார்.

லீ க்வான் யூ, உலகின் மிகச்சிறந்த தலைவராக இல்லாமல் இருக்கலாம். மனித உரிமைகள் தொடர்பிலும் அடக்குமுறை, ஊழல், குடும்ப ஆட்சி என்று, அவர் மீது நிறையக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், எந்த வளமுமற்ற பல்லினங்கள் வாழும், புதிதாகப் பிறந்த ஒரு குட்டித் தேசத்தை, வளர்ச்சியடைந்த நாடாகக் குறுகிய காலத்தினுள் கட்டியெழுப்பியதில் இன, மத, மொழி அரசியலை ஒதுக்கி வைத்த அவரது சித்தாந்தம் வெற்றிகண்டுள்ளது. இதனை இலங்கை புரிந்துகொண்டிருந்தால், இன்று இலங்கையின் நிலை வேறானதாக இருந்திருக்கும். ஆனால், இலங்கை குறுகிய இனவாத, மொழிவாத, மதவாத அரசியலினுள் சிக்குண்டு, சின்னாபின்னமாகிப் போனது, அந்த இரத்தக்கறை படிந்த வரலாற்றை எழுதியதில் 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்புக்கும் அதனைத் தந்த சிறிமாவோவின் ஆட்சிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

அடிப்படை உரிமைகள்

இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பின் ஏனைய சில முக்கிய அம்சங்களையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த அரசியல் யாப்பு, அரச கொள்கைத் தத்துவங்கள் என்ற ஓர் அம்சத்தையும் கொண்டிருந்தது. அதாவது, அரசு இயங்கவேண்டிய வழிமுறையைக் காட்டும் வழிகாட்டிகளாக இந்த அரச கொள்கைத் தத்துவங்கள் அமைந்தன. ஆனால், இவை எந்தவொரு சட்டரீதியான உரிமைகளையும் வழங்கவில்லை என்பதால், இவற்றினடிப்படையில் எந்தவொரு நீதி வழங்கும் மன்றின் முன்பும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாததாக இருந்தது.

ஆகவே, இவை வெற்று அலங்கார வார்த்தைகளாகவே இருந்தன என்பதுதான் யதார்த்தம். அத்தோடு, இந்த அரசியல் யாப்பினூடாகவே முதன்முறையாக அடிப்படை உரிமைகளுக்கு அரசியல் யாப்பில் அங்கிகாரம் வழங்கப்பட்டது. 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பில், பெரும்பாலும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டது.

சமத்துவம், சம பாதுகாப்பு, சிந்தனைக்கான, நம்பிக்கைக்கான, மதத்துக்கான சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம், தனிமனித பாதுகாப்பு, தமது கலாசாரத்தைக் கடைப்பிடிக்கவும் ஊக்குவிப்பதற்குமான சுதந்திரம், ஒன்றுகூடலுக்கான, பேச்சுக்கான மற்றும் வெளிப்பாட்டுக்கான சுதந்திரம், நடமாட்டத்துக்கான சுதந்திரம், பொதுத்துறை நியமனங்களில் பாகுபாடின்மைக்கான சுதந்திரம் போன்றவற்றுக்கு அரசியலமைப்பில் அங்கிகாரம் வழங்கப்பட்டது. ஆனாலும் இவை மட்டுப்பாடுகளற்ற சுதந்திரமாக இருக்கவில்லை.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், பொது மக்களின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரத்தையும் பொது ஒழுக்கத்தையும் பாதுகாத்தல், மற்றவர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல், அரச கொள்கைத் தத்துவங்களை நடைமுறைப்படுத்தல் போன்ற காரணங்களுக்காக சட்டரீதியாக அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்தமுடியும் என்றும் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு கூறியது. ஆகவே, இந்த குறித்த காரணங்களுக்காக பேச்சுச் சுதந்திரம், மதச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம் என்பவற்றைக் கூட மட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது.

அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடானது, அடிப்படை உரிமைகள் வழங்கிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒன்றாக இருந்தது. அரசாங்கம் அறிமுகப்படுத்திய சில சட்டமூலங்கள், அரசியல் யாப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் எதிர்க்கப்பட்டபோது, அரசியலமைப்பு நீதிமன்றம் குறித்த சட்டமூலம் அடிப்படை உரிமைகளுக்கு குந்தகமானது எனினும் அரச கொள்கைத் தத்துவங்களை நடைமுறைப்படுத்த அது அவசியமானது என்று சொன்னது.

இந்த அடிப்படை உரிமைகளுக்கான அரசியலமைப்பு அங்கிகாரம் என்பது, வெறும் கண்துடைப்பாகவே தோன்றுகிறது. ஏனெனில், சோல்பரி யாப்பின் 29(2) சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதுகாப்பை அரசியலமைப்பு அளவிலேனும் வழங்கியிருந்தது. அதையொத்த பாதுகாப்பை அடிப்படை உரிமைகள் சரத்து வழங்கும் என்றே அன்றைய அரசியலமைப்பு அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், சோல்பரி யாப்பின் 29(2) சரத்தானது எந்தவித மட்டுப்பாடுகளும் அற்றதொன்றாகும். மாறாக முதலாவது குடியரசு யாப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளானவை பெருத்த மட்டுப்பாடுகளுக்குட்டவையாகும்.

மேலும், முதலாவது குடியரசு யாப்பின் 18(3) சரத்தானது, ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள், அவை அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு முரணானவை எனினும் கூட, அச்சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று கூறியது. இது அடிப்படை உரிமைகள் சரத்தையே கேலிக்குள்ளாக்கும் ஒரு செயலாகும். இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதில் அடிப்படை உரிமைகள் முக்கிய இடம் பிடித்திருந்தன. இந்திய அரசியலமைப்பின் 13(1) சரத்தானது, ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள், அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனின், அத்தகைய முரண்பாடுகள் உடைய அம்சங்கள் செல்லுபடியற்றதாகும் என்று கூறுகிறது. இந்த இரண்டு நாடுகளின் அரசியலமைப்புகளில் அடிப்படை உரிமைகள் பற்றிய நிலைப்பாடானது, எதிரெதிர் துருவமாக இருப்பதைக் காணலாம்.

ஒன்றில், அடிப்படை உரிமைகள் பாதுகாகக்கப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு மேலோங்கி நிற்கிறது. மற்றையதில், அடிப்படை உரிமைகள் வெறும் அலங்கார வார்த்தைகளாக இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிப்பொறிமுறையொன்றை முதலாவது குடியரசு அரசியல் யாப்பு குறிப்பிடவில்லை. அரசின் நிர்வாகக் கரத்தினால் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது, அதன்பால் நீதிக்கரத்தை அணுகுவதற்கான பொறிமுறையொன்று இருக்கவில்லை.

ஆயினும், ரிட் மனு ஒன்றிம் மூலமோ, நட்டஈட்டு நடவடிக்கையொன்றின் மூலமோ, அறிவிப்பு நடவடிக்கையொன்றின் மூலமோ, தடையுத்தரவு மனு ஒன்றின் மூலமோ அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்றை அணுக முடியும் என்பதே சட்டவியலாளர்களின் கருத்து. 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு நடைமுறையிலிருந்த ஏறத்தாழ ஐந்து வருட காலத்தில், குணரத்ன எதிர் மக்கள் வங்கி என்ற ஒரேயோர் அடிப்படை உரிமை வழக்கு மட்டுமே இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(அடுத்தவாரம் தொடரும்...)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .