2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரேஸிலில் வட்ஸ்அப்புக்கான தடை நீங்கியது

Shanmugan Murugavel   / 2016 மே 04 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் நீதிமன்ற உத்தரவொன்றினையடுத்து, தகவல் பரிமாற்றச் செயலியான வட்ஸ்அப்பை முடக்க ஆரம்பித்து ஏறத்தாள 24 மணித்தியாலங்களின் பின்னர், வட்ஸ்அப்பின் சேவைகள் மீளத் திரும்பியுள்ளன.

பிரேஸிலின் சேர்ஜிபே மாநில நீதிபதி ஒருவரே, வட்ஸ்அப்பை 72 மணித்தியாலங்களுக்கு முடக்குமாறு உள்ளூர் அலைபேசி வழங்குநர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். எனினும் அவரது தீர்ப்பானது, மேன்முறையீட்டில் மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரேஸிலில் நாடளாவிய ரீதியில் காணப்பட்ட வட்ஸ்அப்புக்கான தடை நீங்கியமையை கொண்டாடிய வட்ஸ்அப்பை ஆளும் சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கின் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஸக்கர்பேர்க், சட்டத்துக்கு உதவுமாறு பிரேஸிலியப் பிரஜைகளை கோரியதுடன், அதன் மூலமே மீண்டும் தடை ஏற்படுவதிலிருந்து தப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.

பிரேஸிலில் வட்ஸ்அப் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளது, உங்களின் குரல்கள் மீண்டுமொரு முறை கேட்டுள்ளன, இதைத் தீர்ப்பதற்கு உதவிய எமது சமூகத்துக்கு நன்றி என பேஸ்புக் பதிவொன்றில் மார்க் ஸக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

மேற்படி தடைக்கு முன்னர், கடந்த டிசம்பரிலும் வட்ஸ்அப் முடக்கப்பட்டிருந்தபோதும் 12 மணித்தியாலங்களே அந்தத்தடை நீடித்திருந்தது. அத்தடையும், வட்ஸ்அப் தரவுகள் தொடர்பில் அரசாங்கத்துடனான கோரிக்கைகளுடன் முரண்பட்ட நிலையிலேயே தடை விதிக்கப்பட்டிருந்தது. தரவு encrypt செய்யப்பட்டிருப்பதால் தரவை வழங்கமுடியாது என வட்ஸ்அப் வாதிட்டிருந்தது.

வட்ஸ்அப் தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில், ஏனைய encrypt செய்யப்பட்ட தகவல் பரிமாற்ற இயக்குதளங்களான டெலிகிராம், ஐமெசேஜ்ஐ பிரேசிலியர்கள் பயன்படுத்தியதோடு, VPN சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் வட்ஸ்அப்பை உபயோகித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X