2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வித்தியா வழக்கு: சந்தேகநபர்கள் 9 பேரையும் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

George   / 2016 மே 04 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், புதன்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர், யாழ். மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் தாக்கல் செய்திருந்ததையடுத்தே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் மனுவை சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி ஜனாப் சக்கி இஸ்மாயில், மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பமாகத் தாக்கல் செய்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பூபாலசிங்கம் இந்திரகுமார், கோபாலசிங்கம் ஜயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாந்தன், சிவதேவன் துஷhந்தன், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜயதரன் கோகிலன், ஒன்பதாவது சந்தேக நபர் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய 9 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இந்த 9 பிரதான சந்தேகநபர்களின் ஒரு வருடத்துக்கான விளக்கமறியல் காலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவுறுகின்றது.

இந்த நிலையில், இவர்களது விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு நீதவான் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு, பிணைச்சட்டத்தின் 17ஆம் பிரிவின் கீழ் இந்த மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுவதாக அரச சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

இந்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை 3 மாதத்திற்கு ஒரு தடவையாக ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரச சட்டத்தரணி தனது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த பிரதான சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் உத்தரவை முதலில் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கான விசாரணை நடத்துவதற்கு சந்தேக நபர்களை மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கு உத்தவிடுமாறும் அரச சட்டத்தரணி மன்றில் கோரினார்.

இதனையடுத்து இந்த வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பாக விசாரணை செய்வதற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி அவர்களை மேல் நீதிமன்றில் ஆஜராக்குமாறு அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் நீதிமன்றத்தை விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற சுற்றுவளாகப் பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் யாழ் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிணைச்சட்டத்தின் 17 ஆவது உறுப்புரையின் கீழ் விளக்கமறியல் காலத்தை மேலும் நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது என்ற சட்டப்பரிந்துரையின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் யாழ் மேல் நீதிமன்றில் இந்த விசேட மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும், 11 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும் இடம்பெறுகின்றது. இன்று புதன்கிழமை 11 மற்றும் 12 ஆவது சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .