2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நிவாரணம் வேண்டும், ஆனால் நிரந்தரத் தீர்வே முக்கியம்

Thipaan   / 2016 மே 25 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்லாந்தை, மீரியபெத்தையில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டு, நூற்றுக் கணக்கான மக்கள் பெரும் அவலத்தைச் சந்தித்து சுமார் ஒன்றரை வருடத்தின் பின்னர், மோசமான  வானிலை காரணமாக, நாட்டில் ஒரே நேரத்தில் மேலும் இரண்டு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பகுதியில், ஒரு வாரத்துக்குள் பாரிய இரண்டு மண்சரிவுகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் களனி கங்கை பாரியளவில் பெருக்கெடுத்ததன் காரணமாக, களனி, வெல்லம்பிட்டி, அங்கொடை, கொட்டிக்காவத்தை, கடுவெல ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டன.

இந்த இரண்டு அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களின் எண்ணிக்கை, இன்னமும் சரியாகக் கணிப்பிடப்படவில்லை. இந்தக் கட்டுரை எழுதப்படும் போது, 84  பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.

சேதங்கள் இத்தோடு முடிவடையும் அறிகுறிகளும் இல்லை. ஏனெனில், மேலும் சில நாட்களுக்கு வானிலை மோசமாகவே இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மலையகத்தில் தொடர்ந்தும் மழை பெய்தால் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. லக்ஷபான, நோட்டன் பிரிட்ஜ், மஸ்கெலியா போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால், களனி ஆறு பெருக்கெடுத்து மூழ்கடிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்படும்;.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்த போதிலும், மண்சரிவினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தப்பித்துக் கொள்ள போதிய நேர அவகாசம் இருந்ததைப் போலவே, அவர்களைக் காப்பாற்ற பாதுகாப்புப் படையினருக்கும் ஏனைய மீட்பாளர்களுக்கும் போதிய அவகாசம் இருந்தது.

ஆனால், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தப்பித்துக் கொள்ள அவகாசம் கிடைக்காததைப் போலவே, அவர்களைக் காப்பாற்றவும் அதிகாரிகளுக்குப் போதிய சந்தர்ப்பத்தை அந்த அனர்த்தமே கொடுக்கவில்லை. அவர்களில் பலர், கண் இமைக்கும் முன் மண்ளுக்குள் புதையுண்டு போனார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதில், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட போதிலும், ஆரம்பத்தில், அவர்களின் பங்களிப்பு போதுமானதாக இருக்கவில்லை. கடந்த புதன்கிழமையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற ஆரம்பித்தனர். அப்போது, அந்த மக்களுக்குத் தேவையான அளவில் கடற்படைப் படகுகள் அப்பிரதேசங்களுக்கு வந்திருக்கவில்லை. எனவே, அன்று சில தனி நபர்களும் சமூக நிறுவனங்களும், பல படகுகளைச் சேவையில் ஈடுபடுத்தியிருந்தனர். அவ்வாறு தனி நபர்களும் சமூக அமைப்புக்களும் தலையிட்டு இருக்காவிடின், சிலவேளை பாதிப்புக்கள் இதைவிட அதிகமாக இருந்திருக்கக் கூடும்.

ஆயினும், வியாழக்கிழமைக்குப் பின்னர்,  மீட்புப் பணிகளிலும் மேல் மாடியுள்ள வீடுகளில் தங்கியிருந்த மக்களுக்கு உணவளிப்பதிலும், கடற்படையினர் பெரும் பங்காற்றனர். பல தனி நபர்களும் சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கியிருந்ததனால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவின்றிக் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும், படகுகள் நெருங்க முடியாத இடங்களில் தங்கியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவை, இந்நாட்டுக்குப் புதியவையல்ல. கலிகமுவ, கேகாலை மற்றும் வரக்காபொல ஆகிய பகுதிகளில், 1989ஆம் ஆண்டு முதல், கடந்த 27 ஆண்டுகளில் 40 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இம்முறை, அரநாயக்க பகுதி மக்கள், மண்சரிவையோ அல்லது வெல்லம்பிட்டி, களனி மற்றும் அங்கொடை போன்ற பகுதிகளிலுள்ள மக்கள் இந்தளவு வெள்ளத்தையோ எதிர்பார்க்கவில்லை.

வழமையாக, வருடந்தோறும் களனி கங்கையின் இரு மருங்கிலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சில பகுதிகள் இருக்கின்றன. ஆனால் இம்முறை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகள், 1989ஆம் ஆண்டே கடைசியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. 27 வருடங்களாக எவ்வளவோ மழை பெய்தும் வெள்ளம் வந்தும் பாதிக்கப்படாத பகுதிகளில், இம்முறை வெள்ளம் தம்மை சந்திக்க வரும் என மக்கள் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. எனவே, அவர்கள், ஆரம்பத்தில் தமது முற்றத்தில் அல்லது தமது வீட்டுக்கு முன்னாலுள்ள வீதியில், வெள்ளம் ஓரடி இரண்டடியாக இருக்கும் போதும் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லவில்லை.

நீர் மட்டம் ஓரளவு உயர்ந்த பின் வெளியேற நினைத்தாலும், வெளியேற முடியாமல் போயிற்று. ஏனெனில், நீர் மட்டமானது சகல இடங்களிலும் ஒரே அளவில் இல்லை. சில இடங்கள், அவர்களது முற்றத்தை விடத் தாழ்ந்த இடங்களாக இருக்கக்கூடும். வீதி தெளிவாகத் தெரியவும் இல்லை. அந்த வெள்ள நீரில் இறங்கிப் பெறுமதியான பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியாது. இதுபோன்ற பல பிரச்சினைகள் காரணமாக, ஓரளவு நீர் மட்டம் உயர்ந்ததன் பின்னர், மக்களால் தாமாகவே வெளியேற முடியாத நிலைமை உருவாகியது. அதன்படி, கடந்த புதன்கிழமை தான், மக்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.

இப்போது பலர் பாதுகாப்பாக இருக்கின்றனர். உணவுத் தட்டுப்பாடு பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இப்போது பலர் உறவினர்களின் வீடுகளிலும் பாடசாலை போன்ற இடங்களிலும் தான் தங்கியிருக்கின்றார்கள். நிவாரண வேலைகள் இன்னமும் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே ஓரிரு இடங்கள் தவிர்ந்த ஏனைய சகல இடங்களிலும் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு கிடைக்கிறது.

ஆனால், சில நாட்களில் இந்த உதவிகள் நின்றுவிடும். அப்போது, தமது வீடுகள் சேதமடைந்த ஏழைகள், உணவும் இல்லாமல் இருக்க வீடுகளும் இல்லாமல் தவிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்களுக்கு, வெள்ளம் வடிந்து சென்ற பின்னர் மீண்டும் சென்று தங்குவதற்கு ஓர் இடம் இருக்கிறது. ஆனால், மண்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள் திரும்பிப் போக இடமில்லை. அவர்களது வீடு மட்டுமன்றி, வீடிருந்த நிலமும் கூடக் காணாமற்போயுள்ளது. எனவே, அவர்களது நிலைமை மிகவும் கவலைக்குரியதும் பயங்கரமானதுமாகும். கொஸ்லாந்தை மக்கள் அதற்குச் சிறந்த உதாரணமாகும்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என்னவென்றால், பழைய இடங்களில் தொடர்ந்தும் வாழ்வதா என்பதே. அந்தப் பிரச்சினையை, 2004ஆம் ஆண்டு  சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்நோக்கினர். இன்னமும் எதிர்நோக்கியே இருக்கின்றனர். ஆனால், இப்போது அவர்கள், தாம் சுனாமியால் பாதிக்கப்பட்டதை மறந்து, அதே இடங்களில் வாழ்கின்றார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் அதனைத் தான் செய்யப்போகிறார்கள்.

அரசாங்கத்துக்கு, இந்த அபாயத்தை இல்லாதொழிக்க எவ்விதத் திட்டமும் இல்லை. அவ்வாறானதொரு திட்டத்தை அரசாங்கம் வகுக்குமா என்பதும் சந்தேகமே. ஓரிரு மாதங்கள் சென்றதன் பின்னர், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை மறந்ததைப் போல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களையும் மறந்துவிடக் கூடும். மீரியபெத்தை மக்கள் இப்போது மறக்கப்பட்டு விட்டார்கள்.

அனர்த்தங்களின் போது, அரசியல்வாதிகள், அந்த அனர்த்தத்திலும் தமக்கு அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது வழமை. அதேவேளை, உண்மையான மனிதாபிமானத்துடன் அல்லது தமது கடமை என நினைத்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அரசியல்வாதிகள் சென்றாலும் அதுவும் அரசியல் இலாபம் தேடும் முயற்சியாகவே பெரும்பாலும் கருதப்படுகிறது. அதேவேளை, அமைச்சர்களைப் போன்ற தேசிய மட்டத்திலான அரசியல்வாதிகளுக்கு, பாதிக்கப்பட்ட சகல இடங்களுக்கும் செல்லவும் முடியாது. ஆனால், செல்லாவிட்டாலும் குறைதான். எனவே, எந்த அரசியல்வாதி, அரசியலுக்காக நிவாரண வேலைகளில் ஈடுபடுகிறார். எவர், உண்மையான மனிதாபிமானத்துடன் வேலை செய்கிறார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் கஷ்டமான விடயமாகும்.

இம்முறை வெள்ளத்துக்குக் காரணம், சட்டவிரோதக் கட்டடங்களே என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார். கொழும்பிலிருந்து, களனி கங்கைக்கு மழை நீர் வடிந்து செல்வதற்கு, அந்தச் சட்டவிரோதக் கட்டடங்கள் காரணமாக இருக்கலாம் . ஆனால் ஆற்றிலிருந்து நீர் வெளியே வருவதற்கு அது எவ்வாறு காரணமாகலாம் என்பது தெளிவில்லாத விடயமாகும். வேறுபலர், வேறுபல காரணங்களை முன்வைக்கிறார்கள். இவற்றின் பின்னால் சில அரசியல் நோக்கங்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

அதேவேளை, வெள்ளம், மண்சரிவு மற்றும் வரட்சி ஆகியவற்றுக்கு அரசியலும் காரணமாக இருப்பதாக, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டொக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்க, தர்க்க ரீதியாக 'இதிரி மக' என்ற தமது நூலில் குறிப்பிட்டு இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், வர்த்தகப் பயிர்ச்செய்கைக்காக, மலையகத்தில் காடுகளை அழித்ததன் விளைவாக, வருடா வருடம் பெருமளவாக மலையகத்தில் மண் அரிப்பு ஏற்படுவதாகவும் அதனால், ஆறுகளின் ஆழம் குறைந்து வருவதாகவும் அதனால் வெள்ள அபாயம் ஏற்படுவதாகவும்; அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதேவேளை, காடுகள் இல்லாத காரணத்தால், மலையகத்தில் பெய்யும் மழையில் சிறிதளவு மட்டுமே நிலத்தினால் உறிஞ்சப்படும் என்றும் அவர் வாதிட்டார். காடுகள் இருந்தால், மழை நீரானது, மரங்களின் மீது வீழ்ந்து சிறிது சிறிதாகவே நிலத்தை அடையும் என்றும் அந்த நீர், இலைகளால் மூடப்பட்டுள்ள மண்ணை அரிக்காது, நிலத்தினால் உறிஞ்சிக் கொள்ளப்படும் என்றும் காடுகளில் மரங்களின் வேர்கள் ஒரு வலை போல் மண்ணைக் கட்டிக் காப்பதால் மண்சரிவு ஏற்படுவதில்லை என்றும் அவர் வாதிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியும், தமது அரசியல் வகுப்புக்களில் ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டு, மலையகத்தில் வேறு தொழில்களை ஆரம்பித்து, மலையக மக்களுக்கு தொழில் வழங்கி விட்டு, கடல் மட்டத்திலிருந்து 5,000 அடிக்கு மேல் மலையகத்தில் காடுகளை வளர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியது. 

அதேவேளை, ஈர வலயத்தில் வெள்ளத்தை ஏற்படுத்திக் கொண்டு ஓடும் களனி கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீரை, சுரங்கப்பாதைகள் மூலமாக வரண்ட பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதனால், ஈர வலயத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தையும் தவிர்த்து வரண்ட பகுதிகளில் வரட்சியினால் ஏற்படும் தாக்கத்தையும் குறைக்கலாம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி வாதிட்டது.

மகாவலி அபிவிருத்தித் திட்டமானது, வரண்ட பிரதேசத்தினூடாக ஓடும் ஓர் ஆற்றை, வரண்ட பிரதேசத்தின் மற்றொரு பகுதிக்கு திருப்பிய திட்டமாகும். ஆனால், களனி கங்கை அல்லது களு கங்கையை அந்தச் செலவில் திருப்பியிருந்தால், அது பலஅனர்த்தங்களைத் தடுத்திருக்கும்.

ஆனால், இவை இடதுசாரிகளின் வாதங்கள் என்பதால், ஆங்கில ஆட்சியாளர்களோ, அதன் பின்னர் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களோ அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள், மெகா திட்டங்கள் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரண்ட பிரதேசத்தின் ஊடாக ஓடும் மகாவலி கங்கையை வரண்ட பிரதேசத்திலேயே மற்றொரு பகுதிக்குத் திருப்பினார்கள். விமானங்கள் வராத விமான நிலையங்களையும் கப்பல் வராத துறைமுகங்களையும் நிர்மாணித்தனர். அவற்றையே அவர்கள் அபிவிருத்தி என்கிறார்கள்.

ஆனால், மக்கள், வருடா வருடம் வெள்ளம் என்றும் மண் சரிவென்றும் அனர்த்தங்களை சந்தித்து வருகிறார்கள். அனர்த்த நேரங்களில் நிவாரணம் வழங்கிவிட்டு, சில நாட்களில் அதனை மறந்து விடுகின்றனர். பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து, பரிகாரம் காண எவரும் முற்படுவதில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X