2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மனிதம் போ(தூ)ற்றும் மூடநம்பிக்கை

Menaka Mookandi   / 2016 மே 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

மழை, வெள்ளம், மண்சரிவு, இழப்பு, இடம்பெயர்வு என்று நாடே தற்போது அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இயற்கையின் சீற்றத்தினால் காவுகொள்ளப்பட்டவர்களின் துயர் துடைக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குக் கைகொடுக்கவும், உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலிருந்தும் உதவும் கரங்கள் படையெடுத்து, தத்தமது மனிதாபிமானத்தைப் பறைசாற்றி வருகின்றன. துன்பம் வரும்போது தான் உண்மையான நண்பனைக் கண்டுகொள்ள முடியும் என்பது பழமொழி. எம் நாட்டிலும் அனர்த்தமொன்று வந்ததால் தான் இனம், மதம், குலம், நாடு என்ற அனைத்து பேதங்களும் பின்தள்ளப்பட்டு, மனிதாபிமானம் எனும் நண்பன் மாத்திரம் தலையுயர்ந்து நிற்கின்றான். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, புண்ணியம் சேர்க்கும் ஒருசாரார் இருக்கின்ற அதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் இலாபத்தைத் தேடி, மனிதாபிமானத்தையும் மனிதத்துவத்தையும் குழிதோண்டிப் புதைத்து வருபவர்களும் கூடவே இருக்கத்தான் செய்கிறார்கள்.

காலையில் அலுவலகத்துக்கு வந்துகொண்டிருக்கும் போது ஒரு செய்தி கேள்விப்பட்டேன். இலங்கையில் பிரபல தளபாட நிறுவனமொன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 20 மெத்தைகளை எடுத்துக்கொண்டு, வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற பிரதேசமொன்றுக்குச் சென்றதாம். அங்கு சென்று, மெத்தை நிவாரணம் வழங்க முற்படும்போது, நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்படாத மக்களே கூடினார்களாம். பாதிக்கப்பட்டவர்களை ஒருபுறம் தள்ளிவிட்டு, அவர்களின் பெயர்களில் சுயலாபம் தேடவே இந்தக் கூட்டம் வந்துள்ளதென்பதை அறிந்த மேற்படி நிறுவனம், ஐந்து மெத்தைகளை மாத்திரம் வழங்கிவிட்டு, ஏனையவற்றை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டதாம். வைக்கோலுக்கு ஆசைப்படும் நாய், தானும் தின்னாமல், மாட்டையும் தின்னவிடாமல் செய்த வேலையாகவே இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. இவ்வாறாக, நாடு முழுவதிலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கோடிக்கணக்கான கரங்கள் நீளும்போது, அவற்றைத் தட்டிப்பறிக்கவென்றே ஒரு கூட்டமும் அலைந்துகொண்டு தான் இருக்கின்றது.

அனர்த்தத்தில் உருவெடுத்த மற்றும் உருக்குலைந்துபோன மனிதாபிமானம் ஒருபுறம் இருக்கையில், மற்றொரு புறத்தில் காமக்கொடூரர்களின் ஈவு இரக்கமற்ற செயலொன்று அரங்கேறியிருந்தது. அந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல், காமத்தின் உச்சகட்ட வெளிப்பாடு என்பதோடு, மூட நம்பிக்கைகளினதும் உச்சமென்றே கூறவேண்டும்.

கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட ஹசலக்க பிரதேசத்தில் வைத்து, 40 வயதுடைய ஆணொருவரை பொலிஸார் கைது செய்தனர். பல்வேறு பிரதேசங்களில் பல பெயர்களில் தோன்றியிருந்த இந்த நபர், ஹசலக்க பிரதேசத்தின் பிரபல மாந்திரிகர் ஒருவராகவே வேடமிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, குறித்த மாந்திரிகரின் அலுவலகத்துக்கு, 16 மற்றும் 13 வயதுடைய இரு மகள்களுடன் சென்ற ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேரகம, வேரகன்தொட்ட பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், மகள்களினது கல்வி நிலை மேலோங்க என்ன வழி என்று கேட்டுள்ளார்.

இதன்போது, அவ்விரு மகள்களினதும் பிறந்த நாள் மற்றும் பிறந்த நேரங்களைக் குறித்துக்கொண்ட மேற்படி மாந்திரிகர்;, அவ்விருவருக்கும் தோஷம் உள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்தால் கல்வி நிலை மேலோங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கேட்ட அப்பிள்ளைகளின் தந்தை, 'தோஷத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டுள்ளார். 'அதற்கு தோஷப் பரிகாரமொன்று செய்யப்படல் வேண்டும்' என்று அந்த மாந்திரிகர்; கூறியுள்ளார். 'இன்றே செய்ய முடிந்தால், அந்தப் பரிகாரத்தை செய்யுங்கள்' என்று தந்தை கூறியது மாத்திரம் தான், உடனே, தன்னைச் சுதாரித்துக்கொண்ட அந்த மாந்திரிகர், ஒரே தண்டில் காய்த்த மூன்று எழுமிச்சைகளையும், எளிதில் கண்டுபிடித்துக் கொண்டுவர இயலாத மேலும் சில பொருட்களினது பட்டியலொன்றையும் கொடுத்து, 'இவற்றை உடனடியாகப் போய் வாங்கி வந்தால், தோஷப் பரிகாரத்தை இன்றே செய்து முடிக்கலாம்' என்று கூறியுள்ளார்.

அத்துடன், அந்தப் பொருட்களை வாங்கிவரும் வரையில், பிள்ளைகள் இருவரதும் ஜாதகத்தை நன்றாகப் பரிசோதிக்கவுள்ளதாகவும் அதனால் அவர்களிருவரும் அலுவலகத்திலேயே இருக்கட்டும் என்றும் கூறியதைக் கேட்ட அவ்விரு சிறுமிகளினதும் தந்தை, பொருட்களை வாங்கி வரும் வரையில், மகள்கள் இருவரையும்; மாந்திரிகரது அலுவலகத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
அச்சிறுமிகளின் தந்தை வெளியேறி, ஓரிரு நிமிடங்களே கடந்திருக்கும், 16 வயதுடைய சிறுமியை மாத்திரம் அலுவலகத்துக்குள் அமைந்துள்ள தனியான அறையொன்றுக்குள் முதலில் அழைத்துச் சென்றுள்ள மேற்படி மாந்திரிகர், அச்சிறுமியை வன்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர், 13 வயதுடைய இரண்டாவது சிறுமியையும், அதேபோன்று உள்ளே தனியாக அழைத்துச் சென்றுள்ள அவர், அச்சிறுமியையும் வன்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இவ்வாறாக, அவ்விரு சிறுமிகளையும் பலமுறை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள அந்த காமக்கொடூர மாந்திரிகர்;, பின்னர் அவ்விருவரிடத்திலும் வாளொன்றைக் காண்பித்து, இவ்விடயத்தை எவரிடத்திலேனும் தெரிவித்தால், கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

நீண்ட நேரத்துக்குப் பின்னர், மாந்திரிகர்; கூறிய பொருட்களுடன் அலுவலகத்துக்கு வந்த தந்தை, அந்த மாந்திரிகர் செய்த தோஷப் பரிகாரங்களின் பின்னர், தன்னிரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். வீட்டுக்குச் சென்று ஓரிரு நாட்கள் கடந்த பின்னரே, தங்களுக்கு அந்த மாந்திரிகர் அலுவலகத்தில் நடந்த கொடூரங்களை, அவ்விரு சிறுமிகளும் தங்களது பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே, கடந்த 20ஆம் திகதியன்று, அந்த பெற்றோரினால், ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது. இதன் பிரகாரம், 40 வயது மதிக்கத்தக்க மேற்படி சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறாகவே, மேற்படி காமக்கொடூரனின் காம நாடகம் அரங்கேறியுள்ளது.

இது இலங்கையில் நடைபெற்ற முதலாவதும் இறுதியுமான சம்பவம் அல்ல. இதுபோன்ற பல சம்பவங்கள், மூடநம்பிக்கையின் பின்னால் திரிந்தவர்களை ஆட்கொண்டிருந்தது. பேய் பிடித்துள்ளதாகக்கூறி, பெண்களை அழைத்துச்சென்று வன்புனர்வுக்கு உட்படுத்ததல், நோய்களுக்கு நிவாரணி - ஜோதிடமும் பரிகாரமும் தான் என்று நம்பிச் சென்று அங்கு கொடுக்கும் உணவுகளையோ அல்லது பானங்களையோ அருந்தி உயிரிழத்தல், பேய் பிடித்துள்ளதென, இரக்கமற்ற முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு பேயோட்டுவதாகக் கூறி உயிர்களை பலியெடுத்தல் என அடுக்கிக்கொண்டேப் போகலாம். இதில், பெருமளவில் பாதிக்கப்படுவதும் பலியெடுக்கப்படுவதும் பெண்களே என்பது தான், விசேட அம்சமாகும்.

மூடநம்பிக்கை என்பது, பிறரையோ, சமூகத்தையோ அல்லது அதனை நம்புபவரையோ கெடுக்குமாயின், அந்த மூடநம்பிக்கை தொடர்பில் விழிப்புணர்வு கொண்டிருத்தல் அவசியமாகும். சில மூடநம்பிக்கைகள் அடிப்படையில் உண்மையற்று இருப்பினும், நம்பிக்கைகள் தருவதன் மூலம் நன்மைகளைத் தரக்கூடியன. சில மூடநம்பிக்கைகள் பொழுதுபோக்காக அமைகின்றன. எதிர்காலத்தைக் கூறுவதாகக் கூறும் ஜோதிடங்களும் மூடநம்பிக்கைகளே என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும், அவற்றின் பின்னால் திரிவதிலும், அவற்றினால் அனைத்தையும் இழந்து நிற்பதிலும் என்ன பயன் என்பது தொடர்பில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும் நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை. சூனியம், பேய்கள், தேவலோகம், நரகலோகம், ஜாதகம், பலியிடுதல், உரு ஏறி ஆடுதல், இறந்தவர்களுடன் கதைத்தல், கூடுவிட்டுக் கூடு பாய்தல், தாயம் கட்டுதல் எனப் பல விடயங்களை, இந்த மூடநம்பிக்கைப் பட்டியலுக்குள் சேர்க்கலாம். மூடநம்பிக்கைகள் உலகெங்கிலும் காணப்படுகின்றன. சில சமயங்களில் கலாசாரத்தின் சொத்தாகவும் அவை மதிக்கப்படுகின்றன. அல்லது வாழ்க்கைக்கு சுவையூட்டும் சுவாரஸ்யமான விடயங்களாகவும் கருதப்படுகின்றன. மூடநம்பிக்கைகளுக்கு, குணப்படுத்தல் மற்றும் மருந்துகளோடு நெருங்கிய தொடர்பு உண்டு எனலாம். காரணம், வளர்ந்துவரும் நாடுகளில் யானை விலைகொடுத்தேனும் மருந்துகள் வாங்குவது இன்று பெரும்பாலானோருக்குக் கட்டுப்படியாவதில்லை. ஆகவே அவர்கள், மூதாதையரின் பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் மூலமாகக் குணமடைய அல்லது நோய் வராமல் காக்க முயற்சி செய்கிறார்கள்.

நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளிர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கத்தில், மூடநம்பிக்கைகளும் மூடப் பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டிபோட்டு வளர்ச்சியடைந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் மனிதத்துவத்தோடு தொடர்புடைய மனிதாபிமானச் செயற்பாடுகளாக இருப்பின், சற்று ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறலாம். ஆனால், மனிதத்துவத்தைத் தோற்கடித்து, மனிதாபிமானத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிடும் இரக்கமற்ற மூடநம்பிக்கை தேவைதானா? ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். எனவே, மூட நம்பிக்கைகளைத் துறந்து, நம்பிக்கையே வாழ்க்கை என்று வாழ்வோமாக.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .