2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தலிபான் தலைவரின் மரணமும் எதிர்காலமும்

Thipaan   / 2016 மே 26 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களால் இலக்குவைக்கப்பட்ட தலிபான் ஆயுதக்குழுவின் தலைவர் முல்லா அக்தர் மன்சூர், அத்தாக்குதல்களின் விளைவாக உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட அவரின் மரணம், பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவாலும் உறுதிப்படுத்தப்பட்டது. அவரது மரணத்தை, தலிபானின் பேச்சாளரும் உறுதிப்படுத்தியதோடு, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கலந்துரையாடல்களின் ஈடுபட்டுவருவதாக, நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலின் முதலாவதும் முக்கியமானதுமான அம்சமாக, அது மேற்கொள்ளப்பட்ட இடம் அமைகிறது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும், பாகிஸ்தானின் நிலப்பரப்புக்குள்ளேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், அல்கொய்தா குழுவின் தலைவரான ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானுக்குள் வைத்தே கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டு எல்லைக்குள் வைத்துக் கொல்லப்படும், ஆயுதக்குழுவொன்றின் முக்கியமான தலைவர்களில் இரண்டாமவராக, மன்சூர் அமைவார்.

இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும், அமெரிக்காவால் அறிவிக்கப்பட்தென்பது, இதில் முக்கியமானது. குறிப்பாக, பாகிஸ்தானிய எல்லைக்குள் வைத்து இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அந்நாட்டுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென்பது, பொதுவான எதிர்பார்ப்பென்தோடு, சர்வதேசச் சட்டங்களின் படியும் ஒரு தேவையாகும். இந்நிலையில் தான், பாகிஸ்தானுக்கு அறிவிப்பதற்கு அமெரிக்காவின் தயக்கம், முக்கியமானதொன்றாக மாறுகிறது.

அமெரிக்காவும் பாகிஸ்தானும், மிக முக்கியமான நட்பு நாடுகள். அந்நாட்டில் நிலவும் பல்வேறான குறைபாடுகளுக்கு மத்தியிலும், ரஷ்யா அல்லது வடகொரியா போன்று, அந்நாட்டின் மீது அதிகளவிலான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளாமைக்கு, அந்நாட்டுடனான நட்புறவு முக்கியமானது. மத்திய ஆசிய, தெற்காசியப் பிராந்தியங்களில், அமெரிக்காவின் ஈடுபாட்டுக்கு, பாகிஸ்தானுடனான நட்பு, அந்நாட்டுக்கு முக்கியமானது. அதனால் தான், சீனாவுக்கு அடுத்ததாக, பாகிஸ்தானுக்கு அதிக ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடாகவும் அதேபோல், உயர்ந்த அளவிலான வெளிநாட்டு உதவிகளைச் செய்யும் நாடாகவும், அமெரிக்கா இருக்கிறது.

ஆனால், அல்கொய்தா, தலிபான், லஷ்கர் ஈ தொய்பா உள்ளிட்ட இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக அந்நாடு இருந்துவருகிறது என்ற குற்றச்சாட்டு, நீண்டகாலமாகவே இருந்துவந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானோ, அதைத் தொடர்ச்சியாக மறுத்து வந்தது. அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானுள் வைத்துக் கொல்லப்பட்ட பின்னரும் கூட, பாகிஸ்தானின் மறுப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. இதில் குறிப்பிடத்தக்கதாக, ஒசாமா பின் லேடனைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவுக்கு - தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ - உதவிய வைத்தியரொருவரை, பொய்க் குற்றச்சாட்டுகளில் சிறையிலடைத்துள்ளதாக, பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுக் காணப்படுகிறது.

இந்நிலையில் தான், தலிபான் தலைவர் பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டமை மாத்திரமன்று, அவர் பாகிஸ்தானிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணித்துள்ளார் என்ற தகவல், இவ்விடயத்தில் பாகிஸ்தானைக் காட்டிக் கொடுக்கும் ஒன்றாகவே இருந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விடயமாக, இங்கே தலிபான்கள் என வெறுமையாகக் குறிப்பிடப்படும் ஆப்கானிஸ்தான் தலிபான்களைத் தவிர, பாகிஸ்தானில் காணப்படும் தலிபான்கள், பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு, அந்நாட்டு மக்களுக்கு அழிவை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த முயல்வதாக பாகிஸ்தான் காட்டிக் கொண்டாலும், அவர்களைப் போன்ற இன்னொரு பிரிவின் தலைவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கக்கூடுமென்ற நிலை, பாகிஸ்தானின் கொள்கைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

இந்த விடயத்தை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தான் எடுத்துள்ள பாதையும், அதிக கேள்விகளையே எழுப்பி நிற்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயற்பாடெனத் தெரிவித்துள்ள அந்நாடு, தாக்குதலுக்கு முன்பதாகத் தமக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், சர்வதேசச் சட்ட விதிகளுக்கு இந்நடவடிக்கை முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் வாதத்திலும் தவறுகள் இல்லாமலில்லை. ஒரு நாட்டுக்குள் சாதாரணமாகத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டுப் போக முடியாது. ஆனால், பாகிஸ்தானின் நட்புநாடு தான் அமெரிக்கா என்பது தான் கேள்விகளை எழுப்புகிறது. தனது நட்பு நாட்டிடம் சொல்லாமல், அதுவும் ஜனாதிபதி ஒபாமாவினாலேயே நேரடியாக அங்கிகரிக்கப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வதற்குக் காரணம், பாகிஸ்தான் அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மையா என்ற கேள்வியே எழுகிறது. நட்பு நாடே, தனது இராணுவ விவகாரங்களில் நம்பாத அளவுக்கு, பாகிஸ்தானின் இரகசியச் செயற்பாடுகள் உள்ளனவா என்பதும் கேள்விக்குரியனவே. ஆகவே, இறையாண்மையை மீறும் செயற்பாடு என்று அந்நாடு தெரிவிக்கும் ஒவ்வொரு தடவையும், தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுவொன்றின் தலைவர், அதன் நாட்டுக்குள் இருந்தமையை அந்நாடு ஏற்றுக்கொள்வதாகக் கருத வேண்டும்.

இவ்வாறு பாகிஸ்தானின் பக்கம் ஒருபுறமிருக்க, இத்தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது முக்கியமானது. அதுவும், ஜனாதிபதி ஒபாமாவைப் பொறுத்தவரை, இது இன்னுமின்னும் முக்கியமானது. தனது எதிரணியினரான குடியரசுக் கட்சியினரால் 'பலவீனமானவர்' எனத் திரும்பத் திரும்ப அழைக்கப்படும் ஒபாமா, தனது பதவிக் காலத்தில் அழித்துள்ள இரண்டாவது முக்கியமான தலைவராவார். ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் மோசமான நிதிக்கொள்கை காரணமாகவும் தேவையற்ற போர்கள் காரணமாகவும் தேக்க நிலையை அடைந்த அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து படைகளைக் குறைத்து, தற்போது முக்கியமான தலைவர்களைக் கொன்று, மிகப்பெரிய அடைவுகளுடனேயே, அடுத்தாண்டு ஜனவரியில், தனது பதவியிலிருந்து ஒபாமா விலகவுள்ளார்.

புஷ்ஷின் காலத்தில், பாரியளவிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிக கவனஞ்செலுத்தப்பட்டிருந்த நிலையில், ஒபாமாவின் காலத்தில், உச்சநிலைத் தலைவர்கள் அதிகமாக இலக்குவைக்கப்பட்டிருந்தனர். ஒசாமா, மன்சூர் தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட குழுக்களின் சிரேஷ்ட தலைவர்களும், அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருந்தனர். இது, குறித்த குழுக்களின் அடிப்படைக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்கு அதிகம் உதவியாக அமையும்.

ஆனால், மன்சூர் கொல்லப்பட்டமை, தலிபான் குழுவுக்கு ஒரு வகையில் நன்மையாக அமையுமென்பது தான், இவ்விடயத்தில் சுவாரசியமானது அல்லது அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. முன்னரே குறிப்பிட்டது போல, தலைமையின் இழப்பென்பது, குழுக்களை நிலைகுலையச் செய்யும். அதுபோலத் தான், தலிபான்களின் ஸ்தாபகத் தலைவரான முல்லா ஓமர், தனக்கு ஏற்பட்ட இயற்கை உபாதைகள் காரணமாக இறந்ததாகக் கடந்தாண்டு உறுதிப்படுத்தப்பட்ட போது, தலிபான் குழுவிலும் குழப்பம் ஏற்பட்டது. புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட மன்சூரை ஏற்றுக் கொள்ளாத ஒரு பிரிவினர், தனித்துச் செயற்பட ஆரம்பித்தனர்.

தற்போது மன்சூர் கொல்லப்பட்டுள்ள நிலையில், புதிய தலைவரால் அப்பிரிவினரையும் ஒன்றிணைத்துச் செயற்படக்கூடியதாக இருப்பின், பலமிக்க ஒரு குழுவாக அக்குழு மாறும். அதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது தான், அடுத்த விடயம்.

தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர், ஹைபதுல்லா அகுன்ஸடா. இவர் ஒரு மௌலவி. முல்லா ஓமரின் காலத்தில் அவரது நிர்வாக உதவியாக இருந்து, பின்னர் மன்சூரின் காலத்தில், பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டவர். பாகிஸ்தானிலுள்ள மதரசாக்களில் அதிகளவிலான செல்வாக்கைக் கொண்டவரெனக் கருதப்படுபவர். அத்தோடு, அவர் மௌலவியாக இருப்பதன் காரணமாக, தலிபான்களின் கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கு, ‡பட்வாக்களை அள்ளி வீசியதில் புகழ்பெற்றவர்.

பிரதித் தலைவர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சிராஜுடின் ஹக்கானி. மற்றையவர் முல்லா மொஹமட் யாகூப். இதில் சிராஜுடின் ஹக்கானி, ஒரு கொரில்லா கொமாண்டர். தலிபான் குழுவில் மிக மோசமான ஆயுததாரிகளில் ஒருவராக - இல்லாவிடில் மிக மோசமானவராக - கருதப்படுபவர். தன் பெயரில் காணப்படும் ஆயுதப் பிரிவான 'ஹக்கானி வலையமைப்பை', தலிபான்களுடன் இணைத்துச் செயற்பட்டுவரும் ஒருவர். தமிழ்த் திரைப்பட வசனத்தில் சொல்வதானால், 'மோசமானவர்களிலேயே முக்கியமானவர்'. இவரது தலைக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள தொகை, 5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள். மன்சூரை விட ஆயுதப் போராட்டத்தில் அண்மைக்காலம் வரை மிகவும் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஒருவர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இவ்வாண்டு ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டு ஏறத்தாழ 40 பேர் உயிரிழந்து, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படுபவர். மற்றையவரான முல்லா மொஹமட் யாகூப், ஸ்தாபகத் தலைவரான முல்லா ஓமரின் மகன்.

புதிய தலைவர் நேற்றே நியமிக்கப்பட்ட நிலையில், அவரது கொள்கைகள், அடுத்தகட்டத் திட்டங்கள், நோக்கங்கள் பற்றிய தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. ஆனால், தலிபான்களின் தலைவரின் இந்த மரணமும் அதனைத் தொடர்ந்தான நியமனங்களும் அளித்துள்ள பதில்களை விட, எழுப்பியுள்ள கேள்விகள் அதிகமென்பது தான், இப்போதைக்குச் சொல்லக்கூடியதாக இருக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .