2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'40 பாடசாலைகளுக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை'

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மாகாணப் பாடசாலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டபோது, 40 பாடசாலைகளுக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை என மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தெரிவித்தார்.
 
கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்கு பாடசாலைகளின் பெயர்களை குறிப்பிட்டு ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இதன்போது,  அதிகஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
 
மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.  
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணம் முழுவதும்  ஆசிரியர் இடமாற்றம் இருந்துகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக வருடாந்த இடமாற்றம் இடம்பெறாமல் இருந்த வேளை இம்முறை எவ்வாறாவது இடமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்,; மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் முயற்சியின் பேரில் மூன்று வருடங்கள்; நிபந்தனை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் ஒரே வலயத்தில் பத்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
 
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பத்து வருடங்கள் கடமையாற்றிய 49 ஆசிரியர்களும் நிபந்தனையில் கடமையாற்றிய 20 ஆசிரியர்களுமாக 69 ஆசிரியர்கள் இந்த வலயத்திலிருந்து இடமாற்றப்பட்டார்கள். இவர்களுக்குப் பதிலீடாக ஏனைய வலயங்களிலிருந்து 52 ஆசிரியர்கள் தரப்பட்டுள்ளனர். இன்னும் 17 பேர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை வழங்கப்படவில்லை. இதற்கும் மேலதிகமாக எமது வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.
 
எதிர்காலத்தில் கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களையும் புதியதாக நியமனம் வழங்கப்படவுள்ள ஆசிரியர்களையும் பாடசாலைகளில் நியமிப்பதில் மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது வழங்கப்பட்ட இடமாற்றத்தில் ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்ற சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதால் பல ஆசிரியர்கள் மேல்முறையீட்டைச் செய்துவிட்டு மீண்டும் தங்களது அதே பாடசாலையில் தொடர்ந்து  கடமையாற்றுகிறார்கள்.
 
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா மற்றும் கந்தளாய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றபோதிலும் திருகோணமலை வலயத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளர், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மேற்கு வலயங்களில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றபோதிலும் மட்டக்களப்பு வலயத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக குவிந்துகொண்டிருக்கிறார்கள். அம்பாறை மாவட்டத்தில் திருகோவில் மற்றும் சம்மாந்துறை வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றபோதிலும் கல்முனை வலயத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர்.
 
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மாகாண பாடசாலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டபோது 40 பாடசாலைகளுக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை. விஞ்ஞான பட்டதாரிகள் அதிகஷ்ட பிரதேசங்களில் கடமையாற்ற முன்வரமாட்டார்கள் அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. பெண் ஆசிரியர்களும் பிரயாண கஷ்டம் காரணமாக அங்கு வரமாட்டார்கள் என்ற காரணத்தினால் இரண்டாம் கட்டமாக உயர்தர விஞ்ஞானத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவுசெய்யப்படாத குழுவினர் இங்கு உள்ளனர.; அவர்களுக்கு ஆசிரியர் பயிலுனர் நியமனம் வழங்கினால் அவர்கள் அந்த பதவினைத் தக்கவைத்துக்கொள்வார்கள் என்ற ஆலோசனையை நாங்கள் வழங்கியுள்ளோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X