2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் முதலீடுகளை செய்ய ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம்

Sudharshini   / 2016 மே 28 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஜப்பானின் பல முன்னணி நிறுவனங்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

ஜி -7  மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி    மைத்ரிபால சிறிசேன, ஜப்பானின் சில முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்குமிடையிலான ஒரு சந்திப்பு நேற்று (27) பிற்பகல் ஜப்பானின் நகோயா நகரில் இடம்பெற்றது.  இச்சந்திப்பின்போதே இதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இங்கு கருத்து தெரிவித்த அந்நிறுவனங்களின் தலைவர்கள், 'இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு தாம் மிகுந்த விருப்பத்துடன் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். ஜப்பான் நாட்டின் உற்பத்திகள் மீது இலங்கையர்கள் வைத்துள்ள நம்பிக்கை குறித்து தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட அவர்கள், நொரிடாக் நிறுவனம் இன்று இலங்கையில் அடைந்துள்ள கீர்த்தி குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அக்கீர்த்தி இலங்கையில் முதலிடுவதற்கு ஜப்பான் வர்த்தகர்களை பெரிதும் ஆர்வம் கொள்ளச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

ஜப்பானின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டயஸ்டி (Taisti) நிறுவனத்தின் தலைவர் டக்காசி யுமுன்ஜி (Takashi Yumunchi) இலங்கையின் பல்வேறு துறைகளில் முதலிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்ததோடு, அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணத்துறையிலும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தும் கருத்திட்டத்திற்கும் மணித்தியாலத்திற்கு 500 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் மொனோரேல் புகையிரத வசதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் விருப்பம் தெரிவித்தார்.

ஹிட்டாச்சி (Hitachi) நிறுவனத்தின் தலைவர் டொஷியாக் ஹிகஷிகரா (Toshiak Higashihara),  இலங்கைக்கு மொனோரேல் புகையிரத வசதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கருத்து தெரிவித்ததோடு, கொழும்பு மற்றும் கொழும்பைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு மொனோரேல் வசதியின் அவசியம் குறித்து தமது நிறுவனம் ஒரு ஆய்வை செய்துள்ளதாகவும் 75 கிலோ மீற்றர் மொனோரேல் வசதி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள், உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, வலுச்சக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும் முதலீடு செய்வதற்கு அந்நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. மேலும் புகையிரத மற்றும் பஸ் சேவைகளுக்காக இலத்திரணியல் அட்டைகளை அறிமுகப்படுத்தும் முறைமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் ஐய்ச்சி பிராந்தியத்தின் ஆளுநர் ஹிடாக்கி ஊனுராய் (Hidaaki Oonurai), ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய உதவிகள் குறித்து கலந்துரையாடினார். (ஜனாதிபதி:ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .