2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

4 வகையான அனர்த்தங்கள் குறித்து கடும் அபாயம்

Kanagaraj   / 2016 மே 30 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.

கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன.

மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சகல மாலைப்பாங்கான பகுதிகள், மாவட்டத்தினுள் வெட்டப்பட்ட நிலச்சாய்வுகள் மற்றும் வீதிகள், அத்துடன் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்னர் அடையாளப்படுத்தப்பட்ட மண்சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்கள் தொடர்பிலும் கவனஞ்செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்ட காட்மோரில், சனிக்கிழமை (28) காலை ஏற்பட்ட மண்சரிவினால், 45 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர்  இடம்பெயர்ந்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட மண்சரிவை அடுத்து, மேற்படி கும்பங்களை அங்கிருந்து வெளியேறும்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் பணித்திருந்தது. எனினும், அங்கிருந்து இம்மக்கள் இதுவரை
வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த 207 பேரும் தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, ஹந்தானை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, ஹந்தானை உடவலவத்த பகுதியிலிருந்து 80 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள், ஸ்ரீ வாணி தமிழ்ப் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, கண்டி அரசாங்க அதிபர் எம்.எம்.பி. ஹிட்டிசேகர தெரிவித்தார்.

இதேவேளை, இந்த மழைகாரணமாக மலையகத்துக்கான ரயில் பாதைகளில், ஹப்புத்தளை- தியத்தலாவை ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கும் இடையிலான பகுதியில், ரயில் தண்டவாளத்துக்கு கீழே மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கின்றது என்று, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் போதே, இந்த அனர்த்தம் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .