2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதலமைச்சரின் வசை பாடல்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமளி

Suganthini Ratnam   / 2016 மே 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், சம்பூர் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வைத்து கடந்த 22ஆம் திகதியன்று, கடற்படை அதிகாரியொருவரை திட்டி தீர்த்த சம்பவம், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து அக்கூட்டத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இணைத்தலைவர்களான எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் மற்றும் கதிர்காமத்தம்பி துரைரட்ணசிங்கம் ஆகியோரின் தலைமையில், திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

முன்னதாக எழுந்த அப்துல்லா மஹ்ரூப் எம்.பி,  மாவட்டத்தில் இன்னுமே நிலவுகின்ற காணிப்பிரச்சினை, மீள்குடியேற்றப்பிரச்சினை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார்.
அவரையடுத்து எழுந்த பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கடற்படை அதிகாரியை, கிழக்கு முதலமைச்சர் திட்டதீர்த்த விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபித்தார்.

இடைமறித்த அப்துல்லா மஹ்ரூப் எம்.பி,  இந்த விவகாரம், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகையால், அந்த விடயத்தை இவ்விடத்தில் பேசுவது உசித்தமானது அல்ல என்று சுட்டிக்காட்டினார். அவருக்கு ஆதரவாக, கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.ஆர். அன்வர் மற்றும் சட்டத்தரணி எம்.லாஹீர் ஆகியோரும் குரல்கொடுத்தனர்.

இதனால், கூட்டத்தில் பெரும் சலசலப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டது. சலசலப்புக்கு மத்தியில் கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்கு பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவுக்கு உரிமையுள்ளது என்றார்.

சட்டென எழுந்த அப்துல்லா மஹ்ரூப் எம்.பி, உங்களுக்கு பிரச்சினையை உருவாக்குவதுதான் வேளையென்று, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை பார்த்து கூறிவிட்டார்.  இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொதுமக்களிலிருந்து எழுந்த ஒருவர், இந்தவிவகாரம் தொடர்பில் இக்கூட்டத்தில் பேசுவது பொருத்தமானது அல்ல எனக்கூறியமர்ந்தார்.

அந்த அமளிதுமளிக்கு மத்தியில், கருத்துரைத்த எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், இந்தவிவகாரம் தொடர்பில் இவ்விடத்தில் பேசுவது உசித்தமானது அல்ல என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும். ஆகையால், இவ்விடத்தையே இத்தோடுவிட்டுவிடுவோம் என்று கூட்டத்தை நகர்த்திச்சென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .