2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஒரு திட்டு: உடைந்தது குட்டு

Thipaan   / 2016 மே 31 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயம், தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் ஊதிப்பெருப்பிக்கப்பட்டு, ஒரு சாதாரண படையதிகாரிக்கு எதிராக முதலமைச்சர் மேற்கொண்ட வாய்த்தர்க்கமானது, தேசிய பாதுகாப்பு விவகாரமாக விகாரமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தையொட்டி, அரசாங்க உயர்மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளைப் பார்த்தால், கிட்டத்தட்ட நாட்டில் தற்கொலைக்குண்டுத் தாக்குதலொன்று இடம்பெற்றதன் பின்னர் ஏற்படும் அதிர்வுகள் போலுள்ளன.

 - படையினர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் போகக்கூடாது என்று உத்தரவு.

 - கிழக்குக் கடற்படை அதிகாரியை இடமாற்றுவதற்கான உத்தரவு.

 - கிழக்கு முதலமைச்சர், நாட்டில் எந்த படை முகாம்களுக்கு போகக்கூடாது என்று மற்றோர் உத்தரவு.

 - இதுபோதாதென்று, கொழும்பில் இராணுவ அதிகாரிகளுடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதியுடன் இதுபற்றி பேசியுள்ளதாகவும் அவர் வந்தவுடன் இந்தச் சம்பவம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

இவ்வளவுக்கும் நடந்த சம்பவம், மேற்குறிப்பிட்டதுபோல, தன்னை மேடைக்கு வரவேண்டாம் என்று கூறிய கடற்படை அதிகாரியொருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் 'உனக்கு நெறிமுறைபற்றித் தெரியுமா முட்டாள்' என்று பேசிவிட்டார். அவ்வளவுதான்.

இந்தச் சம்பவத்துக்கு ஜடை பின்னிப் பூ வைத்து கரகமாடியுள்ள தென்னிலங்கைத் தரப்புகள், 'ஒரு யுத்தவெற்றி வீரனை, மாகாண முதலமைச்சர் அவமானப்படுத்திவிட்டார். இப்படியே நடந்துகொண்டிருந்தால், எங்கே போகிறது இந்த நாடு' என்ற கணக்கில் பிரசாரங்களைத் தொடங்க, இந்தச் சம்பவம் தொடர்பாக கிழக்கில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று நடைபெறுமளவுக்கு வீங்கிப்போயிருக்கிறது நிலமை.

அரசாங்கம், இந்த விவகாரத்தை பூதாகாரமாக்குவதன் பின்னணி என்ன, உண்மையிலேயே இந்தச் சம்பவம் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடியதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் உண்மைநிலை என்ன, என்பவற்றை ஆராய்வதுதான் இந்தப்பத்தி.

தமிழ் மக்களின் தீர்வு விவகாரத்தினை, போருக்குப் பின்னரும், தென்னிலங்கை அரசியல் சக்திகளின் துணைகொண்டு இழுத்தடித்துவரும் அரசாங்கத்தரப்பு, மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதா இல்லையா என்ற புள்ளியில் சில காலங்களாகத் தொக்கி நிற்பது யாவரும் அறிந்ததே.

இந்த மாதிரியான ஒருநிலையில், வடக்கு மாகாணத்துக்கான அதிகாரங்களை கோரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நிலைப்பாடு நீண்ட காலமாகவே அரசாங்கத்துக்குக் கடுஞ்சினத்தை உள்ளாக்கிவருகிறது. இப்போதும் அதுதான் நிலைமை.

மாகாணசபை என்பது மத்திய அரசாங்கத்துக்கு அடங்கிப்போகும் நிர்வாக அலகாக இருந்தால்போதும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்படும் மைத்திரி அரசாங்கம், விக்னேஸ்வரனுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதும் இந்த இழுபறி, சர்வதேச அளவில் தமிழ் மக்களின் இறுக்கமான நிலைப்பாடாக வெளிப்படுவதும் சம்பிரதாயமாகிவிட்டது. 'இல்லாததைக் கொடுப்பதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்வோம். முதலில் மாகாணசபைக்கு இருக்கும் உரிமைகளையாவது முழுமையாகக் கொடுங்கள்' என்கிறார் விக்னேஸ்வரன். 'எடுத்ததற்கெல்லாம் ஆளுனரின் அங்கிகாரம் பெற்று நிர்வாகம் நடத்தவேண்டுமென்றால், பிறகெதற்கு முதலமைச்சர் என்ற பதவி' என்பதும் விக்னேஸ்வரனின் கேள்வி.

இந்தத் தொடர்ச்சியான இழுபறிகள் முற்றி, கடைசியில் வடக்குக்கு புதிய ஆளுனரை நியமித்ததன் மூலம் 'மிகவும் நுட்பமான' தீர்வொன்றைக் கண்டுபிடித்தது மைத்திரி அரசாங்கம். இது, கிட்டத்தட்ட தலையிடிக்கு தலையணையை மாற்றிய கதைதான். இன்றுவரை இந்தக் கெடுபிடி முடிந்தபாடில்லை.

இவ்வாறான ஒருநிலையில்தான், கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோபம் கடந்த வாரம் பொதுவெளியில் வெடித்திருக்கிறது. ஏனெனில். அங்கேயும் இதுதான் நிலைமை.

இதனை, தனியொரு படையதிகாரிக்கு எதிராக முதலமைச்சர் கடிந்துகொண்ட சம்பவமாகப் பார்த்துவிடமுடியாது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனி நடைபெறப்போகும் எத்தனையோ குழப்பங்களின் குறியீடுதான் இந்தச் சம்பவம். முதலமைச்சர் என்பவர், எவ்வளவு தூரம் ஓர் அரசியல் பொம்மையாக நடத்தப்பட்டுவருகிறார் என்பதன் வெளிப்படையான எடுத்துக்காட்டு. ஆளுனரின் கையசைவுக்கு ஆடவேண்டிய பொம்மைதான் முதலமைச்சர் பதவி என்பதையும் இச்சம்பவம் வெளிப்படையாக போட்டுடைத்துள்ளது.

சம்பவத்தின் பின்னான நாடளாவிய அதிர்வுகளும் கடற்படையதிகாரிக்கு ஆதரவாக, பேரினவாத சக்திகளின் மத்தியிலிருந்து எழுப்பப்படும் கரவொலிகளும் தமிழர் வாழும் பிரதேசங்களின் மறைமுக மன்னர்கள் இராணுவத்தினராகத்தான் இருக்கவேண்டும் என்பதையும் தற்போது நடைமுறையில் அவர்களது ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறது.

தென்னிலங்கையில், பொதுமக்களாலும் அரச அதிகாரிகளாலும், சிங்கள பொலிஸாருக்கு எதிராக எத்தனையோ தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லையே.

மஹிந்த ஆட்சிக்காலத்தின்போது, பான் கீ மூனின் வருகைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,

பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முனைந்தார்கள். உடனடியாக அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆர்ப்பாட்டத்திலிருந்துகொண்டே தொலைபேசியில் அழைத்து விமல் வீரவங்ச முறையிட்டபோது, பொலிஸாரை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தார் கோட்டாபய. இதனை அடுத்து, அங்கு நின்ற பொலிஸ் அதிகாரியை ஆர்ப்பாட்டக்காரர்கள் புரட்டி எடுத்தார்களே?

அப்போதும், போர்முடிவடைந்த காலப்பகுதியில் சீருடை தரித்த படையினரெல்லாம் போர் வெற்றியாளர்களாகத்தானே வலம் வந்தார்கள், எங்கே போனது இந்த தேசப்பற்று?

நாட்டின் மானத்தையே ஏலம் போட்டு விற்றதுபோல, சில வாரங்களுக்கு முன்னர்,  நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குத்துச்சண்டையில் ஓர் உறுப்பினரை வைத்தியசாலையில் அனுமதிக்குமளவுக்கு சண்டை நடந்ததே, ரணிலுக்கு முன்னாலேயே கட்டிப்பிடித்து உருண்டார்களே. சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இந்தச் 'சாதனை' ஒளிபரப்பானதே, இது தொடர்பில் இதுவரை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது?

தற்போது நடைபெற்றிருப்பது சிறுபான்மையினப் பிரதேசத்தில் என்பதாலும் சம்பவத்தில் சம்பந்தப்பட்டது ஒரு சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்தான், அரசாங்கத்துக்கு இந்த அகோர கோபம்.

இந்த சம்பவத்தில்கூட, தான் இதுதொடர்பில் மன்னிப்புக்கேட்கத் தயார் என்றும் பாடசாலை மாணவர்களின் முன்பாக தான் அவ்வாறு நடந்துகொண்டது பிழை என்று உணர்வதாகவும் கூறும் கிழக்கு முதலமைச்சர், சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் முழுமையாக இந்த சம்பவத்தை விசாரணை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி நாடு திரும்பவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல குடிமக்களுக்கும் ஒரே நீதி, ஒரே நியாயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும் முப்பதாண்டு காலப் பகையுணர்ச்சிகளை மறந்து தம்மோடு இணைந்து நல்லிணக்கம் அடையவேண்டும் என்றும் மேடைக்கு மேடை கூட்டத்துக்கு கூட்டம் தமிழர்களுக்கு வகுப்பெடுக்கும் ரணில், கிழக்கு சம்பவத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறைதான் என்ன?

நாட்டின் படையதிகாரி ஒருவரை ஒரு மாகாண முதலமைச்சர் பேசியதற்காக ஒரே வாரத்தில் கொழும்பில் கூட்டம் கூடி நாட்டின் 'இன நல்லிணக்கத்துக்காக' பாடுபடும் ரணில்,

இந்த வேகத்தினை எப்போதாவது தமிழ் மக்கள் முன்வைக்கும் காணாமல்போனவர்களின் விவகாரத்தில் காட்டியிருப்பாரா?

ஆண்டுக்கணக்கில் சிறையிலிருந்து எத்தனையோ உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையில் காண்பித்திருப்பாரா?

போரினார் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து, உயிர்பிழைத்து தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்காக இராணுவத்தினரிடம் கேட்டு நிற்கும் குடிநிலங்களை விடுவிப்பதற்கு காண்பித்திருப்பாரா?

இதே கிழக்கு மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணையில் காண்பித்திருப்பாரா?

இவற்றை மக்கள் கேட்பதைவிட மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தைத் தட்டிக்கேட்பதுதான் இப்போதைக்கு உசிதமான வழிமுறையாக இருக்கும்.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்படவேண்டும். முன்னரே குறிப்பிட்டது போல, இது தனியொரு சம்பவம் அல்ல. தேசிய இனமொன்றின் அரசியல் இருப்புக்கும் அமைதி வாழ்வுக்கும் பேரினவாத சக்திகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். எஞ்சியிருக்கும் ஒரே ஆட்சி அதிகார அலகையும் தங்களது கைகளுக்குள் பத்திரப்படுத்துவதற்கு அத்திபாரம் இட்டுக்கொள்ளும் படிமுறையே வேறில்லை.

வடக்கிலே இன்னொரு பிரபாகரனும் கிழக்கிலே இன்னொரு அஷ்ரப்பும் தோற்றம் பெற்று, பெரும்பான்மை இனத்துக்கு விஸ்வரூபம் கொள்கின்றனர் என்ற விஷமப்பிரசாரத்தை உடைத்து, சாணக்கியத்துடன் காய்களை நகர்த்துவதற்கு ஒரே வழி, தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையே ஆகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .