2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அணித்தலைமைப் பதவி டோணியிடமிருந்து கோலிக்குச் செல்ல வேண்டும்: ஷாஸ்திரி

Shanmugan Murugavel   / 2016 மே 31 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான விராத் கோலிக்கு, இந்தியாவின் அனைத்து வகையான போட்டிகளின் தலைமைத்துவமும் செல்வதற்கான பொருத்தமான நேரம் இதுவெனத் தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் சகலதுறை வீரருமான ரவி ஷாஸ்திரி, இந்தியாவின் கிரிக்கெட்டினை முன்னிலைப்படுத்தி, இந்த முடிவு எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு இறுதியில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மகேந்திரசிங் டோணி ஓய்வுபெற்றமையையடுத்து, டெஸ்ட் போட்டிகளின் தலைமைத்துவம், விராத் கோலியிடம் சென்றது. இந்நிலையிலேயே, டோணி தலைமை வகிக்கும் ஏனைய வகைப் போட்டிகளின் தலைமைத்துவமும், கோலிக்குச்  செல்ல வேண்டுமென ஷாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளில் இந்தியா எங்கே செல்ல வேண்டுமெனப் பார்க்க வேண்டுமெனத் தெரிவித்த ஷாஸ்திரி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு பெரிய தொடர்கள் எவையுமில்லாத நிலையில், அதன் பின்னரே உலகக்கிண்ணம் வருவதாகவும் தெரிவித்தார். எனவே, சிந்தித்து, அணியொன்றைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த தருணம் இதுவே எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த 18 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளைப் பார்க்கும் போது, இந்திய அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெரிதளவில் பங்குபற்றாததோடு, டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்குமிடையிலான இடைவெளி, மிகப்பெரியது எனவும் ஷாஸ்திரி தெரிவித்தார். தேர்வாளராக தான் இருந்திருந்தால், விராத் கோலியைத் தலைவராக நியமிப்பது குறித்தே சிந்திப்பார் எனவும் கோலி தெரிவித்தார்.

இந்த முடிவு கடினமாக அமையுமென்பதை ஏற்றுக்கொண்ட ரவி ஷாஸ்திரி, இந்தியாவின் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தி, கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். தலைவராகக் கோலி நியமிக்கப்பட்டாலும், அணியின் வீரராக மகேந்திரசிங் டோணி தொடர்ந்தும் பங்களிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .