2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

துருக்கிக்குக் கடுப்பை ஏற்படுத்தும் ஜேர்மனியின் 'ஆர்மேனிய இனவழிப்பு' வாக்கெடுப்பு

Shanmugan Murugavel   / 2016 மே 31 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒட்டோமான் படைகளால் ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஓர் இனவழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமொன்றில், ஜேர்மனிய நாடாளுமன்றம், நாளை மறுதினம் வியாழக்கிழமை (02) வாக்களிக்கவுள்ளது. துருக்கியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

சிறுபான்மையினரான ஆர்மேனியர்களை, ஒட்டோமானிலுள்ள அவர்களின் பூர்வீக இடத்தில் வைத்து, ஒட்டோமான் அரசாங்கத்தால் கட்டமைப்புரீதியாகக் கொன்றொழித்தமை, ஆர்மேனிய இனவழிப்பு எனப்படுகிறது. ஏப்ரல் 24, 1915ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நடவடிக்கையில், 1.5 மில்லியன் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
ஒட்டோமான் பேரரசு, நடப்பு துருக்கியாக மாற்றம்பெற்ற நிலையில், குறித்த படுகொலைகளை, இனவழிப்பு என விளிப்பதை துருக்கி ஏற்றுக் கொள்வதில்லை.

இந்நிலையிலேயே '1915இலும் 1916இலும் ஆர்மேனியர்களினதும் ஏனைய கிறிஸ்தவ சிறுபான்மையினரதும் இனவழிப்பின் நினைவும் நினைவுகூர்தலும்" எனத் தலைப்பிடப்பட்ட இந்தத் தீர்மானம், ஆளுங்கூட்டணியாலும் எதிர்க்கட்சியினராலும் வரையப்பட்டது. இந்த வாக்கெடுப்புத் தொடர்பாக எச்சரித்த துருக்கி, 'துருக்கியுடனான உறவுகள் தொடர்பாக, ஜேர்மனி கவனத்துடன் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, நாளை மறுதினம் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பு, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இன்றுவரை, 29 நாடுகள், இந்தப் படுகொலைகளை இனவழிப்பு என உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X